தான் எவருடனும் இணைந்து செயற்படத் தயார் என்றும் ஆனால் தனது அமைச்சில் திருட்டுகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் துறைமுக மற்றும் கப்பல் சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கண்டி ஶ்ரீ தலதாமாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
துறைமுக மற்றும் கப்பல் சேவைகள் பிரதி அமைச்சராக நிஷாந்த முத்துஹெட்டிகம நியமிக்கப்பட்டமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அர்ஜுன, தனக்கு எவருடனும் இணைந்து செயற்பட முடியும் என்றும் ஆனால் அமைச்சுக்குள் திருட்டுகளுக்கு இடமளிக்க முடியாது என்றும் அதற்கு பிரதி அமைச்சரின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
அரசாங்கத்தின் அமைச்சரவை குறைந்திருக்க வேண்டும் என்பது தனது தனிப்பட்ட கருத்து என்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கியமை குறித்து திருப்தி இல்லை என்றும் அவர் கூறினார்.
எனினும் ஜனாதிபதியும் பிரதமரும் அனுபவம்வாய்ந்த இரண்டு தலைவர்கள் என்பதால் எதிர்காலத் திட்டத்துடனும் நாட்டை முன்னிலையாகக் கொண்டும் தீர்மானங்கள் எடுப்பர் என்று அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
இலங்கை அரசியலில் ஆசன மாற்றம் அன்றி கொள்கை மாற்றமே தேவைப்படுவதாகத் தெரிவித்த அவர், நாட்டின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் திட்டங்கள் இன்றி அமைக்கப்பட்டதால் நட்டத்தை எதிர்கொண்டதாகவும் ஆனால் புதிய அரசாங்கத்தின் கீழ் முதலீட்டாளர்கள் வருகை தந்துள்ளதாகவும் கப்பல் கட்டும் நிறுவனம் ஒன்றுடன் விரைவில் உடன்படிக்கை செய்துகொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் அரஜுன ரணதுங்க குறிப்பிட்டார்.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய நபர்கள் கடந்த தேர்தலில் தோல்வியடைய மஹிந்த ராஜபக்ஷவே காரணம் என்றும் தலைவர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டுக் கட்சித் தலைவர்களுடன் இணைந்து மஹிந்த ராஜபக்ஷ சிரமம் கொடுத்ததாகவும் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.