ஒரு கட்சி தேசிய ரீதியாக பெறுகின்ற வாக்குகளினை அடிப்படையாக கொண்டு ஒரு குறித்த கட்சிக்கு தேசியப் பட்டியல் ஆசனம் பகிர்ந்தளிப்படும்.இத் தேசியப் பட்டியலினை ஒரு கட்சி தன்னைப் பாதுகாத்துக் கொள்ள,வினைத் திறனை அதிகரிக்க பயன்படுத்திக் கொள்ளும்.இந்த வகையில் இம் முறை ஐ.தே.க சார்பாக மூன்று முஸ்லிம்களும்,ஐ.ம.சு.கூ சார்பாக மூன்று முஸ்லிம்களும் தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இரு தேசியக் கட்சிகளும் மூன்று சம எண்ணிக்கையுடைய முஸ்லிம் உறுப்பினர்களினையே நியமித்துள்ளது போன்ற விம்பம் தோற்று விக்கப்பட்டாலும் ஐ.தே.க மூலம் வழங்கப்பட்ட தேசியப் பட்டியல் நேரடியாக ஐ,தே.கவின் மூலம் வழங்கப்பட்டவை அல்ல என்பது ஐ.தே.கவின் தேசியப்பட்டியல் வழங்கியமையில் உள்ள மிகப் பெரிய குறைபாடு எனலாம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள மூன்று உறுப்பினர்களும் ஐ.தே.க ஆனது மு.கா,அ.இ.ம.கா ஆகிய கட்சிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களுக்கு அமையவே உள்ளடக்கியுள்ளது.கட்சிகளுக்கிடையிலான ஒப்பந்தங்கள் அக் கட்சி பெறும் வாக்குகள்,அக் கட்சியின் உறுப்பினர்களின் அதிகரிப்பு போன்றவைகளினை அடிப்படையாக கொண்டிருக்கும்.இவ் உறுப்பினர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் ஐ.தே.க மூலம் நேரடியாக வழங்கப்பட்டதாக கருத முடியாது என்பதே உண்மை.ஒப்பந்த அடிப்படையில் மு.கா,அ.இ.ம.கா ஆகியன குறித்த ஆசனங்களினை அல்லது வாக்குகளினை பெற்றதாலேயே இவ் ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன.இவ் ஒப்பந்தத்தினை சிங்கள கட்சிகள் செய்திருந்தால் அது சிங்களவர்களினைச் சென்றடைந்திருக்கும்.
இம் முறை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தயா கமகே,ஹரீஸ்,பைசல் காசீம்,மன்சூர் ஆகியோர் தெரிவாகியிருந்தனர்.இதில் தயா கமகே மாத்திரமே ஐ.தே.கவினைச் சேர்ந்தவர்.மற்றைய மூவரும் மு.காவினைச் சேர்ந்தவர்கள்.வெளிப் பார்வையில் இவர்கள் மூவரும் ஐ.தே.க உறுப்பினர்களாகவே கருதப் படுவர்.உள் பார்வையில் இவர்கள் மு.கா என்பதை யாவரும் ஏற்றுக் கொள்வர்.முஸ்லிம் காங்கிரஸ் இம் முறை எத்தனை உறுப்பினர்களினை பெற்றுள்ளது என்று கேட்டால் ஒன்று என்றே அதிகார பூர்வாமாக குறிப்பிட முடியும்.இது போன்றே ஐ.தே.க மூலம் வழங்கப்பட்ட தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்பட்ட தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் வெளிப்பார்வையில் ஐ.தே.க போன்று தோன்றினாலும் அவர்கள் ஐ.தே.க இல்லை என்பதே யதார்த்தம்.
இம் முறை ஐ,தே.கவில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தெரிவாகியுள்ளதாலும்,முஸ்லிம் கட்சிகளினூடாக ஐ.தே.க முலாமிடப்பட்டு மூன்று முஸ்லிம் தேசியப் பட்டியலினை ஐ.தே.க முஸ்லிம்களிற்கு வழங்கியுள்ளதாலும் தனது கட்சியினூடாக முஸ்லிம்களிற்கு நேரடியான தேசியப்பட்டியலினை வழங்குவதன் அவசியத்தினை ஐ.தே.க உணராது இருந்திருக்கலாம்.கடந்த முறை கூட ஐ.தே.க நேரடியாக ஒரே ஒரு முஸ்லிமினையே தனது நேரடி தேசியப் பட்டியலில் உள் வாங்கி இருந்தது.இம் முறை ஏதோ? ஒரு வழியில் முஸ்லிம்களின் பெரும் பாலான வாக்குகள் ஐ.தே.கவிற்கே சென்றுள்ளது.இம் முறை முஸ்லிம் காட்சிகளினூடாக அல்லாமல் நேரடியாக பல்லாயிரம் வாக்குகள் ஐ.தே.கவிற்கு சென்றுள்ளதனை தரவுகள் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றன.இந்த நேரடியான முஸ்லிம் வாக்குகளின் எண்ணிக்கையானது ஐ.தே.கவின் குறைந்தது ஒரு தேசியப் பட்டியல் அதிகரிப்பிற்கு காரணமாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.குறைந்தது அந்த ஆசனத்தினையாவது ஐ.தே.க முஸ்லிம்களிற்கு நேரடியாக வழங்கி இருக்க வேண்டும்.
