சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு தேசியப் பட்டியலில் இடம் கிடைக்குமா ?

 புதிய நாடாளுமன்றம் செப்டம்பர் ஒன்றாம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், புதிய நாடாளுமன்றத்திற்கான தேசிய பட்டியலில் இடம்பெறுகின்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் தொடர்பில் இழுபறிகளும் முரண்பாடுகளும் ஏற்பட்டுள்ளன.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமது தேசியப் பட்டியலில் இடம்பெறும் இரண்டு பேர் யார் என்பதை இன்னும் வெளியிடவில்லை. 

வாக்களிப்பின் மூலம் 14 உறுப்பினர்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

“சுரேஷுக்கு இடம் தேவை”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது இரண்டு தேசியப் பட்டியல் இடங்களில் ஒன்றை, தமது கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு வழங்க வேண்டும் என ஈபிஆர்எல்எஃப் கோரியுள்ளது.

அவர் ஒரு போராளியாக இருந்து, பின்னர் ஜனநாயக நடைமுறைகளுக்கு திரும்பி முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மக்களும் தொண்டாற்றியுள்ளார் என்று அக்கட்சியின் செயலரும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ளவருமான தெரிவித்தார்.

வடக்கு  மட்டுமன்றி, கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் அவர் தமிழ் மக்களின் நலன்களுக்காக தொடர்ந்து போராடியுள்ளார், பல பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டுள்ளார் எனக் கூறும் ஆனந்தன், அந்த அனுபவம் கூட்டமைப்புக்கு பயன்படும் வகையில் அவருக்கு தேசியப் பட்டியலில் இடமளிக்கப்பட வேண்டும் எனத் தாங்கள் கோரியுள்ளதாக அவர் கூறுகிறார். 

கடந்த 1989ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த பிறகும், காலஞ்சென்ற அமிர்தலிங்கம் அவர்களுக்கு தேசியப் பட்டியலில் இடமளிக்கப்பட்டதையும் கூட்டமைப்பினர் மனதில் கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தேசிய பட்டியலில் நியமனம் பெறுவதற்காக தேர்தல் நடைமுறையின்படி 9 பேர் அடங்கிய பட்டியல் ஒன்றை கூட்டமைப்பு ஏற்கனவே வெளியிட்டிருக்கின்றது.