இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு எதிராக மக்களவையில் காங்கிரஸ் கொண்டு வந்த ஒத்திவைப்புத் தீர்மானம் புதன்கிழமை தோல்வியடைந்தது.
இந்தத் தீர்மானம் தொடர்பாக அவையில் விவாதம் நடைபெற்ற போது, பாஜக – காங்கிரஸ் இடையே காரசாரமான கருத்து மோதல்கள் ஏற்பட்டன.
பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து இதுவரை இரு அவைகளிலும் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் எதுவும் நடைபெறவில்லை.
கூட்டத்தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல் முறையாக எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும், சுஷ்மா சுவராஜுக்கும் இடையே மக்களவையில் புதன்கிழமை 02.00 மணி நேரத்துக்கும் மேலாக விவாதம் நடைபெற்றது.
அவை தொடங்கிய சிறிது நேரத்துக்குப் பிறகு, வழக்கமான நடவடிக்கைகளை ஒத்திவைத்து விட்டு லலித் மோடி விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனுமதி கோரி மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனின் இருக்கையை முற்றுகையிட்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தாமாகவே முன்வந்து அந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளும்படி மக்களவைத் தலைவரிடம் பரிந்துரைத்தார்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கொண்டு வந்த ஒத்திவைப்புத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டப் புகாரில் சிக்கித் தலைமறைவாக உள்ள லலித் மோடிக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவியதாக சுஷ்மா விளக்கமளித்துள்ளார். மொத்தத்தில் லலித் மோடிக்கு உதவியதை சுஷ்மாவே ஒப்புக் கொண்டுள்ளார். எனவேதான் அவரை பதவி விலகுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.
லண்டனில் தலைமறைவாக இருந்த லலித் மோடியிடம் அவரது பயண ஆவணங்களை பிரிட்டன் அரசு ஒப்படைத்தால், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவு பாதிக்கப்படும் என்று முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அந்நாட்டிடம் தெரிவித்திருந்தார்.
ஆனால், லலித் மோடி விவகாரத்தில் நாட்டின் கொள்கையையே தற்போதைய பாஜக அரசு மாற்றிக் கொண்டு விட்டது என்றார் மல்லிகார்ஜுன கார்கே.
இதைத்தொடர்ந்து பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி “லலித் மோடிக்கு உதவ சுஷ்மாவும், அவரது குடும்பத்தினரும் எவ்வளவு பணம் வாங்கினர்? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்´ என்றார்.
எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்க துணிவு இல்லாததால்தான் பிரதமர் மோடி மக்களவைக்கு வருவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சுஷ்மா, “போஃபர்ஸ் ஊழலில் தொடர்புடைய ஆயுதத் தரகர் குவாத்ரோச்சி தப்பித்துச் செல்வதற்காக அவரிடமிருந்து எவ்வளவு பணம் பெற்றீர்கள்? என ராகுல் தனது தாயாரிடம் (சோனியா) கேட்க வேண்டும்´ என்றார்.
“போபால் நச்சு வாயுக் கசிவால் 15,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமான தொழிலதிபர் ஆண்டர்சனை, ராகுலின் தந்தை (ராஜீவ் காந்தி) ஏன் தப்பிக்க விட்டார்? என்பதை அவர் ஆராய்ந்து அறிய வேண்டும்´ என்றும் சுஷ்மா பதிலடி கொடுத்தார்.
லலித் மோடி விவகாரம் தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது:
பிரிட்டனில் வசிக்க லலித் மோடிக்கு எப்படி உரிமை வழங்கப்பட்டது? என தற்போது காங்கிரஸார் கேட்கின்றனர். அவர் பிரிட்டனில் குடியேறியதே காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான்.
எனது கணவரும், மகளும் லலித் மோடிக்கு வழக்குரைஞர்களாக இருந்ததாகக் குற்றச்சாட்டு வைக்கின்றனர். லலித் மோடியின் வழக்கில் எனது கணவர் அவரது வழக்குரைஞராக ஆஜராகவில்லை.
எனது மகள் 9-ஆவது வழக்குரைஞராகவே லலித் மோடி சார்பில் ஆஜரானார். அதற்காக ஒரு ரூபாய் கூட பெறவில்லை என்று சுஷ்மா விளக்கமளித்தார்.
இதைத் தொடர்ந்து, பேசிய அதிமுக உறுப்பினர் வேணுகோபால், “லலித் மோடிக்கு மத்திய அரசு தயவு காட்டக் கூடாது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்´ என்றார்.
இதைத் தொடர்ந்து ஒத்திவைப்புத் தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. தீர்மானத்துக்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து அது தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக சுஷ்மாவின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாமல், காங்கிரஸ் உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கேள்விகளை தனியொருவராக எதிர்கொண்டு அரை மணி நேரத்துக்கும் மேல் விளக்கம் அளித்ததற்காக சுஷ்மா சுவராஜை பாஜக மூத்த தலைவர் அத்வானி பாராட்டினார்.
சுஷ்மா சுவராஜ் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை எனவும் ஆகவே, அவர் பதவி விலக வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
இதுகுறித்து மக்களவையில் அவர் மேலும் பேசியதாவது:
சுஷ்மா சுவராஜ் எந்தத் தவறும் செய்யவில்லை. அவர் மீதான அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மத்திய அரசு நிராகரிக்கிறது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் லலித் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், தற்போது எலி வளை அளவுகூட இல்லாத பிரச்சினையை காங்கிரஸ் கட்சி மலை அளவு ஊதிப் பெரிதாக்கி வருகிறது என்றார்.
ராகுல் காந்தியைப் பற்றிக் குறிப்பிடும் போது, அறிவில்லாத ஒரு வல்லுநராக அவர் செயல்படுவதாக ஜேட்லி விமர்சித்தார்.