இன்று மஹிந்த குடும்பமும், அவரின் ஆதரவாளர்களும் ஆட்சி அதிகாரங்கள் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள் அவர்களை காப்பாற்றும் நோக்கிலேயே முன்னாள் அமைச்சர் அதாஉல்லா மிகத்தீவிரமான தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
இறக்காமத்தில் இடம்பெற்ற மு.காவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதம பேச்சாளராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கடந்த காலங்களில் மஹிந்தவின் கொடுங்கோல் ஆட்சியில் எமது சமுகத்துக்கு என்ன நடந்தது என்று நாம் எல்லோரும் அறிவோம். அன்று அவரும் அவரது சகோதரர்களும் எமக்குச் செய்த அநியாயங்களை நாம் இன்னும் மறக்கவில்லை. அப்படியிருக்கு நிலையில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா மஹிந்தவுக்கும் அவரது கட்சிக்கும் வாக்களிக்கும்படி கூறிவருகின்றார். அதனை அறியாத சிலர் அவருடன் இருந்துகொண்டு மஹிந்தவுக்கும் அவரது கட்சிக்கும் வக்காளத்து வாங்கியவர்களாக செயற்பட்டு வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் அதாஉல்லா இறக்காமம் மற்றும் வரிப்பத்தாஞ்சேனை மக்களை ஏமாற்றும் நோக்கில் சில இளைஞர்களை வைத்துக்கொண்டு தங்களின் அரசியல் நடவடிக்கைகளை செய்து வருகின்றனர். இதனால் அளிக்கப்படும் வாக்குகள் யாவும் பெரும்பான்மை சமுகத்துக்கே போய்ச்சேரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இவ்வாறு வாக்களிப்போமாக இருந்தால் அது நமக்கு நாம் அடிக்கு சவு மனியாகத்தான் இருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது. மஹிந்தவின் கையில் மீண்டும் ஆட்சி போகுமாக இருந்தால் இன்று பர்மா, நைஜீரியா போன்ற நாடுகளில் நிலவும் மிகக் கொடூரமான சூழ்நிலைதான் நமக்கு ஏற்படும் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
மஹிந்தவின் ஆட்சி மாறவேண்டும், அவரின் அராஜகம் ஒழியவேண்டும் என்று எமது கட்சியின் தலைமை அன்று இறுதி நேரத்தில் எடுத்த சரியான முடிவை எமது சமுகம் ஏற்றுக்கொண்டு மைத்தீரிபால சிறிசேனாவுக்கு கொடுத்த ஆதரவின் மூலம் கிடைத்த வெற்றியினால் இன்று எமது சமுகம் நின்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்த இறக்காமம், வரிப்பத்தாஞ்சேனை மக்கள் சரத் வீரசேகர என்பவருக்கு வாக்களித்திருந்தீர்கள் அதனால் அவர் வெற்றிபெற்று பாராளுமன்றம் சென்றார். நீங்கள் அளித்த வாக்கினால் பாராளுமன்ற சென்ற அந்த சரத் வீரசேகர 19 ஆவது திருத்த சட்டத்திற்கு எதிராகவும் எமது சமுகத்துக்கு எதிராகவும் செயற்பட்டார் என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்.
நீங்கள் அளித்த வாக்கினால் பாராளுமன்றம் சென்ற முன்னாள் அமைச்சர்களான அதாஉல்லா, சரத் வீரசேகர போன்றவர்கள் இன்று எமது சமுகத்தை விற்று மஹிந்தவின் அராஜக ஆட்சியை கொண்டுவர துடிக்கின்றனர். இவ்வாறானவர்களுக்கு நாம் ஒருபோதும் இடம்கொடுக்காமல் அவர்களை விரட்டியடிக்க அனைவரும் ஒன்றுபட்டு அணிதிரண்டு எதிர்வரும் 17 ஆம் திகதி ஒரு பாடத்தை புகட்டுவோம், புகட்டிக்காட்டுவோம் என்றார்.