பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுடீன், கடுமையாகத் தாக்கப்பட்டு, குற்றுயிரான நிலையில் தீவிபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக புதிய மரண பரிசோதனை அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
கொழும்பு முன்னாள் சட்டமருத்துவ அதிகாரி ஆனந்த சமரசேகர வசீம் தாஜுடீன் மரணம் தொடர்பான தனது இறுதி மரணப் பரிசோதனை அறிக்கையை இன்று (10) நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
அதில் காணப்படும் தகவல்களின்படி ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுடீனின் மரணத்துக்கு முக்கிய காரணங்களாக மூர்ச்சையுற்றிருந்த நிலை, உடல் உறுப்புகள் செயலிழந்து போனமை, தீவிபத்தில் ஏற்பட்ட காபன் மோனோக்சைட வாயுவை சுவாசித்தமை என்பனவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கையின் பிரகாரம் கார் தீப்பற்றத் தொடங்கிய வேளையில் வசீம் தாஜுடீன் உயிருடனேயே இருந்துள்ளார். எனினும் தலையில் ஏற்பட்டிருந்த கடுமையான காயம் காரணமாக அவர் குற்றுயிரான நிலையில் இருந்திருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இன்றைய பிரேத பரிசோதனை அறிக்கை குற்றவாளிகளை தப்புவிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக சட்ட நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஏனெனில் கார் தீ பற்றத் தொடங்கிய வேளையில் தாஜுடீன் காரிலிருந்து தப்பிக்க முயன்றுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான தடயம் ஏதுமற்ற நிலையில் விசாரணைகளை திசை திருப்பும் நோக்கில் பிரேத பரிசோதனை அறிக்கைக்குள் உள்ளடங்காத குறித்த விடயம் வேண்டுமென்றே உள்வாங்கப்பட்டுள்ளது.
அத்துடன் வசீம் தாஜுடீன் கடுமையான குடிபோதையில் இருந்துள்ளதாகவும், அதன் காரணமாகவும் அவர் மயக்க நிலையில் இருந்திருக்கலாம் என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் அனுமானம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொலையாளிகளாக குற்றம் சாட்டப்படும் மஹிந்த குடும்பத்தின் ஆட்சியின் போது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் கூட தாஜுடீனின் சுவாசப் பையினுள் காபன் மோனோக்சைட் நச்சு வாயு சுவாசிக்கப்பட்ட தடயம் இல்லை என்று கூறப்பட்டிருந்த நிலையில், புதிய பிரேத பரிசோதனை அறிக்கையில் அவ்வாறு தடயம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இவை எல்லாவற்றையும் விட தாஜுடீனின் உடலில் காணப்பட்ட கடுமையான காயங்கள் அவரது மரணத்துக்கு காரணமாக அமைந்திருக்கவில்லை என்றும் கார் தீப்பற்றும் வேளையில் அவர் உயிருடன் இருந்துள்ளதாகவும் தெரிவித்து, கொலையாளிகளை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளதாக சட்ட நிபுணர்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.