மக்கள் பிரதிநிதி ஒருவரைத் தேர்ந்தெடுத்தல் : ஓர் இஸ்லாமியப் பார்வை !
தாருள் அமன்
இன்றைய உலகில் இஸ்லாமிய சமூக வாழ்வமைப்பொன்று எங்குமே இல்லாத சூழலில் முஸ்லீம்கள் அல்லாஹ்வின் வழிகாட்டலுக்கு முற்றிலும் மாற்றமான
சட்டநடைமுறைகளைக் கொண்ட சமூகவொழுங்குகளுக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவு எமது செயல்களில் பல இஸ்லாமிய விதிகள் குறித்த விழிப்புணர்வின்றி ஹாராத்துக்குள் அகப்பட்டு விடுவதைக் காண்கிறோம். இதற்கோர் நல்ல உதாரணம்தான் இன்று நாம் எதிர்நோக்கியுள்ள பாராளுமன்றத் தேர்தலும் அதில் நாம் எம் சார்பாக மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க எத்தனிக்கும்போது உருவாகும் சூழலுமாகும்.
ஓரு முஸ்லிம் தமது அனைத்து செயற்பாடுகளிலும் அல்லாஹ்(சுபு) வரம்புகளைப்பேணி செயலாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தற்காலத்தில் எம்மைச் சூழ இடம்பெற்று வருகின்ற இந்த தேர்தல்களின் யதார்த்தங்கள் என்ன? அதில் பங்கேற்க, வாக்களிக்க இஸ்லாம் வழிகாட்டுகின்றதா? என்பது தொடர்பாக ஆராய்வது மிக முக்கியமாகும்.
இன்று எமது பாராளுமன்ற தேர்தலை எடுத்துக்கொள்வோமானல் அதிலே ஒருவரை நம் பிரதிநிதியாய் தெரிவு செய்வது என்பது, அந்தப் பிரதிநிதி எந்தக் கட்சியை அல்லது கொள்கையை பிரதிநிதித்துவப்படுத்துகிறாரோ அந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் எம்மை பிரதிநிதித்துவப்படுத்த நாம் அவருக்கு ஆணை வழங்குகிறோம். இவ்வாறு எம் சார்பாக எமது விவகாரங்களில் பிறிதொருவரை பிரதிநிதியாக்கல் தொடர்பாக ஷரீயா மிகத்தெளிவாக வழிகாட்டல்களை வழங்குகின்றது. இஸ்லாமிய பிக்ஹின் பரிபாஷையில் அல் – வகாலாஹ்(பிரதிநிதித்துவம்) என அழைக்கப்படும் இவ்விடயம் தொடர்பான ஓரளவான புரிதலாவது தேர்தலில் ஏதொவொரு வகையில் சம்பந்தப்பட நினைக்கும் அனைவருக்கும் மிகவும் அவசியமாகும்.
பிரதிநிதித்துவம் என்பது குறித்த ஒரு பணியைச் செய்வதற்கு தன் சார்பாய் பிறிதொருவரை நியமித்தலாகும். வயது வந்த, புத்தி சுயாதீனமுள்ள ஒவ்வொருவரும் தம் செயல்களுக்கு பொறுப்புதாரிகள் (முகல்லப்f) என்ற வகையில் எம்மை பின்வரும் ஏதாவதொரு பிரிவில் அடக்கலாம்.
1. சுயமானவர் (அல்-அஸீல்): எனப்படும் சுயமாய் தன்னைத் தானே
பிரதிநிதித்துவப்படுத்திக் கொள்ளும் நபர்.
2.பிரதிநிதி (அல் வக்கீல்) என்றழைக்கப்படும் பிறரை பிரதிநிதித்துவம் செய்பவர்.
3.உறவுமுறைப் பிரதிநிதி (அல் வாலீஃ): உறவுவழி அல்லது அதிகார ரீதியாகப்
பிறர் சார்பில் பொறுப்பு வகிப்போர்.
உதாரணம்: தந்தை, மூத்த சகோதரன் அல்லது கலீபா போன்றோர்.
4.பாதுகாவலர் (அல் வாஸ்ஸீஃ): பராயமடையாத சிறுவர் அல்லது அங்கவீனர்
(காஷர்) சார்பில் அவர்களது பாதுகாப்புக்குப் பொறுப்பாய் உள்ளவர்.
