ஐ.தே.க. ஆட்சியில்தான் முஸ்லிம்கள் தன்மானத்துடன் வாழ முடியும்; அஸ்வான் மௌலானா சூளுரை!

z (4)_Fotor
பதவி மோகத்தினால் மஹிந்த ராஜபக்ஷவிடம் மண்டியிட்டு, ஐக்கிய தேசியக் கட்சியை பலவீனப்படுத்திய சக்திகள் எல்லாம் இன்று யதார்த்தத்தை உணர்ந்து எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் காலடிக்கு வந்துள்ளனர் என முஸ்லிம் சமய விவகார அமைச்சின் இணைப்பாளரும் ஐ.தே.கட்சியின் கல்முனைத் தொகுதி பிரசார செயலாளருமான அஸ்வான் சக்காப் மௌலானா தெரிவித்தார்.
சாய்ந்தமருது பௌசி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐ.தே.க. பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது;                         
“எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிகப்படியான ஆசனங்களை கைப்பற்றி ஜ.தே.கட்சி இன்றுள்ள நல்லாட்சியைத் தக்கவைத்து புதுயுகம் கானும் பாராளுமன்றம் ஒன்றை அமைக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.
எமது ஐ.தே.கட்சி நீண்ட காலமாக இந்த நாட்டில் ஆடிசியமைக்க முடியாமல் முடக்கப்பட்டிருந்தது. இந்நாட்டின் சரித்திரத்தில் கொடுங்கோல் ஆட்சியாளராகத் திகழ்ந்த மகிந்த ராஜபக்ஸ, எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஆட்டம்காணச் செய்து, ஐ தே.கட்சியை முழுமையாக அழிக்க முற்பட்டபோது கட்சிக்குள் கூட பாரிய நெருக்கடிகள், குழிபறிப்புகள் ஏற்பட்ட போதிலும் அவற்றை முறியடித்து கட்சியை காப்பாற்றிய ஒரு வலுவான தலைமைத்துவமே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவாவார். 
அப்படி பல சவால்களுக்கு மத்தியில் மஹிந்த ராஜபக்ஷவின் அதிகார பலத்துடன் மோதி ஐக்கிய தேசியக் கட்சியை அவர் பாதுகாத்ததனாலேயே மைத்திரிபால அதில் பயணித்து ஜனாதிபதியாகியதுடன் நாட்டில் நல்லாட்சியும் மலர்ந்துள்ளது என்பதை எவரும் மறக்க முடியாது.
ஐ.தே.கட்சியின் ஆட்சிக் காலத்தில்தான் முஸ்லிம்கள் தன்மானத்துடனும் அடிப்படை உரிமைகளுடனும் தலைநிமிர்ந்து வாழ்ந்துள்ளனர் என்பது வரலாறாகும். அத்துடன் இன்று விலைவாசியைக் கட்டுப்படுத்தி, பசி பட்டினியை இல்லாமல் செய்து ஏழை மக்களின் வாழ்வை ஒளிமயமானதாக மாற்றியமைத்த பெருமை எமது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையே சாரும்.
புதவி, சுக போகங்களுக்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கு துரோகமிழைத்து விட்டு மகிந்த அரசாங்கத்துடன் இணைந்து ஐ.தே.கட்சியை மட்டுமல்லாமல் நாடாளுமன்றத்தில் எதிரணியைக் கூட பலவீனப்படுத்தி கொடுங்கோல் ஆட்சியைப் பலப்படுத்தியயவர்கள் இன்று மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவோடு கைகோர்த்திருப்பத்துடன் அவர்தான் இந்த நாட்டுக்கு சிறந்த, நேர்மையான தலைவர் என்று புகழாரம் சூட்டுகின்றனர்.
மக்களின் மனமாற்றத்தினால் ஏற்பட்ட எழுச்சியில் அள்ளுண்டே முஸ்லிம் தலைவர்கள் இவ்வாறு தமது தவறுகளை உணர்ந்து இன்று மீண்டும் ஐ.தே.க.வில் சங்கமித்துள்ளனர். அவர்களை நாம் வரவேற்கின்றோம். எமக்கு எதுவும் வேண்டாம். நீங்களே அனைத்தையும் அனுபவியுங்கள். ஆனால் மக்களுக்கு கொஞ்சமாவது சேவையாற்றுங்கள் என்பதுதான் எமது வேண்டுகோளாகும். இல்லா விட்டால் அது எமது ஐக்கிய தேசியக் கட்சியின் நல்லாட்சி மீதே அதிருப்தியை ஏற்படுத்தும். 
இனியும் மக்களை ஏமாற்ற முடியாது. யாருக்கு வாக்களிக்க வேன்டும் யாரை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் யார் சேவை செய்யக் கூடியவர் யார் சமூக அக்கறை கொண்டவர் என்பதை எல்லாம் மக்கள் தீர்மானித்து விட்டார்கள்” என்று அஸ்வான் மௌலானா குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் ஐ.தே.க. வேட்பாளர்களான தயா கமகே, எம்.எஸ்.எம்.றசாக், தேசியப் பட்டியல் வேட்பாளர் ஆசாத் சாலி உட்பட பலரும் உரையாற்றினர். இதில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
z (5)_Fotor