திகாமடுல்ல மாவட்டத்தின் மூன்று முஸ்லிம் பிரதிநிதிகளின் வெற்றி !

 

k3_Fotor

யூ.எல்.எம் ஹிபான்-(HND in QS )

எதிர்வரும் 17ஆந் திகதி நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் தேர்தல் வெற்றி நிலையை பொருத்தவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு முஸ்லிம் மக்கள் அதிக கரிசனை கொள்ள வேண்டி இருக்கின்றது. ஏனெனில் அமைய போகும் நாடாளுமன்றத்தின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு நாடுபூராகவும் இருந்து கிடைக்கும் ஆசனம் என நம்பப்படும் 10 உறுப்பினர்களில் 03 முஸ்லிம் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் ஒரு மாவட்டமாக இது இருக்கின்றது. இந்த 03 பிரதி நிதித்துவம் என்பது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெறும் மொத்த ஆசனத்தில் இது 33.3% ஆகும்.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் கல நிலவரம் எப்படி அமைய போகின்றது என்பது குறித்து எல்லோரினது கவனகளும் திரும்பி இருக்கின்ற இந்த சந்தர்பத்தில் நமது கண்ணோட்டத்தையும் இதில் செலுத்துவது இன்றியமையாத தேவையாக மாறியிருக்கின்றது. அந்த வகையில் இந்த அலசல் இங்கு இடம்பெறுகின்றது.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் மும்முனை தேர்தல் போட்டி தீவிரம் அடைந்து காணப்படுகின்றது. ஏனெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 01 ஆசனம் என்பது நிச்சயிக்கப்பட்ட வெற்றியாகவே இங்கு காணப்படுகின்றது. ஆதலால் போட்டி நிலைக்கு அப்பால் தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்படுகின்றது.

திகாமடுல்ல மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய முன்னனியுடன் இனைந்து நமது 03 முஸ்லிம் வேட்பாளர்களையும் 01 சிங்கள வேட்பாளரையும் இனைத்து எல்லாம் 04 நபர்களை களமிறக்கியிருக்கின்றது. அதே நேரம் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் 03 சிங்கள வேட்பாளர்களை அம்பாறை தொகுதியை மையப்படுத்தி நிறுத்தியுள்ளது. மற்றும் நேரடியாக ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் 02 முஸ்லிம் வேட்பாளர்களையும் களமிறக்கியிருக்கின்றது. 

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இனைந்து தேசிய காங்கிரஸ் 03 முஸ்லிம் வேட்பாளர்களை போட்டியிட வைத்துள்ளது. மேலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து மயில் சின்னத்தில் 10 முஸ்லிம் வேட்பாளர்களை களத்தில் குதிக்க செய்துள்ளது.

திகாமடுல்ல தேர்தல் களத்தை பொறுத்தவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வகுத்திருக்கும் தேர்தல் வியூகத்தின்படி 03 முஸ்லிம் வேட்பாளர்களும் வெற்றி பெறுவதென்பது மிகவும் இலகுவான செயற்பாடாகும். இதற்கு முன்னர் கடந்த 2000ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலின் போதும் இவ்வாறானதொரு வியூகத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப் எடுத்து அதன் மூலம் 03 முஸ்லிம் பிரதிநிதிகளையும் 01 சிங்கள பிரதி நிதியையும் மொத்தமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 04 ஆசனங்களை கைப்பற்றியது. அதுவும் பொது ஜன ஐக்கிய முன்னனி கட்சியுடன் இனைந்து போட்டியிட்ட நிலையில் இதனை அடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அதனையொட்டிய வியூகமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இன்றைய தலைவர் சட்டத்தரனி ரவூப் ஹக்கீம் முன்னெடுத்திருந்தாலும் தமது கட்சி சார்ந்த 03 முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை லாவகமாக வெற்றி கொள்ளமுடியும். ஆயினும் தனது கட்சி சார்ந்த சிங்கள வேட்பாளரை வெற்றி பெற செய்வதென்பது சிரமமானது.

