ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 64 ஆவது மாநாடு இன்று பொலன்னறுவையில்…!

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 64 ஆவது மாநாடு பொலன்னறுவையில் இன்று நடைபெறவுள்ளது.

slfp

இம்முறை மாநாட்டில் நாட்டின் அனைத்து தேர்தல் தொகுதிகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

நீண்டநாட்களுக்கு பின்னர் கொழும்பு மாவட்டத்திற்கு வெளியே ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

சிறிமாவோ பண்டாரநாயக்க கட்சியின் தலைவராக இருந்த சந்தர்ப்பத்தில் 1971 ஆம் ஆண்டு காலியில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு நடைபெற்றிருந்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சொந்த இடமான பொலன்னறுவையில் இம்முறை மாநாடு நடைபெறவுள்ளமை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதென டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன கூறியுள்ளார்.

இன்றைய மாநாடு மூலம் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டுவரும் வகையில் புதிய வியூகங்களை வகுக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை தொகுதிவாரியாக பலப்படுத்தும் நோக்கத்துடனனேயே கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்,

1951 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இரண்டாம் திகதி முன்னாள் பிரதமர் அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவினால் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டிருந்தது

1956 ஆம் ஆண்டு முதற்தடவையாக இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாட்டின் அரசியல் மாற்றங்கள் பலவற்றுக்கு காரணமாக அமைந்த பிரதான கட்சியாக விளங்குகின்றது