கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை முஸ்லிம்களில் 95 சத வீதத்திற்கும் மேலாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஸவினை எதிர்க்கும் நோக்கோடு மைத்திரிக்கு வாக்களித்திருந்தார்கள்.இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஸவிற்கு ஆதரவாக வாக்களித்த 5 சதவீத முஸ்லிம்களும்,முஸ்லிம் அரசியல் வாதிகளும் நான்கு நிலைப்பாடு கொண்டவர்களாக இருந்தார்கள் எனலாம்.
1.தங்களது சுயநலத்திற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவினை ஆட்சி பீட மேற்ற முயன்றவர்கள்.
2.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இப் பிரச்சினைகளுக்கு காரணமானவர் அல்ல.
3.முஸ்லிம்களின் பிரச்சினை தற்போதைய ஜனாதிபதி மைத்திரி வந்தால் மட்டும் தீருமா?
4.யாவரும் மஹிந்தவிற்கு எதிராக மாறிய நிலையில் மகிந்த வென்றால் முஸ்லிம்களின் நிலை என்ன?
இதில் முதலாம் கூட்டமாகிய தங்களது சுயநலத்திற்காக மகிந்தவினை ஆட்சி பீட மேற்ற முயன்றவர்கள் தங்களது சுய நலத்திற்காக இலங்கை முஸ்லிம்களின் வாழ்வினை அடமானம் வைத்தவர்கள் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.இவர்கள் தங்கள் சுயநலத்திற்காக எதையும் செய்ய முனைவார்கள் என்பதிலும் ஐயமில்லை.இவர்கள் நிச்சயமாக தௌபா செய்து அல்லாவிடம் பாவ மீட்சி பெற வேண்டும்.இல்லையென்றால் நிச்சயமாக அலாஹ்வின் தண்டனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள மாட்டார்கள்.மற்றைய மூன்று கூட்டத்தாரினதும் நோக்கமானது ஏதோ ஒரு கோணத்தில் சரியாக உள்ளதால் நாம் அவர்கள் குற்றம் சுமத்த முடியாது.(மகிந்த ராஜ பக்ஸவினை ஆதரித்தவர்களில் அநேகமானவர்கள் தங்களது சுய நலத்திற்காக ஆதரித்தவர்கள் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்).
இனி விடயத்திற்கு வருவோம்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஸவினை ஆதரிப்பது மிகவும் தவறானதும்,ஆபத்தானதும் என்பதனை உணர்ந்த இலங்கை முஸ்லிம்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஸவிற்கு எதிராக வாக்களித்து அவரினை மண் கவ்வச் செய்வதில் மிகப் பெரிய பங்களிப்பினை வழங்கியிருந்தார்கள்.ஜனாதிபதி அரியாசனத்தில் இருந்து கீழ் இறங்கிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு பல விடயங்களில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு உயர்ந்த பதவி தேவைப்பட்டது.இலங்கை ஜனாதிபதிகளில் யாரும் அனுபவித்திராத அதி கூடிய நிறைவேற்று அதிகாரத்தில் ஜொலித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தன் அந்தஸ்திலிருந்து ஒரு படி கீழ் இறங்கி பிரதமர்ப் பதவியினைக் குறி வைத்து தற்போது போட்டி இடுகிறார்.
எவ்வாறு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிலைக்கு வாக்களித்தால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும்,அன்னத்திற்கு வாக்களித்தால் தற்போதைய ஜனாதிபதி மைத்திரியும் ஜனதிபதியாவார்கள் என்ற நிலை காணப்பட்டதோ அவ்வாறே தற்போதும் வெற்றிலை வெற்றி பெற்றால் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவும்,யானை வெற்றி பெற்றால் ரணிலும் பிரதமராவார்கள் என்பது வெளிப்படை உண்மை.சிலர் ஜனாதிபதிக்கே பிரதமரினை நியமிக்கும் அதிகாரம் உள்ளதால் மைத்திரி மஹிந்தவிற்கு அப் பதவியினை வழங்க மாட்டார் என நியாயம் கற்பித்தும் வருகின்றனர்.ஜனாதிபதி தான் பிரதமரினைத் தீர்மானிப்பவராக இருப்பினும் தனது ஆட்சியினை கொண்டு செல்ல அறுதிப் பெரும்பான்மை உடைய ஒருவரிற்கே பிரதமர்ப் பதவியினை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.