கடந்த 2012யில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்த கட்சிகளுடனும் கூட்டு சேராது தனித்து களமிறங்கி இருந்தது. அதன்போது திகாமடுல்ல மாவட்டம் பூராகவும் 83,658 வாக்குகளை பெற்றிருந்தது. இதில் 1500-2000 வரையான வாக்குகள் முஸ்லிம் அல்லாதவர்களிடம் இருந்து கிடைத்திருக்கலாம் என்ற கணிப்பும் உண்டு. இருந்தாலும் 81,658 வாக்குகள் தெளிவாக முஸ்லிம் வாக்குகள் ஆகும்.

மாகாண சபை தேர்தல் நடைபெற்ற சூழலுக்கும் இன்று நடைபெற இருக்கின்ற பொதுத்தேர்தல் கால சூழலுக்கும் இடையில் மாறுபட்ட கல நிலவரங்கள் காணப்பட்டாலும் எப்படியும் முஸ்லிம்களுடைய வாக்குகளில் ஐக்கிய தேசிய முன்னனிக்கு 65,000 அளவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடைய நேரடி முஸ்லிம் வாக்குகளாக சென்றடையும். அதேநேரம் ஐக்கிய தேசிய கட்சியின் நேரடி முஸ்லிம் வாக்குகள் 5000 கிடைக்கும். பெரும்பாலான சிங்கள, தமிழர் வாக்குகள் 65,000 அளவில் கிட்டும். மொத்தமாக ஐக்கிய தேசிய முன்னனி திகாமடுல்ல மாவட்டத்தில் 135,000 வாக்குகளை பெறும் சாத்தியம் காணப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சுந்தந்திர கூட்டமைப்புக்கு முஸ்லிம் வாக்குகள் சுமார் 30,000 அளவிலும் பெரும்பாலான சிங்கள, தமிழர் வாக்குகள் 62,000 அளவிலும் மொத்தமாக 92,000 வாக்குகளை பெறலாம். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மொத்தமாக 28,000 வாக்குகளையும் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு 45,000 அளவிலான வாக்குகளையும் பெறும் என்ரே அதிகமான கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது இம்மாவட்டத்தில் 420,835 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். அதில் 64.74% ஆன 272,462 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். அதன் பின்னர் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது இம்மாவட்டத்தில் 268,998 பேர் வாக்களித்திருந்தனர். கடந்த ஜனவரி 2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது 465,757 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். அவர்களுள் 77.39% ஆன 360,442 பேர் வாக்களித்திருந்தனர். இம்முறை நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலிலும் 465,757 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருக்கின்றனர். இதில் மொத்தமாக 64.40% வீதமான 300,000 பேர் வாக்களிப்பார்கள் என எதிர்பார்ப்பது மிகவும் சாத்தியமான ஒன்றே.

இவ்வாறன கோணத்தில் வாக்களிப்பு உறுதி செய்யப்பட்டால் இம்மாவட்டத்தில் 01 நாடாளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதற்கு 50,000 வாக்குகள் தேவைப்படும். இதன்படி ஆசன பங்கீடு செய்யும் போது ஐக்கிய தேசிய முன்னனிக்கு அதிக வாக்குகளைப்பெற்ற கட்சி என்ற அடிப்படையில் 01 போனஸ் ஆசனமும் 100,000 வாக்குகளுக்கு 02 ஆசனமும் அதன் மிகுதி வாக்குகளான 350,000த்திற்கு 01 ஆசனம் என்ற அடிப்படையிலும் மொத்தம் 04 ஆசனங்களை பெற்றுக்கொள்வர். 

