அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப் பட்டியலில் எழுந்துள்ள தீப்பொறிகள் !

 

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

 

இம் முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு ஐ.தே.க ஒரு தேசியப் பட்டியலினை வழங்கியுள்ளது.ஒரு பேரினக் கட்சியிடம் இருந்து ஒரு கட்சி ஒப்பந்த அடிப்படையில் தேசியப்பட்டியலினைப் பெற்றுக் கொள்வதானது அக் கட்சியின் மக்கள் செல்வாக்கினை அளவிட பயன்படும் ஒரு அளவு கோலாகும்.இம் முறை அ.இ.ம.காவிற்கு ஒரு தேசியப்பட்டியல் கிடைத்துள்ளதானது அ.இ.ம.கா தனது செல்வாக்கினைக் கொண்டு பேரினக் கட்சிகளிடம் பேரம் பேசும் நிலைக்கு வந்து விட்டதனை தெளிவாக எடுத்துக்  காட்டுகிறது.

ந்ஜ்ன்லக்ல்ம்

கடந்த ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பினைத் தொடர்ந்து மஹிந்த ராஜ பக்ஸ முஸ்லிம்களின் ஆதரவினை அமைச்சர் றிஷாத்தினூடாக தக்க வைத்துக் கொள்ள அஸ்வரினை இராஜினாமா செய்ய வைத்து அ.இ.ம.காவினைச் சேர்ந்த அமீர் அலிக்கு தேசியப்பட்டியல் வழங்கபட்டிருந்தது.இதுவே அ.இ.ம.காவிற்கு கிடைத்த முதற் தேசியப்பட்டியலாகும்.

 

அவ்வாறு கிடைக்கப்பெற்ற  தேசியப்பட்டியலின் மூலம் பாராளுமன்றம் சென்றாலும் அது எண்ணக் கூடிய மிகக் குறுகிய காலப்பகுதிக்கே எனும் விடயம் தெளிவாக விளங்கியதனாலும்,அத் தேசியப்பட்டியலானது அமீர் அலியினை மாகாண சபை பதவிகளில் புறக்கணித்தமைக்கு என்பதனாலும் அத் தேசியப்பட்டியல் வழங்கும் போது யாருக்கு வழங்குவது? என்பதில் பிரச்சனைகள் தோற்றம் பெறவில்லை.

 

இம் முறை அ.இ.ம.காவிற்கு இரண்டு தேசியப்பட்டியல் கிடைக்கும் என அ.இ.ம.கா பல இடங்களில் கூறி வந்தது.இவ்வாறு கிடைக்கப்பெறும் இரு  தேசியப்பட்டியலினூடாக செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீத்,மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் ஆகியோர் பாராளுமன்றம் செல்வர் என அமைச்சர் றிஷாத் பகிரங்கமாகவே அம்பாறை மாவட்ட பிரச்சார மேடைகளில் வாக்குறுதி அளித்திருந்தார்.இவர்கள் இருவரும் நிச்சயிக்கப்பட்ட தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் என்றே பிரச்சார மேடைகளில் வர்ணிக்கப்பட்டார்கள்.

 

இவ்வாறான நிலையில் அ.இ.ம.காவின் நினைத்த இலக்கினை எட்ட முடியாத காரணத்தினால் ஒரே ஒரு தேசியப்பட்டியலே ஐ.தே.கவினால் வழங்கப்பட்டது.அமைச்சர் ஹக்கீம் ஐ.தே.காவின் ஆசனத்தினை குறைக்கும் வண்ணம் செயற்படும் அ.இ.ம.காவிற்கு தேசியப்பட்டியலினை ஐ.தே.க வழங்காது என உறுதிபட தேர்தல் பிரச்சார மேடைகளில் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

கிடைக்கப்பெற்ற ஒரே ஒரு தேசியப்பட்டியலினை அ.இ.ம.கா தலைமை மாகாண சபை உறுப்பினர் ஜெமீலிற்கு வழங்கப் போகிறதா? அல்லது வை.எல்.எஸ் ஹமீத்திற்கு வழங்கப் போகிறதா? என்ற வாதப் பிரதி வாதங்கள் அம்பாறை மாவட்ட அ.இ.ம.கா ஆதரவாளர்களிடையே சூடு  கொண்டிருந்த சமயம் யாருமே எதிர் பார்த்திராதளவு புத்தளம் நவவிக்கு வழங்கப்பட்டிருந்தது.

