அஸ்லம் எஸ்.மௌலானா
சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி சபை ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வழங்கிய உத்தரவாதம் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சிரேஷ்ட பிரதித் தலைவருமான ஏ.எல்.அப்துல் மஜீத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு இன்று திங்கட்கிழமை (2015-08-31) பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் தலைமையில் இடம்பெற்றது.
இதில் பொது விடயங்கள் தொடர்பில் உறுப்பினர்களது கருத்துரையின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது;;
“நடந்து முடிந்த பொதுத் தேர்தல் பிரசாரத்திற்காக கல்முனைக்கு வருகை தந்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தனது உரையின்போது தமது அடுத்த புதிய அரசாங்கத்தில் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.
சாய்ந்தமருது மக்களின் 25 வருட கால அபிலாஷையான அந்த உள்ளுராட்சி சபையை அவர் வாக்களித்தவாறு பிரகடனப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நான் இந்த மாநகர சபையின் அக்கிராசனத்தில் இருந்து கோரிக்கை விடுக்கின்றேன்.
அதுபோன்று கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது கல்முனை பிரசாரக் கூட்டத்தில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மட்டக்களப்பில் இருந்து பொத்துவில் வரை புகையிரத சேவை விஸ்தரிக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். அதனையும் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இப்பிராந்திய சமூகங்களின் சார்பில் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்று குறிப்பிட்டார்.
அனுதாபப் பிரேரணை
இந்த சபை அமர்வின்போது அண்மையில் காலம் சென்ற கல்முனை மாநகர சபையின் எதிர்க் கட்சித் தலைவர் ஏ.அமிர்தலிங்கம் அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை ஒன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
பிரதி முதல்வர் அப்துல் மஜீத் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட இப்பிரேரணை மீது மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர், எம்.ஜெயக்குமார், ஏ.கமலதாசன், ஏ.ஆர்.அமீர், எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஏ.எம்.றக்கீப், ஏ.எச்.எச்.ஏ.நபார், இசட்.ஏ.எச்.ரஹ்மான், எம்.எஸ்.உமர் அலி, ஏ.எல்.எம்.முஸ்தபா, ஆகியோரும் உரையாற்றினர்.