நெடுந்தீவை அபிவிருத்தியால் கட்டியெழுப்பி குட்டி மாலைதீவாக மாற்றியமைப்பதே எமது எதிர்காலத்திட்டம் – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம்

பாரூக் சிஹான் 

நெடுந்தீவை அபிவிருத்தியால் கட்டியெழுப்பி குட்டி மாலைதீவாக மாற்றியமைப்பதே எமது எதிர்காலத்திட்டமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவிற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட செயலாளர் நாயகம் அவர்கள் தேவாமண்டபத்தில் பொதுமக்களை சந்தித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இங்குள்ள மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகளை ஏற்கனவே நான் அறிந்துள்ள நிலையில் அவற்றில் பெரும்பாலானவைக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

குறிப்பாக, வீதிப்புனரமைப்பு, மின்சாரம், வாழ்வாதாரம் உள்ளிட்ட வசதிவாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பது மட்டுமன்றி இப்பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் பாரிய உவர்நீரை நன்னீராக்கும் செயற்திட்டத்தை செயற்படுத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து அவை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

அநேகமாக அடுத்த மாதம் முதல் நெடுந்தீவு வாழ் மக்கள் அனைவருக்கும் இத்திட்டத்தின் ஊடாக சுத்தமான குடிநீரை பெற்றுக் கொள்ள முடியுமென்ற மகிழ்ச்சிகரமான செய்தியை உங்களுக்கு தெரியப்படுத்துகின்றேன்.

அந்தவகையில் மேலும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து நெடுந்தீவை குட்டி மாலைதீவாக மாற்றியமைக்க வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகும்.

இவ்வாறாக நெடுந்தீவில் முக்கிய அபிவிருத்திகளை முன்னெடுத்து வளப்படுத்துவதன் ஊடாக இங்குள்ள மக்கள் அனைவரும் தமது சொந்த கால்களில் வாழ முடியுமென்ற நம்பிக்கை எமக்குள்ளது.

நெடுந்தீவு தற்போது அடைந்து வரும் முன்னேற்றம் குறித்து நான் வியப்படையும் அதேவேளை, மகிழ்ச்சியும் அடைகின்றேன். இதுமென்மேலும் தொடர வேண்டும்.

இப்பகுதியின் அபிவிருத்தியைக் கருத்தில் கொண்டு தனியார்துறைகள் ஊடாகவும் செயற்திட்டங்களை முன்னெடுக்க மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் அவசியமானது என்று தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா அவர்கள், கடல்வளத்துறையை வளர்ச்சியடையச் செய்யும் அதேவேளை, இங்கு நவீனமுறையில் விவசாயத்தையும் முன்னெடுத்து அதனூடாகவும் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பிலும் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம்.

இங்கு பிரதான அடிப்படைப் பிரச்சினைகளில் ஒன்றான சுத்தமான குடிநீரை பெறறுக் கொள்வதான எனது முயற்சி வெற்றியளித்துள்ள அதேவேளை, கடந்தகாலங்களில் எமது மக்களுக்காக எமது அரசியல் அதிகாரத்தை உரிய முறையில் பயன்படுத்தியதன் ஒரு நல்லவிளைவே இக்குடிநீர்த்திட்டமாகும்.

இதேபோன்று மக்களின் கோரிக்கையில் ஒன்றான சின்னபாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவும் பெரிய பாலத்தை பொருட்களை ஏற்றி இறக்குவதற்கும் ஏற்றவகையிலான நடவடிக்கைகள் தொடர்பிலும் உரிய கவனம் செலுத்தப்படும்.

அத்துடன் நெடுந்தீவு மக்களின் மற்றுமொரு பிரச்சினையாக உள்ள கடல்மார்க்க போக்குவரத்து பிரச்சினை தொடர்பில் குறிப்பாக வடதாரகையை நெடுந்தீவு கரையில் தரித்து நிற்கும் வகையில் அப்பகுதியை ஆழப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து எதிர்காலத்தில் விசேட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

அத்துடன் மக்களின் ஏனைய தேவைப்பாடுகள் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.
இச்சந்திப்பின் போது, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்) உடனிருந்தார்.

1111111111111111_Fotor 1111111111111112_Fotor