 

புத்தளம் நவவிக்கு ஏன் வழங்கப்பட்டது..??

 

04-09-2015ம் திகதி நேத்ரா அலைவரிசையில் இடம்பெற்ற வெளிச்சம் நிகழ்வில் இது பற்றி கருத்துத் தெரிவித்த அமைச்சர் றிஷாத் விடுதலைப் புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களினை அரவணைத்ததற்கு நன்றி கூறும் முகமாகவே இவ் தேசியப் பட்டியலினை புத்தளத்திற்கு வழங்கியதாக பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தார்.வாக்குறுதியா? நன்றி செலுத்துவா? முக்கியம் எனும் வரும் போது இவ்வாறான நன்றி எப்போதும் செலுத்திக் கொள்ளலாம்.

 

ஆனால்,வாக்குறுதியோ இந்த சந்தர்ப்பத்தில் மாத்திரமே நிறைவேற்ற முடியும்.ஒரு முஸ்லிமிற்கு வாக்குறுதி மிக முக்கியம் என்பதை அமைச்சர் றிஷாத் நன்கு அறிவார் என்று நினைக்கிறேன்.அமைச்சர் றிஷாத் பெற்ற நான்கு ஆசனங்களினாலேயே இத் தேசியப் பட்டியல் அ.இ.ம.காவிற்கு கிடைத்தது.இவ்வாறு பார்க்கும் போது அவ்வாறு பெற்ற தேசியப்பட்டியலினை  நன்றிக் கடனாக புத்தளத்திற்கு வழங்குவது ஊரா கோழிய அறுத்து உம்மாட பேரில் கத்தம் ஓதுவது போன்றாகும்.

 

தற்போது உதயமாகியுள்ள பாராளுமன்றத்தின் முதன் நாளே தொகுதி வாரித் தேர்தல் முறை பாராளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட வேண்டும் என கதைகள் எழுப்பப்பட்டிருந்தது.தனது உறுப்புருமையினைப் பாதுகாத்துக் கொள்ள அமைச்சர் றிஷாத் இத் தேர்தல் முறைமைக்கும் தன்னை தயார்படுத்தி வைப்பதே அறிவுடமையாகும்.அமைச்சர் றிஷாத்தினால் வன்னியில் வெற்றி பெற முடியாது என்பது வெளிப்படையானது.தனது உறுப்புருமையினை தக்க வைத்துக் கொள்ள ஒரு இடத்தினை தனது அரசியல் அதிகாரத்தினால் பலப்படுத்த வேண்டும்.இதற்கான அடித்தளமா? என்றும் புத்தளத்திற்கான தேசியப் பட்டியல் வழங்குகையினைப் பார்க்கலாம்.

 

மாகாண சபை உறுப்பினர் ஜெமீலிற்கு,செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீத்திற்கு தேசியப் பட்டியல் வழங்க வேண்டுமா..??

 

அ.இ.ம.காவின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீத் கட்சியின் புத்தி சாதூரியமான நகர்வுகளுக்கு மிகவும் அத்தியாவசியமானவர்.அமைச்சர் றிஷாத்துடன் அன்று தொடக்கம் இன்று வரை இணைந்து செயற்படுபவர் போன்ற பல சிறப்புகள் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீத்திற்கு உண்டு.