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெற்றுக் கொண்ட 92,000 வாக்குகளில் முதல் 50,000த்திற்கு 01 ஆசனமும் அதன் மிகுதி 42,000 வாக்குகளுக்கு 01 ஆசனமும் என்ற பாங்கில் மொத்தல் 02 ஆசனங்களை பெறும். தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுக் கொண்ட 45,000 வாக்குகளுக்கும் மீதி ஆசனம் என்ற அடிப்படையில் 01 ஆசனத்தையும் பெற்றுக்கொள்ளும். அதேநேரம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்றுக்கொள்ளும் 28,000 வாக்குகள் மீதி வாக்குகளின் அடிப்படையில் வழங்கப்படும் 02ஆம் சுற்றுக்கு கூட போதுமான வாக்குகளை பெற முடியாத நிலையில் பாராளுமன்ற ஆசனத்தை இழந்து விடும். திகாமடுல்ல மாவட்டத்தில் மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகை 07 என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசிய முன்னனிக்கு செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் 135,000 வாக்குகளில் 3499 வாக்குகளை குறைத்து மயில் சின்னம் அதனை பெற்று 3501களாக உயர்த்துவதன் ஊடாகவே அதாவது 31500 வாக்குகளாக மயில் சின்னம் பெற்றால் ஐக்கிய தேசிய முன்னனிக்கு செல்லும் மிகுதி வாக்குக்கான ஆசனத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனக்குரியதாக மாற்றிக்கொள்ளளாம். இந்த நிலைக்கு சாதகமான நிலை திகாமடுல்ல மாவட்ட தேர்தல் களத்தில் காணப்ப்படவில்லை என்றே கூடுதலான கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

ஆகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இத் தேர்தலில் வகுத்திருக்கும் வியூகத்தின் படி அக்கட்சியின் முஸ்லிம் வாக்காளர்கள் தமது கட்சி நிறுத்தியுள்ள 03 முஸ்லிம் வேட்பாளர்களையும் ஆதரித்து வாக்களிக்கும் போது 03 முஸ்லிம் வேட்பாளர்களும் தமது விருப்பு வாக்குகளை ஏறத்தாள 55,000 அளவில் வைத்திருக்க முடியும். இதன் மூலம் சிங்கள வேட்பாளர்கள் பெற்றிருக்கும் விருப்பு வாக்கினை பார்க்கிலும் முஸ்லிம் 03 வேட்பாளர்களும் முன்னனியில் இருந்து தமது வெற்றியை நிலைபெற செய்யமுடியும்.

இதனை சாத்தியப்படுத்துவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் வேட்பாளர்களின் மீது கொண்டுள்ள தனிப்பட்ட விசுவாசத்தை இத்தேர்தலில் மறந்து கட்சிக்கான விசுவாசத்தின் அடிப்படையில் குறிப்பாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கும் கல்முனை, சம்மாந்துறை, நிந்தவூர் ஊர்களை சார்ந்த வாக்காளர்கள் செயற்பட வேண்டும். திகாமடுல்ல மாவட்டத்தில் வேட்பாளர்கள் நிறுத்தப்படாத ஏனைய முஸ்லிம் பிரதேசங்களை சார்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாக்காளர்கள் பேதங்களுக்கு அப்பால் தமது கட்சி தலைமைத்துவம் வகுத்திருக்கும் வியூகத்தின் வழியில் ஒவ்வொரு வாக்காளருக்குமுரிய 03 விருப்பு வாக்குகளையும் தமது கட்சி 03 வேட்பாளர்களுக்கும் பிரயோகிக்க வேண்டும். 

வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கும் 03 ஊர்களிலும் உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அபிமானிகள் வேட்பாளர்களின் விருப்புகளுக்கு அப்பால் தமது ஊர் வேட்பாளர் வெல்ல வேண்டும் என்ற உணர்வை விலக்கி 03 நபர்களும் வெற்றி பெற முடியும் என்பதை உணர்த்தி வாக்களிக்க செய்வதில்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் வியூகத்தின் அதாவது 03 முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை வெற்றி பெறுவது தங்கியுள்ளது.

ஆகவே 03 நமது முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பெற்றுக்கொள்வதற்கான நகர்வுகளில் கைகோர்ப்போம். நமது வாக்குப்பலத்தை அரசியல் அதிகார வலிமைக்கு இடுவோம்.