தற்போதைய நிலையில் ஐ.ம.சு.கூ அதிகாரத்தினைக் கைப்பற்றினால் அது முற்று முழுதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த செல்வாக்கில் காணப்படுவதால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு பிரதமர்ப் பதவியினை வழங்கினால் மாத்திரமே ஆட்சியினை கொண்டு செல்ல முடியும் என்ற காரணத்தால் நிச்சயம் அவரிற்கே வழங்கப்படும்.
தற்போதைய நிலையினை நன்கு அவதானிக்கும் போது ஐ.ம.சு.கூ,ஐ.தே.க ஆகியன சம பலத்தில் உள்ளது போன்றதொரு நிலையினையே காணக் கூடியதாக உள்ளது.முன்னர் போன்றல்லாது இன வாத அம்புகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அணியினரிடமிருந்து எல்லையற்று பேரின மக்களிடம் சென்று கொண்டிருக்கின்றன.பேரினத்தினைச் சேர்ந்த பல இனவாத விக்கட்டுகள் இலகுவாக வீழ்த்தப்படும் நிலையும் தோற்றம் பெற்றுள்ளது.
மைத்திரி அணியின் ஆசீர் வாதம் ஐ.ம.சு.கூ இற்கு கிடைக்காத காரணத்தினால் சு.காவில் இருந்து அமைச்சர் ராஜித தலைமையில் பெயரளவில் ஒரு குழு வெளியேறியதே தவிர ஐ.ம.சு.கூ இன் வெற்றியில் தாக்கத்தினைச் செலுத்தும் ஒரு குழுவாக அதனைப் பார்க்க முடியாது.மகிந்த அணியிலிருந்தே கலைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிகமானோர் (150 இற்கும் மேற்பட்டோர்) போட்டி இடுகின்றனர்.ஜனாதிபதித் தேர்தல் போன்றல்லாது இத் தேர்தலினைப் பொறுத்த மட்டில் பிரபலங்கள் செல்வாக்கானது அதிகம் தாக்கம் செலுத்தும் என்பதால் மகிந்த அணி பலம் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
இன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த செல்லும் இடங்களில் எல்லாம் அதீத ஆதரவுகளினைப் பார்க்க முடிகிறது.இன்று கிடைக்கப்பெற்றுள்ள அனைத்து ஆய்வுகளும் ஐ.தே.க வே வெற்று பெறும் எனக் கூறினாலும் அனைத்து ஆய்வுகளும் மிகச் சிறிய வீதத்தினாலேயே வெற்றி பெறும் எனக் கூறுவது இங்கே கோடிடத்தக்க ஒரு விடயமாகும்.இந்த மிகச் சிறிய வேறு பாடு ஒரு மிகச் சிறிய நிகழ்வொன்றால் திடீர் என மாற்றமடையலாம்.எனவே,இத் தேர்தலில் நாம் அளிக்கப் போகும் வாக்குகள் ஒவ்வொன்றும் மிக முக்கியமானது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.கடந்த தேர்தல் போன்று சிறு பான்மை இனத்தவர்களாகிய எமது வாக்குகளே ஆட்சியினைத் தீர்மானிப்பதாகவும் அமைந்து விடலாம்.மஹிந்த ஆட்சி அமைத்தால் எமது நிலை என்னவாகும்? என்பதை நான் சொல்லித் தான் நீங்கள் அறிய வேண்டியதில்லை.