 

மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் அ.இ.ம.காவின் பக்கம் திரும்பியதன் காரணமாக அவரது மாகாண உறுப்புருமை இழக்கப்படும் நிலையில் உள்ளது. மாகாண சபை உறுப்பினர் ஜெமீலின் வருகையே அ.இ.ம.காவிற்கு அம்பாறையில் சிறந்த அடித்தளத்தினை வழங்கி இருந்தது.

 

இவர்கள் இருவரும் கவனிக்கப்பட வேண்டிய நிலையில் இருப்பதனை மறுப்பதற்கில்லை.எனினும்,பத்து வருட காலமாக மஹிந்த ஆட்சிக் காலத்தில் மிகவும் கவனிக்கப்பட்ட ஒரு கட்சியின் செயலாளராக இருந்த வை.எல்.எஸ் ஹமீத்தின் சொந்த ஊரான கல்முனையில் அ.இ.ம.காவின் ஒரு பிரச்சாரக் கூட்டத்தினைக் கூட தடையின்றி நடாத்த இயலாத மக்கள் செல்வாக்கற்றவராக உள்ளார்.மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் இத் தேர்தலிற்காக மிகவும் சிரத்தை எடுத்து உழைத்த போதும் அவரின் ஊரிலிருந்து அவரினால் குறிப்பிட்டு கூறுமளவு வாக்கினை எடுக்கமுடியவில்லை.

 

கல்முனைத் தொகுதியில் அ.இ.ம.காவின் செயலாளர் வை.எல்.எஸ் ஹமீத்,மாகாண சபை உறுப்பினர் ஜெமீல்,முன்னாள் கல்முனை முதல்வர் சிராஸ் போன்ற  பலமிக்க அரசியல் அந்தஸ்துடையவர்கள் இருந்தும் சம்மாந்துறைத் தொகுதியில் தனித்து நின்று அரசியலில் இம் முறை பூச்சியத்திலிருந்து ராஜ்ஜியம் அமைக்க புறப்பட்ட முன்னாள் தென் கிழக்கு பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி இஸ்மாயில் அ.இ.ம.காவிற்கு பெற்றுக் கொடுத்த வாக்கினைக் கூட இவர்களால் பெற்றுக் கொடுக்க முடியவில்லை.இதன் படி பார்க்கும் போது அம்பாறைக்கு அ.இ.ம.கா தேசியப் பட்டியல் வழங்குவதானால் அது முன்னாள் தென் கிழக்கு பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி இஸ்மாயிலிற்கு வழங்குவதே பொருத்தமானது எனலாம்.

 

தற்போது அம்பாறையில் மு.கா மூன்று தொகுதிகளிலும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள்,ஐந்து மாகாண சபைகள் உறுப்பினர்கள் என ஒரு உறுதியான நிலையில் உள்ளது.அமைச்சுக்கள்,தேசியப் பட்டியல் வழங்கி இன்னும் இன்னும் பலப்படுத்தும் எனவும் நம்பப்படுகிறது.இவர்களினை எதிர்த்து அம்பாறையில் அ.இ.ம.கா அரசியல் நடை போட வேண்டுமாக இருந்தால் ஒரு உறுதியான பதவி வேண்டும்.இல்லாவிட்டால் மு.காவில் இருந்து பிரிந்து வந்தவர்கள் தங்களது தேவைகளினை நிறைவு செய்து கொள்ள தங்களது பழைய உறவினைப் புதுப்பித்துக் கொண்டு மு.கா உறுப்பினர்களிடம் சென்று விடுவார்கள்.