இஸ்லாமிய ஷரீஆவின் கண்ணோட்டத்தில் ஒவ்வொரு பொறுப்பாளரும் (முகல்லப்f) தனது சுயவிடயங்கள் மற்றும் தன் கடமைகள் தொடர்பில் பொறுப்புச் சொல்ல வேண்டியவர் என்ற அடிப்படையில் சுயபொறுப்பாளராகவே (அல்-அஸீல்) கருதப் படுகிறார்.
இஸ்லாம் ஒவ்வொரு சுயபொறுப்பாளருக்கும் “விளாயாஹ்” எனப்படும் சுயநிர்ணய உரிமையை வழங்கியுள்ளது. இதனடிப்படையில் பிறிதொருவரை தன் சார்பில் பிரதிநிதியாய் நியமித்து அவருக்கு தமது பொறுப்புக்களைப் பகிர்ந்தளிப்பதற்கும் அது வாய்ப்பளித்திருக்கிறது. இந்தக் கட்டுரையில் நாம் “அல்வகாலாஹ்” எனப்படும் விருப்பினடிப்படையிலான பிரதிநிதித்துவம் வழங்குவது பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்று மட்டும் சுருக்கமாக ஆராய்வோம். இங்கு நாம் “விருப்பினடிப்படையிலான” என்று குறிப்பாக கூறக் காரணம் யாதெனில் சிறுவர்கள் மற்றும் வலது குறைந்தோர் விருப்பினடிப்படையிலன்றி அவசியத்தின் அடிப்படையில் கட்டாயமாக பிரதிநிதித்துவம் செய்யப்படுவோராய் இருப்பதனாலேயாகும்.
விருப்பினடிப்படையில் நியமிக்கப்படும் பிரநிதிநிதி:
விருப்பினடிப்படையில் நியமிக்கப்படும் பிரநிதிநிதி
இரு வகைப்படுவர்.
(அ) குறித்தவொரு செயற்பாட்டுக்கான(காஷ்ஷாஹ்) பிரநிதிநிதியாக மட்டும் நியமித்தல்
(ஆ) தனது அனைத்துச் செயற்பாடுகளுக்கும் பொதுவாய் (ஆம்மாஹ்) நியமித்தல்.
இவ்விரு வகை நியமனங்களும் மேலும் இரு வகைகளாக பிரித்துப்பார்க்கப்படும் அதாவது அப்பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் ஒன்றில்
1. மட்டுப்படுத்தப்பட்டவையாக (முகைய்யதாஹ்) அல்லது
2. மட்டுப்படுத்தப்படாதவையாக (முத்லகாஹ்) அமையலாம்:
அ) குறித்தவொரு செயற்பாட்டுக்கான (காஷ்ஷாஹ்) பிரநிதிநிதியாக மட்டும்
நியமித்தல்- உ-ம்: நீங்கள் உங்களது காரை விற்றுத் தரும்படி பிறிதொருவரை
நியமித்தல்.
மேலும் இந்நியமனம் பின்வரும் இரண்டு விதங்களில் அமையலாம்:
4. பொறுப்பொப்படைப்பு செய்யப்படும் அம்சம் அல்லது பொருள் (அல் முவக்கல் பீ)
ஒப்படைப்பவருக்கு இருக்க வேண்டிய தகைமைகள்:
இவ்வாறு ஒப்படைப்பவர் புத்திசாதுர்யமானவராகவும்(ஆக்கில்),
பராயமடைந்தவராகவும்(பாலிஹ்), சுயஆற்றல்மிக்கவராகவும்(ராஸித்) மற்றும்
தீவிர அங்கவீனமேதும் அற்றவராயும் (காஷர்) இருத்தல் அவசியம். மேலும் அவர்
ஷரிஆவினால் ஹலாலாக அனுமதிக்கப்பட்டவைகளை மட்டுமே பொறுப்புச் சாட்ட முடியும். மேலும் அவற்றின் உரிமையாளராயாய் அல்லது அவ்வாறு அவற்றை ஒப்படைப்பதற்கான அதிகாரமுடையவராக இருத்தல் வேண்டும்.
பிரதிநிதித்துவம் செய்பவருக்கு இருக்க வேண்டிய தகைமைகள்:
இவ்வாறு பிரதிநிதித்துவம் செய்பவர் புத்திசாதுர்யமானவராகவும்(ஆக்கில்),
பராயமடைந்தவராகவும்(பாலிஹ்), சுயஆற்றல்மிக்கவராகவும்(ராஸித்) மற்றும் தீவிர அங்கவீனமேதும் அற்றவராயும் (காஷர்) இருத்தல் அவசியம்.