பல காரணங்களினால் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த அணியினர் பெற்றிராத பல ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்களின் வாக்குகள் இம்முறை ஐ.ம.சு.கூ இற்கு செல்லக் கூடிய நிலை இத் தேர்தலில் தோற்றம் பெற்றுள்ளது.இதில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்,முன்னாள் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,ஹுனைஸ் பாரூக்,முன்னாள் கிழக்கு மாகாண முதல்வர் நஜீப் ஏ மஜீத் போன்றவர்களினூடாக அதிக வாக்குகள் ஐ.ம.சு.கூ இற்கு செல்லக் கூடிய சாத்தியம் உள்ளது.இது நிச்சயமாக தடுக்கப்படல் வேண்டும்.கடந்த ஜனவரி 8ம் திகதி நிறுவப்பட்ட நல்லாட்சிக்கு முஸ்லிம் சமூகத்திலிருந்து மஹிந்த அரசில் முதன் முதல் கட்சி மாறி பங்களிப்பு வழங்கிய ஹுனைஸ் பாரூக் மஹிந்த அணியில் இருப்பது மிகவும் கவலைக் குரிய விடயமாகும்.
இத் தேர்தலானது ஒப்பீட்டளவில் ஏனைய சமூகத்தார்களினை விட முஸ்லிம் சமூகத்திற்கே மிகவும் முக்கியமானதொன்றாகும்.இத் தேர்தலில் மைத்திரி எவ் அணிலும் இல்லாத நிலையே காணப்படுகிறது.எவ் அணி வெற்றி பெறுகிறதோ அவ் அணி ஜனாதிபதியினை ஆட்டிப் படைக்கும் கட்சியாக இருக்கும்.இத் தேர்தலின் பிற்பாடு தேர்வாகப்போவது பிரதமர் என்பதை விட மீண்டும் ஒரு ஜனாதிபதி என்பதே மிகவும் பொருத்தமானதாகும்.நாம் வெற்றிலைச் சின்னத்திற்கு மீண்டும் வாக்களித்து மஹிந்தவினை பிரதமர் ஆக்குவதா?
நாம் வெற்றிலைக்கு அளிக்கப் போகும் வாக்குகளினூடாக எமது உறுப்புருமையினைப் பாதுகாக்க முடிந்தாலும் மறைமுகமாக தேசியப் பட்டியலினூடாக மஹிந்த அணியினரினைப் பலப் படுத்தப் போகிறது.இதன் மறு வடிவம் எமது வாக்குகள் உதய கம்பன்பில போன்ற இனவாதிகள் தேர்வாக வழி சமைக்கப் போகிறது.எனவே,நாம் வெற்றிலைக்கு வாக்களிப்பது எம் மீது நாமே நெருப்பினை அள்ளிக் கொட்டுவது போன்றாகும்.
நாம் மீண்டும் மஹிந்த ராஜ பக்ஸவிற்கு வாக்களிப்பது அடித்த பாம்பிற்கு மீண்டும் பாலூட்டுவதைப் போன்றாகும்.அடித்த குறித்த பாம்பினை பாலூட்டி புத்துணர்வூட்டுவதன் அதற்கு நன்றிக் கடனாக சில குறித்த நபர்கள் பாதுகாக்கப்படலாம்.ஆனால்,இவர்களின் செயல்கள் பலரினை வாழ்வினைப் பறித்துவிடும் என்பதை குறித்த முஸ்லிம்கள் ஒரு கனம் நினைவூட்டிக் கொள்ள வேண்டும்.அடித்தவர்கள் என்று வரும் போது புத்துணர்வூட்டுவதன் குறித்த வாக்காளர்களும் அகப்படலாம்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜ பக்சஸவிற்கு எதிராக வாக்களித்த ஒருவர் இத் தேர்தலில் மகிந்த ராஜ .பக்சஸவிற்கு வாக்களிப்பார்களாக இருந்தால் அது ஏதோ ஒரு சுய நலத்தின் விளைவாகவே இருக்கும்.இவ்வாறானவர்கள் தனது சுய நலத்திற்காக இலங்கை முஸ்லிம்களினை அடமானம் வைக்கிறார்கள் என்பதை உணர்ந்து இத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.இங்கே நாம் ஊரிற்கு எம்.பி வேண்டும் என்ற கோசத்திற்காக,தொழில் வாய்ப்புக்கள் வேண்டும் என்ற குறும் சிந்தனைகளுக்காக ஒரு சமூகத்தினை அடமானம் வைக்க வேண்டாம்.
தொடரும்……..
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை