கடந்த காலத்தில் நமது நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலையின் காரணமாக 16க்கு மேற்பட்ட ஆயுதக்குழுக்கள் இயங்கி வந்ததாகவும் அந்த குழுக்களில் முஸ்லிம் இளைஞர்கள் சேர்வதைத் தடுத்து அந்த இளைஞர்களை ஆயுத இயக்கங்களின் பக்கத்தில் ஈர்க்கக் படுவதில் இருந்து அரசியல் இயக்கத்தின் பக்கம் இணைந்து செயட்படுவதற்க்காகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் இயக்கத்தை மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்கள உருவாகியதாக அக்கட்சியின் ஆரம்பகால உறுப்பினரும் செயலாளரும் சுகாதார இராஜாங்க அமைச்சருமான ஹசன் அலி தெரிவித்தார்.
விளிமியன்களைக் காக்கும் விளிதுகள் எனும் தலைப்பில் 2000 இளைஞர்களுடன் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களும், பிரமுகர்களும் கலந்து கொள்ளும் இளைஞர் மாநாடு சம்மாந்துறை விளினயடி சந்தியில் இடம்பெறுவது தொடர்பாக பத்திரிகையாளர்களை தெளிவூட்டும் பத்திரிகையாளர் சந்திப்பு, இளைஞர் மாநாட்டின் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் மாகாணசபை உறுப்பினருமான ஆரிப் சம்சுதீன் அவர்களது தலைமையில் 2015-08-06 ம் திகதியன்று சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் ஹசன் அலி மேற்படி கருத்துக்களை தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை இந்த நிலைக்கு உயர்த்தியவர்கள் இளைஞர்கள் தான் என்று தெரிவித்த அவர், முஸ்லிம்களின் அபிலாசைகை அடைவதில் முன்னிலையில் திகழும் இந்த இயக்கத்துக்கு இளைஞர்களின் சக்தி இன்றியமையாதது என்றும் தெரிவித்தார். முஸ்லிம்கள் எதிர்காலத்தில் எதிர்நோக்கவுள்ள சவால்களை வெற்றிகொள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் அவசியம் என்று தெரிவித்த அவர், வெறும் பசப்பு வார்த்தைகளுக்கு இடம்கொடுக்காது இந்த இயக்கத்தை பாதுகாக்க முன்வருமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
நடக்கவிருக்கும் தேர்தல் தொடர்பாகவும் அந்த தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்கள் வகுத்துக்காட்டிய வியூகத்தின் அடிப்படையில் மூன்று தொகுதிக்கும் மூவரை நிறுத்தியுள்ளதாகவும் இந்த மூவருக்கும் வாக்களிப்பவர்களையே உண்மையான முஸ்லிம் காங்கிரசின் போராளிகளாக முஸ்லிம் காங்கிரஸ் கருதும் என்றும் தெரிவித்தார்.
எதிர்வரும் 09-08-2015ல் சம்மாந்துறை விளினயடி சந்தியில் இடம்பெறவுள்ள இளைஞர் மாநாடு காலை 9.30க்கு ஆரம்பிக்கவுள்ளதாகவும் இளைஞர்களை மாநாட்டு இடத்துக்கு அணிதிரளுமாறும் மாநாட்டின் ஏற்பாட்டாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் மாகாணசபை உறுப்பினருமான ஆரிப் சம்சுதீன் அழைப்பு விடுத்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் பாராளமன்ற உறுப்பினர்களும் தற்போதைய வேட்பாளர்களுமான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசீம் மற்றும் முன்னாள் கிழக்குமாகாண சுகாதார அமைச்சரும் வேட்பாளருமான எம்.ஐ.எம்.மன்சூர் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.நஸீர்,கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் கல்முனை மாநகரசபையின் பிரதி முதல்வருமான ஏ.எல்.ஏ.மஜீத், அமைச்சர் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களின் இணைப்பாளர் ரஹுமத் மன்சூர், மாநகரசபை உறுப்பினர்களான எம்.ஐ.எம்.பிர்தௌஸ்,ஏ.எம்.பரக்கத்துல்லாஹ் மற்றும் பொறியலாளர் இபத்துல் கரீம் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கருத்து வெளியிட்டனர்.