இப்பிரதிநிதி ஷரிஆவினால் ஹலாலாக அனுமதிக்கப்பட்டவைகளை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும்.
பொறுப்பொப்படைவு ஒப்பந்தம் தொடர்பான நிபந்தனைகள்:
பொறுப்பை ஒப்படைப்பவருக்கும் பிரதிநிதியாய் இயங்கவிருப்பவருக்கும் இடையே குறிப்பிட்ட அமானிதம் தொடர்பில் முன்மொழிவும்(ஈஜாப்), ஏற்றுக்கொள்ளுதலும் (கபூல்) முறையே இடம்பெறல் வேண்டும்.
இவ்விரு சாரார் மீதும் எவ்வித பலவந்தப்படுத்தலும் இடம்பெறல் கூடாது. அத்துடன் ஒப்பந்தத்தின் வார்த்தைகள் தெளிவானவையாகவும் கருத்து மயக்கமற்றவையாகவும் அமைதல் வேண்டும்.
அமானிதம் செய்யப்படும் அம்சம் அல்லது பொருள் தொடர்பான நிபந்தனைகள்:
பொறுப்பை ஒப்படைப்பவர் மற்றும் சம்பந்தப்பட்டோர் சகலரும் ஷரீஆவின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டதா என்று நிச்சயப்படுத்திக் கொள்ளும்
பொருட்டு பொறுப்பொப்படைக்கப்படும் குறிப்பிட்ட பொருள் அல்லது அம்சம் எது என்பதை தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். (உ-ம்: எனது காரை 40 இலட்சத்திற்கு விற்கவும்! அல்லது கலந்தாலோசனை சபையில் என் சார்பில் பிரதிநிதியாக இயங்குக! போன்ற ஒப்படைப்புகள்). விற்றல், வாங்கல், நன்கொடைவழங்கல் மற்றும் ஒப்பந்தம் போன்ற செயற்பாடுகள் யாவுமே ஷரீஆவால் அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள் இருத்தல் மிகவும் அவசியமாகும். (உ-ம்: ஒரு பிரதிநிதியிடம் தன் சார்பில் சாராயம் விற்கும்படியோ, அட்டூழியம் பண்ணும்படியோ அல்லது சட்டமியற்றும்படியோ கோர அனுமதியில்லை)
நாம் மேற்சொன்ன விளக்கத்தின் அடிப்படையில் சடவாத ஜனநாயக சட்டமன்றங்களுக்காக அதாவது பாராளுமன்றங்களுக்காக நடைபெறும் தேர்தல்களில் வாக்களித்தல் பற்றி ஆராய்வோமானால்…
அச்செயல் குறித்தவொரு செயற்பாட்டுக்கான (காஷ்ஷாஹ்) அதேவேளை மட்டுப்படுத்தப்படாத (முத்லகாஹ்) ஒரு பிரதிநிதித்துவமாய் இருப்பதைக் காணலாம். இங்கு பொறுப்பொப்படைப்பவராக வாக்களிப்பவரும் பொறுப்பின் பிரதிநிதிநியாக தேர்தல் அபேட்சகரும் காணப்படுகின்றனர். அத்துடன் இப்பிரதிநிதி தன் சுய கொள்கைகளின் அடிப்படையில் அரசாங்கத்தின் முன்னிலையிலும் மற்றும் சட்டமியற்றும் செயற்பாடுகளின் போதும் பொறுப்பொப்படைப்பாளரைப் பிரதிநிதித்துவம் செய்தலே இங்கு பொறுப்பொப்படைக்கப்படும் அம்சமாகும்.பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை இதற்கு நல்ல உதாரணமாய் கூறலாம். அவர் தனக்கு வாக்களித்த மக்கள் சார்பில் அவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துபவராய் சட்டமியற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்.