 

அமைச்சர் றிஷாத் அம்பாறைக்கு தேசியப் பட்டியலினைத் தருவேன் எனக் கூறி ஏமாற்றியதால் அம்பாறையில் அ.இ.ம.காவிற்கு ஆதரவளித்த ஆதரவாளர்கள் விரக்தியுற்ற நிலையில் உள்ளனர்.அமைச்சர் றிஷாத்தின் இத் தேசியப்பட்டியல் வழங்குகையானது அம்பாறையில் அ.இ.ம.கா இத் தேர்தலில் பெற்ற வாக்கினை தக்க வைப்பதனை சவாலிற்குட்படுத்துகிறது.இதனால் அமைச்சர் றிஷாத்திற்கு பிரச்சனை இல்லை.அவரின் பின் அரசியல் செய்யச் சென்ற ஜெமீல்,சிராஸ்,இஸ்மாயில் போன்ற முக்கிய புள்ளிகளின் அரசியல் வாழ்வு தான் கேள்விக்குட்படுகிறது.

 

அம்பாறைக்கு தேசியப்பட்டியல் வழங்கினால்..??

 

நன்றிக் கடனுக்காகவே தேசியப் பட்டியலினை வழங்கினேன் என நியாயம் கூறியவர் தனக்கு இரு தேசியப் பட்டியல் கிடைத்தும் அம்பாறைக்கு தன் வாக்குறுதியின் படி இரண்டு தேசியப் பட்டியளினையும் வழங்கி இருப்பாரா? என்பதை மக்கள் ஒரு கணம் சிந்தித்துக் கொள்ளட்டும்.அ.இ.ம.காவிற்கு ஒரு தேசியப் பட்டியல் மாத்திரமே கிடைத்தது.அதனை வை.எல்.எஸ் ஹமீதிற்கு வழங்கினால் கட்சியினை வளர்க்க முடியாது என்பது வெளிப்படையான உண்மை.

 

10 வருட காலமாக அ.இ.ம.காவின் செயலாளராக உள்ளவர் தனது ஊரில் ஒரு பிரச்சாரக் கூட்டத்தினைக் கூட தடை இன்றி நடாத்த சக்தி பெறவில்லை என்ற விடயம் இதனை தெளிவாக சுட்டிக் காட்டுகிறது.எனினும்,தனது வாக்குதியினை நிறைவேற்றியதால் அம்பாறை மக்களிடம் தன் நன் மதிப்பினை தக்க வைத்துக் கொண்டிருக்கலாம்.

 

தனது கட்சியினை அம்பாறையில் வளர்க்க முடிவு செய்தால் ஜெமீல்.கலாநிதி இஸ்மாயில் ஆகிய இருவரில் ஒருவரிற்கு வழங்குவதே பொருத்தம் எனலாம்.வை.எல்.எஸ் ஹமீதினைப் புறக்கணித்து அவரது தொகுதியில்,மாவட்டத்தில் உள்ள இவர்களிற்கு வழங்கினால் தன்னை வெளிப்படையாகவே தனது கட்சி புறக்கணிக்கின்றது என அச் செயலினை எக் காரணம் கொண்டும் வை.எல்.எஸ் ஹமீத் ஏற்க மாட்டார்.

 

இத் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் அம்பாறை மாவட்டத்தில் வை.எல்.எஸ் ஹமீதின் செயற்பாடுகளின் மீது அ.இ.ம.கா ஆதரவாளர்களிடையே சற்று அதிருப்தி நிலவுகிறது.இதன் காரணமாக வை.எல்.எஸ் ஹமீதிற்கு தேசியப் பட்டியல் வழங்கப்படும் போது அதனை களத்தில் நின்று போராடிய அ.இ.ம.கா ஆதரவாளர்கள்,மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் ஆகியோர் ஏற்றுக் கொள்வார்களா? என்பதும் இங்கே எழுகின்ற வினா.

