நீதிமன்றத்தில், செம்டெம்பர் மாதம் 16ஆம் திகதி ஆஜராகுமாறு மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் எனக்கு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், இன, மத மற்றும் அரசியல் மூலம் என்னை பழிவாங்க காத்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் உண்மை என்ன?என்பதை நீதிமன்றத்தின் மூலம் நிரூபிப்பது மாத்திரமல்லாது, எனது மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக சிறைக்கு செல்லவும் தயங்கமாட்டேன் என்று கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
கடந்த ஆட்சி காலத்தில் சட்டபூர்வமாகவே மீள்குடியேற்றம் செய்யப்பட்டது என்பதற்கான சான்றும் 1906ஆம் ஆண்டு முதல் மக்கள் முசலி,கொண்டச்சி, முள்ளிக்குளம், கரடிக்குளி, மறிச்சிக்கட்டி ஆகிய இடங்களில் வாழ்ந்தார்கள் என்பதற்குரிய காணி உறுதி பத்திரங்களும் என்னிடம் உண்டு.
1990ஆம் அங்கு வாழ்ந்த மக்களின் வாக்காளர் இடாப்பும் என்னிடம் உண்டு. 15,125 ஏக்கர் காணிகளிலும் மேற்குறிப்பிட்ட கிராம மக்களே குடியேற்றப்பட்டுள்ளனர் என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்து காட்டுவேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க கடந்த மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற நபரும் கடந்த அரசாங்கத்திலுள்ள சிலரும் எனது அரசியல் வாழ்க்கைக்கு இழிவை ஏற்படுத்த முயற்சிப்பது மாத்திரமல்லாது எனக்கு எதிராக செயற்படுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு என்னைப்பற்றி ஏற்கெனவே முறைப்பாடு செய்யப்பட்டிருந்த போது, இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு நான், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளருக்கு கூறியிருந்தேன்.
இந்நிலையில், அந்த நபரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை வாபஸ் பெறவேண்டுமாயின் 4 கோடி ரூபாய் தனக்கு செலுத்த வேண்டும் என்று என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டுள்ளார் என்றும் அமைச்சர் கூறினார்.
இது குறித்து தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரியவுக்கு எழுத்து மூலமான கடிதமொன்றையும் அனுப்பியுள்ளேன் என்று தெரிவித்த அமைச்சர் இது குறித்த குற்றப்புலனாய்வு பிரிவினருக்கும் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.