பொறுப்பொப்படைக்கும் (வக்காலாஹ்) நடைமுறைக்கு வஹீயின் முக்கிய ஆதாரங்களாக பின்வரும் சம்பவங்கள் கொள்ளப்படுகின்றன. ஒருமுறை ரஸூல் (ஸல்) அவர்கள் ஓர் ஆட்டை அவரது சார்பில் கொள்வனவு செய்யும் பொறுப்பைத் தன்னிடம் ஒப்படைத்திருந்தார்கள் என ஹாகிம் இப்னு ஹிஷாம் (ரழி) அறிவிக்கிறார்கள் (அபூதாவூத்,திர்மிதி)
அதேபோன்று இன்னுமொரு சந்தர்ப்பத்தில் ரஸூல் (ஸல்) அவர்கள் தன் சார்பில் ஆடொன்றை வாங்கி, பலியிட்டு தர்மமாகப் பங்கிடும் பொறுப்பை தனது தந்தையார் அபூ அர்வா அல் பாரிகியிடம் ஒப்படைத்திருந்ததாக அர்வா (ரழி ) அவர்கள் கூறுகிறார்கள் (புகாரி, அஹமத்)
மேலும் அபூசுப்யானின்(ரழி) மகளான உம்மு ஹபீபா(ரழி) அபிஸீனியாவில் தங்கியிருந்த போது அவர்களின் நிகாஹ் ஒப்பந்தத்தை நிறைவேற்றி வைக்கும் பொறுப்பை நபிகளார் தனக்குப் பதிலாக அம்ரு பின் உமையா அத்மூரி (ரழி) யிடம்ஒப்படைத்திருந்தார்கள் (அபூதாவூத்).
இதே போன்று நபிகளார் (ஸல்) தன் சமூகத்தார் மீதான நிர்வாக விடயங்களை பராமரிக்கும் பொறுப்பை பலாிடமும் மற்றும் திணைக்களங்களிடமும் ஒப்படைத்திருந்தார்கள். (உ-ம்:ஷகாத்தை வசூலித்தல், நன்கொடைகளைப் பங்கிடல், பிணக்குகளைத் தீர்த்து வைத்தல் போன்ற பணிகளைக் குறிப்பிடலாம்)
அதேவேளை நபி (ஸல்) அவர்கள் “படைப்புக்களின் கட்டளைகள் படைப்பாளனாகிய
அல்லாஹ்வுக்கு அடிபணியாத நிலைக்கு இட்டுச்செல்லக்கூடியனவாய் இருப்பின் அவற்றுக்கு கீழ்ப்படிதலாகாது” (அஹ்மத்) என்றும் இன்னுமொரு சந்தர்ப்பத்தில் அலீ (ரழி) மூலமான அறிவிப்பின்படி “தீய விடயங்களில் எவருக்கும் அடிபணியத் தேவையில்லை. நற்காரியங்களில் மட்டுமே அடிபணிவு
உண்டு” (முஸ்லீம்) எனவும் வலியுறுத்திக்கூறியுள்ளார்கள்.
இவ்வறிவுறுத்தல்களின்படி பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அம்சம் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவொன்றாக இல்லாமலிருத்தல் அவசியம் என்பது தெளிவாகின்றது. மற்றும் பிரதிநிதியானவர் மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ள, அநீதி, அராஐகம், குப்ர் அல்லது சட்டமியற்றல் போன்ற செயற்பாடுகளில் எக்காரணம் கொண்டும் ஈடுபட இயலாது என்பதும் தெளிவாகின்றது.
எவர்கள் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட (சாராய விற்பனை அல்லது மனிதன் தனது சுய விருப்பப்படி சட்டமியற்றலுக்கு ஆதரவளித்து வாக்களித்தல் போன்ற உதாரணங்களையொத்த) விடயங்களுக்காகப் பிரதிநிதியை நாடுகிறார்களோ அவர்கள் அப்பிரதிநிதிக்குக் கிடைக்கும் பாவம் மற்றும் தண்டனையிலே பங்குதாரராகி விடுவர் என மாபெரும் அறிஞர்களான இமாம் அல் மக்தீஸி, அல் கஸானி, அல்குராபி போன்ற பெரும்பாலான இமாம்கள் கூறுகின்றார்கள்.
அபூ ஹுரைரா (ரழி) அவர்களின் அறிவிப்பின்படி நபி (ஸல்) “யாராவது மற்றவர்களை நல்வழியின்பால் அழைப்பின் அவருக்கும் அவரை அந்நற்காரியத்தில் பின்பற்றுபவர்களுக்குக் கிடைக்கும் அதேயளவு நன்மை (பின்பற்றுவோருக்கு எந்தக் குறைவும் நேராமல்) கிட்டும். அவ்வாறே யாராவது பிறரைத் தீயவழியின்பால் அழைப்பின் அவருக்கும் அவரை அத் தீயகாரியத்தில்
பின்பற்றுபவர்களுக்குக் கிடைக்கும் அதேயளவு தீமை (பின்பற்றுவோருக்கு எந்தக் குறைவும் நேராமல்) கிட்டும்” எனக் கூறியுள்ளார்கள்.
