பசில் ராஜபக்ஷவை ஒருநாளைக்கு சிறையில் இட்டால் சஜித் பிரேமதாச பத்து மாதங்களுக்கு சிறை செல்வார் – எஸ்.பி. திசாநாயக்கா

Unknown

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சிறையடைத்தால் அமைச்சர் சஜித்  பிரேமதாஸவும் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் எஸ்.பி. திசாநாயக்கா தெரிவித்தார்.

நாம் 100 நாள் ஆட்சிக்கு இடம்கொடுத்தது ரணில் மீதும் ஐ.தே.க. மீதும் எமக்குள்ள பற்றுதல் காரணமாக அல்ல. எமக்குத் தேவையான நேரத்தில் தேர்தலை நடத்தத் திட்டமிட்டோம்.

இப்போது அக்காலம் கனிந்து வந்துள்ளது எனவும் குறிப்பிட்டார் கண்டி, உடுநுவரவில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது.

பசில் ராஜபக்ஷ ஒரு நாளைக்கு சிறைக்கு அனுப்பினால் என்ன நடக்கும் என்பதை 18ம் திகதிக்குப் பின்னர் பார்த்துக்கொள்ளுங்கள். பசில் ராஜபக்ஷவை ஒருநாளைக்கு சிறையில் இட்டால் சஜித் பிரேமதாச பத்து மாதங்களுக்கு சிறை செல்வார். 

கடந்த ஜனவரி 8ம் திகதி நடந்த தேர்தலின் பின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரம சிங்கவை பிரதமராக நியமித்தார். அந்நேரம் ஐ.தே.க.விற்கு 47 ஆசனங்களும் ஸ்ரீ.ல.சு.க.விற்கு 127 ஆசனங்களும், எமது ஐ.ம.சு.கூ.விற்கு 146 ஆசனங்களும் இருந்தன. 

அண்மித்த காலங்களில் நாட்டின் முழு அபிவிருத்திப் பணிகளையும் இடைநிறுத்தி மக்களின் வெறுப்பைப் பெற்ற நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலுக்கு செல்கிறது.

நாட்டில் மிகப் பெரிய நிதி மோசடியைச் செய்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியினர் தேர்தலில் போட்டி இடுகின்றனர். ஜனவரி 8ஆம் திகதியை அண்மித்த காலம் அப்படி இருக்கவில்லை. இன்று மக்கள் ஐ.தே.க.வை வெறுக்கும் நேரமாகும்.

எனவே மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வெற்றி பெறுவது மிக இலகுவானதாகும். இதனைத் தடுக்க முடியாது.