இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜக்மோகன் டால்மியாவின் மறைவைத் தொடர்ந்து, புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான முயற்சிகள், அடுத்தடுத்த திருப்பங்களுடன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.
இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவரான என்.சீனிவாசன் தலைமையில் ஒரு அணியும், இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாகூர் தலைமையில் மற்றொரு அணியும் அதிகாரமிக்க இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் (பி.சி.சி.ஐ) பதவியை கைப்பற்ற வரிந்து கட்டி நிற்கின்றன.
என்.சீனிவாசன் தலைவர் போட்டியில் இல்லை என்றாலும் கிழக்கு மண்டலத்தை சேர்ந்த ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத் தலைவர் அமிதாப் சவுதிரியை தலைவர் பதவிக்கு முன்நிறுத்த விரும்புகிறார். இதற்காக சில தினங்களுக்கு முன்பு முன்னாள் தலைவரும், மும்பை கிரிக்கெட் சங்கத்தலைவருமான சரத்பவாரை சந்தித்து ஆதரவு கோரினார். கிரிக்கெட் களத்தில் சரத்பவாரும், என்.சீனிவாசனும் நீண்ட கால எதிரிகள். எதிரெதிர் துருவங்கள் திடீரென சந்தித்தது பலரது புருவங்களையும் உயர வைத்தன.
ஒரு வேளை, சரத்பவாரே தலைவர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் அதற்கும் ஆதரவு கரம் நீட்டுவதாக என்.சீனிவாசன் அவரிடம் வாக்குறுதி அளித்துள்ளாராம்.
மறுபுறம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குள் மீண்டும் என்.சீனிவாசனின் ஆதிக்கம் வந்து விடக்கூடாது என்பதில் எதிர்தரப்பு கங்கணம் கட்டி காய்களை நகர்த்திக்கொண்டிருக்கிறது. சரத்பவார் அணியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுடன் இவர்களும் தனியாக பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
இந்த பரபரப்பான சூழலில் அனுராக் தாகூர், இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் ஷசாங் மனோகர், முன்னாள் பொருளாளர் அஜய் ஷிர்கே ஆகியோர் நேற்று முன்தினம் இரவு மத்திய மந்திரி அருண் ஜெட்லியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கிரிக்கெட் வாரிய நிலைமைகள் குறித்து நீண்ட நேரம்விரிவாக விவாதித்தனர். மேலும் கிரிக்கெட் வாரிய முன்னணி நிர்வாகிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டனர்.
அருண் ஜெட்லி, இந்திய கிரிக்கெட் வாரியத்தில் முக்கிய சக்தியாக விளங்குகிறார். ஷசாங் மனோகர், அஜய் ஷிர்கே இருவரும் என். சீனிவாசனுக்கு எதிரானவர்கள். ஐ.பி.எல். சூதாட்ட பிரச்சினை எழுந்த போது என்.சீனிவாசனை நீக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கிதான் ஷிர்கே தனது பதவியை துறந்தார். ஷசாங் மனோகரும், என்.சீனிவாசனுடன் ஒரு போதும் சேரமாட்டேன் என்று கூறி வருபவர். இப்போது இவர்கள் அனைவரும் என்.சீனிவாசனுக்கு எதிராக ஒரே அணியில் கைக்கோர்த்துள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது, ‘என்.சீனிவாசனிடம் இருந்து ஒதுங்கி இருக்கும்படி சரத்பவாரை அறிவுறுத்துங்கள்’ என்று ஷசாங் மனோகர் மற்றும் ஷிர்கேவிடம் அருண் ஜெட்லி வலியுறுத்தியதாக தெரிகிறது.
அனுராக் தாகூர் அணியை பொறுத்தவரை பி.சி.சி.ஐ புதிய தலைவர் யார்? என்பது ஏறக்குறைய முடிவாகி விட்டது. ஷசாங் மனோகரை இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்கு ஒருமனதாக நிறுத்த வேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மராட்டியத்தை சேர்ந்த வழக்கறிஞரான 57 வயதான ஷசாங் மனோகர், முதலில் தலைவர் பதவி வேண்டாம், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். பிறகு சமாதானப்படுத்தியதால், சம்மதித்து விட்டாராம்.
இதனால் ஷசாங் மனோகர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட பிரகாசமான வாய்ப்பு உருவாகி இருக்கிறது.
ஓரிரு நாட்களில் பி.சி.சி.ஐ தலைவர் பதவியை பிடிப்பதில் நீடிக்கும் இழுபறி நிலைக்கு ஒரு விடை கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.