மாபெரும் இஸ்லாமிய அறிஞர்கள் எல்லாம் இஸ்லாம் தடுத்திருக்கும் எந்தவொரு செயற்பாட்டையும் பிரதிநிதிகளிடம் பொறுப்பொப்படைக்க முஸ்லீம்கள்
அனுமதிக்கப்படவில்லை என்பதில் ஒருமித்த கருத்துடன் உள்ள போதிலும் நம் மத்தியிலுள்ள சிலர் “இரு தீங்குகளில் குறைந்ததை தெரிதல் “the lesser of the two evils” என்ற நியாயப்படுத்தலை இஸ்லாமியக் கட்டளைக்கு மாறு செய்வதற்கான சந்தர்ப்பரீதியான அனுமதியாய் முன்வைக்க முனைகின்றனர்.
மேற்படி “இரு தீங்குகளில் குறைந்ததைத் தெரிதல் “the lesser of the two evils” என்ற வாதத்தின் ஆதரவாளர்கள் முஸ்லீம்களின் பொதுநலனை மையமாகக் கொண்டு ‘இரு தீங்குகளையும் ஒப்பிட்டுப் பார்த்து மிகத்தீங்கானதை விட்டு விட்டு சற்று குறைந்ததை ஏற்றுக் கொள்ளல்’ என்ற அடிப்படையில் தங்களின் இவ் ஆய்வுக் கணிப்பு (இஸ்தித்லால்) நியாயமானதாக அமைந்துள்ளது என்கின்றனர். இவ்வாதம் தவறானதொன்றாகும். ஏனெனில் தன் படைப்புக்களுக்கு நன்மை பயக்கக்கூடியது எது அல்லது தீமை தரக்கூடியது எது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை, அதிகாரம் ஈருலகின் அதிபதியாகிய அல்லாஹ் (சுபு) தஆலாவிடம் மாத்திரமே உள்ளது. ஷரீஆ எதை வலியுறுத்தியுள்ளதோ அதுதான் நன்மை, பயன்மிக்கது எதைத் அது தடுத்துள்ளதோ அதுதான் தீங்கானது என்பதுதான் சாியான கருத்தாகும். இதையே அல்லாஹ் பின்வரும் வசனத்தில் விளக்குகிறான்;
“… ஒன்றை நீங்கள் வெறுக்கலாம். அது உங்களுக்கு நன்மையானதாக இருக்கும். ஒன்றை நீங்கள் விரும்பலாம். அது உங்களுக்குக் கெட்டதாக இருக்கும். அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்” (2:216)
இமாம் இப்னு கதீர் தனது தப்ஃஸீரில் இவ்வசனத்தைப் பற்றி கூறுகையில்”அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்” என்று இந்த வசனம் கூறுகிறது. அதாவது உங்கள் செயல்களின் பின்விளைவுகளை உங்களைவிட அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்; உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் எது நலன் பயக்கும் என்பதை அவனே நன்கறிவான். ஆகவே அவனது அழைப்புக்குப் பதிலளியுங்கள்; அவனது கட்டளைக்குப் பணியுங்கள். இதனால் நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்.” என விளக்குகிறார்.
ஆகையால் இந்த “the lesser of the two evils” நியாயத்தை ஜனநாயக அரசியலுக்கு சாட்டாகச் சொல்வதற்கு இஸ்லாத்தில் எவ்வித ஆதாரமும் கிடையாது. பலர் அடிக்கடி இத் “தீங்கான” நியாயத்தையும் அதியுச்ச நிர்ப்பந்த சூழ்நிலை(தரூராஹ் ) க்கு மட்டுமேயுரிய மாா்க்க விதிவிலக்குகளையும் ஒன்றுடன் ஒன்று குழப்பிக் கொள்ள முற்படுகின்றனர். அரைகுறை அறிவு முழுமையான அறிவீனத்தை விட ஆபத்தானது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.