குருநாகலில் ஐ.தே.கவின் சதி மூலம் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஆக்கப்பட்டதா? என்ற சந்தேகம் காணப்படுகிறது.இச் சந்தர்ப்பத்திலும் முஸ்லிம்கள் ஐ.தே.கவிற்கே வாக்களித்தனர்.முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இதற்கு தீர்வாய் ஒரு தனித் தேசியப் பட்டியலினை தனது கட்சிக்கு கேட்டாப் போல் பல இடங்களில் கதைத்திருந்தமையினையும் அவதானிக்க முடிந்தது.இந்த அநியாயத்திற்கு தீர்வு என்ற அடிப்படையிலோ? அல்லது இலட்சக் கணக்கான முஸ்லிம் மக்கள் தங்களுக்கு வாக்களித்ததற்கு பகரமாகவோ ஒரு தேசியப் பட்டியலினை ஐ.தே.க குருநாகலினைச் சேர்ந்த ஒருவரிற்கு வழங்கி இருக்கலாம்.இதன் மூலம் முஸ்லிம் கட்சிகளின் ஊடுருவலினை குருநாகலில் தடுத்திருக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இம் முறை மேல் மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலிக்கு தேசியப் பட்டியலில் இடம் வழங்கப்படும் என அனைவரும் நம்பி இருந்தனர்.கடந்த தேர்தலில் அசாத் சாலிக்கு தேசியப்பட்டியல் உறுதி மொழி வழங்கி இருக்காவிட்டால் அசாத் சாலி வேறு முடிவுகளினை எடுத்திருக்கலாம்.அவரின் அனைத்து திட்டங்களினையும் தேசியப் பட்டியல் உறுதி மொழி மூலம் அடக்கி இருந்தனர்.இப்போது அசாத் சாலி தேசியப் பட்டியலில் இடம் வழங்கப்படாமை ஐ.தே.க செய்யும் துரோக வேலைகளில் ஒன்று எனலாம்.சில பெளத்த அமைப்புக்கள் கண்டியில் இரண்டே இரண்டு வேட்பாளர்களினை போட்டி இட அனுமதி அளிக்க வேண்டும் என பகிரங்கமாகவே ஐ.தே.கவிடம் கோரிக்கை விடுத்திருந்தன.இக் கோரிக்கைகளின் பின்னணியிலேயே அசாத் சாலிக்கு அனுமதி மறுக்கப் பட்டிருந்ததாகவும் சில கதைகள் அடிபட்டன.
இரண்டிற்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்ற கோரிக்கை கண்டியில் மூன்று முஸ்லிம் உறுப்பினர்கள் வரக் கூடாது என்பதனை தெளிவாக கூறுகிறது.இரு வேட்பாளர்களினை களமிறக்கி மூன்றாவது நபரிற்கு தேசியப் பட்டியலினை கொடுப்பதானது அவ் அமைப்புகளினை ஏமாற்றும் ஒரு செயலாக அமையும்.ஆசாத் சாலியின் பேச்சுக்கள் இனவாதத்தினை அடிப்படையாக கொண்டிருப்பதால் அசாத் சாலியினை ஐ.தே.க உள் வாங்குவதன் மூலம் முஸ்லிம்களின் வாக்குகள் ஐ.தே.கவிற்கு கிடைத்தாலும் பேரின வாக்குகள் அதன் மூலம் திசை திரும்ப வாய்ப்புள்ளதான குற்றச் சாட்டும் அசாத் சாலி மீது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் மேல் மாகாண சபை உறுப்பினர் லாபிர் ஹாஜியார் ஐ.தே.கவின் நான்கு ஆசனக் குறைவிற்கு அசாத் சாலியினை குறிப்பிட்டிருந்தமை இதனை மேலும் தெளிவு படுத்துகிறது.இருப்பினும் உறுதி மொழி வழங்கிய பிறகு ஏமாற்றுவது ஒரு சிறந்த செயல் அல்ல. ஐ.தே.காவின் மூலம் இம் முறை அசாத் சாலிக்கு தேசியப் பட்டியல் மறுக்கப்பட்டிருப்பதால் அடுத்த முறை மாகாண சபைத் தேர்தலில் தனது பலத்தினை வேறு வழிகளில் நிரூபிக்க அவர் முயலலாம்.இது ஐ.தே.கவிற்கு ஒரு பாரிய சவாலாக அமையவும் அதீத வாய்ப்புக்கள் உள்ளன.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்