 

இப் பிரச்சினைகளினை அ.இ.ம.கா திறம்பட எதிர்கொள்ள அத் தேசியப்பட்டியலினை அம்பாறை மாவட்டம் தவிர்ந்து இன்னுமொரு மாவட்டத்திற்கு வழங்குவது ஓரளவு பிரச்சனைகளினை தீர்க்கும் என்ற கணக்கினை அ.இ.ம.காவின் தலைவர் அமைச்சர் றிஷாத் போட்டிருக்கலாம்.எனினும் ஒரு தேசியப் பட்டியலினை வழங்கும் முடிவில் தன் செயலாளரினையே அ.இ.ம.கா இழந்துள்ளது.ஒரு குறித்த தீர்மானத்தில் என்பது ஒரு தலைத்துவத்தின் சிரமத்தினை அமைச்சர் றிஷாத் அனுபவிக்க ஆரம்பித்துள்ளார். 

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாத் 04-09-2015 ம் திகதி நேத்ரா அலைவரிசையில் இடம்பெற்ற வெளிச்சம் நிகழ்வில் இது பற்றி கருத்துத் தெரிவித்த போது “அம்பாறையில் அ.இ,ம,கா ஒரு ஆசனம் பெற்றிருந்தால் தங்கள் கட்சிக்கு  ஒரு தேசியப்பட்டியல் அதிகரித்திருக்கும்.அதனை வழங்கி அம்பாறைக்கு வழங்கி இருக்கலாம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.இருவரினையும் பாராளுமன்றம் அழைத்துச் செல்வேன் எனக் கூறியவர் இவ்வாறு கூறுவதனை முதலில் ஏற்க முடியாது.

 

இரண்டு தேசியப் பட்டியல் கிடைத்தல் தான் அம்பாறைக்கு தேசியப் பட்டியல் என்றால் அதனை அமைச்சர் றிஷாத் தேர்தல் காலப்பகுதியில் கூறி இருக்கலாமே? இம் முறை புத்தளத்திற்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை உறுதி செய்வதில் அமைச்சர் றிஷாத் உறுதி பூண்டிருந்தால் தனது தேசியப் பட்டியல் பேச்சின் போது புத்தளக் கதையினை சற்றேனும்  உள்ளடக்கி இருக்கலாமே? புத்தளக் கதை சற்றேனும் உள்ளடக்காது சடுதியாக உள்ளடக்கியது வேறு சில சவாலினை எதிர் கொள்ளவா? என்ற வினாவினை மேலும் வலுக்கச் செய்கிறது.

 

அம்பாறையினை மு.கா தனது அரசியல் அதிகாரங்களினால் நிரப்பி எதிரிகளினை தனது கோட்டைக்குள் நுழைய விடாது மிகவும் பலமான பாதுகாப்பு அரண்களினை அமைத்துள்ளது.இச் சந்தர்ப்பத்தில் அம்பாறையில் அ.இ.ம.கா ஒரு தேசியப் பட்டியலினை வழங்குவது பெரிதாக மக்களிடையே எடுபட்டு தனது கட்சி செல்வாக்கினை உயர்த்தப் போவதில்லை.எனவே,தற்போது அம்பாறையில் தனது செல்வாக்கினை நிலை நிறுத்த சிந்திப்பதை விட அனைவரும் செல்வாக்கிழந்து அ.இ.ம.கா செல்வாக்கு சற்று உயர்ந்துள்ள புத்தளம் போன்ற இடங்களுக்கு வழங்குவது தனது கட்சியின் வளர்ச்சிக்கு மிகவும் பொருத்தமானது என்ற கணக்கும் அமைச்சர் றிஷாத்தினால் போடப்பட்டிருக்கலாம்.

 

இக் காரணிகளே அ.இ.ம.காவின் தேசியப் பட்டியல் புத்தளத்திற்கு வழங்கப்பட்டமைக்கான காரணம் எனலாம்.வை.எல்.எஸ் ஹமீத் பதவியினை மையமாகக் கொண்டு கட்சி மாறி செயற்பட்டுக் கொண்டிருப்பது அவரது இத் தனை நாள் அரசியல் வாழ்வினையும் பூச்சியத்தால் பெருக்கிவிட்ட கதையாகி விட்டது.