தரூராஹ் எனப்படும் கட்டாய நிர்ப்பந்த சூழ்நிலை என்பது வாழ்வா சாவா என்ற சூழ்நிலையில் உச்சக்கட்ட உயிராபத்தின் போதான நிர்ப்பந்தம் என்பதையே ஷரீஆ தெளிவாக வரையறுக்கிறது. உதாரணமாக யாராவது சித்திரவதைக்குள்ளாக்கப் பட்டு அவரது உயிருக்கு உடனடி ஆபத்து நேரிடும் அபாயநிலை போன்ற நிலையையே ஷரீஆ தரூராஹ் என வரையறுக்கிறது. அவ்வாறில்லாமல் இவ்விடயம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட அனுமானங்களுக்கு எவ்வித கட்டுப்பாடுமில்லாமல் விட்டுவிடப்படவில்லை
.
மனித சிந்தனையின் அடிப்படை பலவீனம் காரணமாக எது உண்மையான அனுகூலம் எது உண்மையான தீங்கு எது என்பதை எவரும் நிச்சயித்துக் கூறமுடியாது. மனிதன் தனதும் இப்பிரபஞ்சத்தினதும் உள்ளாா்ந்த சாராம்சத்தை அறிந்தவனல்ல. அதை பூரணமாக அறியும் ஆற்றலுடனும் அவன் படைக்கப்படவில்லை. எனவே நல்லது எது, கெட்டது எது என முடிவெடுக்கும் பொறுப்பை மனித மூளையிடம் ஒப்படைப்பது மிகவும் ஆபத்தானதும், யதாா்த்தத்திற்கு முரணானதுமாகும். மனிதன் குறித்த சம்பூரண அறிவை கொண்டுள்ள அவனது படைப்பாளனைத் தவிர அவனுக்கு அனுகூலமளிக்கக் கூடியது எது தீங்கிழைக்கக் கூடியது எது என்பதை வேறு யாராலும் விளங்கிக் கொள்ளமுடியாது. இந்த யதாா்த்தத்தை நாம் புாிந்து கொண்டொமானால் அல்லாஹ் (சுபு) தடுத்த விடயங்களில் அடிப்படையில் பலன் ஏதும் கிடையாது என்பதை நாம் இலகுவாகப் புாிந்து கொள்ளலாம். அத்துடன் அவன் இவ்வாறு தடுத்த ஏதாவது ஒன்றிலிருந்து பலனடைய நாம் முயற்சிப்பதையும் அவன் கடுமையாகத் தடை செய்துள்ளான்.
“…ஒரு போதும் அல்லாஹ் வெட்கக்கேடானதை ஏவ மாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?”(அல்குர்ஆன் 7:28)
இஸ்லாத்துக்கு முரணான சாத்தானிய நம்பிக்கைகளை அடிப்படைகளாகக் கொண்டியங்கும் சமூகத்தினருக்குள் வாழ்ந்து வரும் முஸ்லீம்களாகிய நாங்கள் நம் இஸ்லாமிய விதிமுறைகளை தொடர்ந்தும் இடைவிடாமல் பின்பற்றுவதற்கு அதீத முயற்சியெடுக்க வேண்டும். அத்துடன் நாம் ஏனைய சமூகத்தினரது சீர்திருத்தத்தில் செல்வாக்கு செலுத்த வேண்டுமே தவிர, அச்சீரற்ற சமூகங்களின் சமூகவொழுங்கு மற்றும் நியமங்களினால் பாதிப்புற்றவா்களாக நாம் மாறிவிடக் கூடாது. இது நாம் நிறைவேற்ற வேண்டிய உன்னதமான பொறுப்பாகும். ஏனெனில் எந்தவொரு அந்நிய நாகரீகங்களும் நெருங்கிவரக்கூட முடியாத மகத்துவமிக்கதொரு நாகரீகத்தின் சொந்தக்காரா்கள் நாம். இலங்கையா் உட்பட முழு மனித சமுதாயத்திற்குமான வழிகாட்டியாக வந்த இறைத்தூதை சுமந்திருப்பவர்களாக முஸ்லீம்களாகிய நாமே இருக்கிறோம். அல்ஹம்துலில்லாஹ். நாம் எம்மைச் சூழவுள்ள ஏனைய சமூகத்தினருடன் புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொண்டு முஸ்லீம்கள் முறையாக வாழக்கூடிய இஸ்லாமியச் சூழலை உருவாக்குதற்கும், சீரிய இஸ்லாத்தின் பால் அழைக்கும் தஃவாவுக்கான நற்சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொள்வதற்கும் முயல வேண்டும். மேலும் அப்புரிந்துணர்வின் அடிப்படையில் இச்சமூகத்தில் வாழும் சிறுபான்மை முஸ்லீம்கள் தங்களுக்கென ஷரீஆ விதித்துள்ள விவாக சட்டங்கள், ஹலால் உணவு, பெண்களுக்கான ஆடையொழுங்கு மற்றும் ஏனைய கடமையாக்கப்பட்டுள்ள விதிமுறைகள் யாவற்றையும் தங்கு பின்பற்றுவதற்கான சூழலை உருவாக்க முனைவதே எமக்குள்ள இவ்விடயங்கள் யாவும் நாம் ஹராமான செயற்பாடுகளுக்குள் கட்டாய நிர்ப்பந்த சூழ்நிலை (daruraah) க்கென இஸ்லாம் அனுமதித்திருக்கின்ற விதிகளுக்குள் அபயம் தேடாமல் நின்றும் விதித்துத் தந்திருக்கும் வழிமுறையைப் பின்பற்றுவதன் மூலம் அடைந்துகொள்ளக் கூடியவையே.இன்ஷா அல்லாஹ்.
அல்லாஹ் (சுபு) தஆலா ஹராம்களுக்குள் இடறி விழாமல் தவிர்ந்து வாழ்வதற்கியைவாய் தாராளமான ஹலாலான வழிகளை நமக்கு அமைத்துத் தந்திருக்கின்றான். மேலும் அவன் எமது தேவைகளை நிறைவேற்றிக் கொளவதற்கான பல்வேறு மாற்றுவழிகள் மற்றும் உபாயங்களையெல்லாம் போதியளவு நல்கியேயுள்ளான்.
எவ்வாறாயினும் இப்படியான மாற்றுவழிகள் மற்றும் சில நடைமுறை உபாயங்களைத் தற்போதைக்கு நாம் கையாண்ட போதும் இம்முனைவுகள் யாவும் ஷரீஆவின் அடிப்படையிலே ‘ஒரே’ தீர்வான இஸ்லாமிய அரசமைப்பை மீள்நிறுவும் அவசியப்பணிக்கு மாற்றீடாக ஒருபோதும் அமையாது. இம்மாற்றமே உண்மையில் எமது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவும்; எம் பிரச்சினைகளுக்கான நிரந்தரத்தீர்வைக் காணவும் வழிவகுக்கும். எமது உம்மத் தற்போது அனுபவித்து வரும் துன்பங்கள், பின்னடைவுகள் மற்றும் அதன் மீது நாளாந்தம் திணிக்கப்பட்டு வரும் இழிவுபடுத்தல்கள், அநியாயங்களுக்கான காரணம் எமக்கென முறையான ஓர் தலைமை காணப்படாமையேயாகும். முஸ்லீம்களின் அமீரானவரே தனக்குக் கீழுள்ள மக்களது விடயங்களுக்குப் பொறுப்பாயிருப்பதுடன் அவர்களுக்கு நேரிடக்கூடிய தாக்குதல்களிலிருந்தும் பாதுகாப்பளிப்பவராகவும் இருப்பார்.
“இமாம் என்பவர் கேடயம் ஆவார். அவர் பின்னால் நின்று (மக்கள்) போர்புரிவார்கள். இன்னும் அவரைக் கொண்டே தங்களை பாதுகாத்துக் கொள்வார்கள்” (முஸ்லிம்)
முஸ்லிம் உம்மத்தை கேடயமாக பாதுகாப்பவர் கலீஃபா என்பதால், அந்த கேடயம் எல்லா காலத்திலும் இருக்கவேண்டியது அவசியமான ஒன்றாகும். நாம் முதலில் இந்த யதார்த்தத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியமிருப்பதுடன் இஸ்லாமிய அரசை முஸ்லீம் நாடுகளில் நிறுவுவதன் மூலம் உம்மத்தின் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு காண்பதற்காய் தொடர்ந்தும் உழைத்து வரும் விசுவாசமிக்க நம் சகோதரர்களுடன் கரங்கோர்த்து, ஆதரவளித்து உழைப்பதே சாலச் சிறந்தது. இதன் மூலமே முஸ்லீம்கள் இம்மை மறுமை இரண்டிலும் வெற்றிபெற முடியும்… இன்ஷா அல்லாஹ்!