இனவாதமற்ற அரசியலுக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் கீழ் ஒன்றுபடுமாறு அழைப்பு விடுக்கிறார் அமைச்சர் தயாரத்ன

1_Fotor u

-எம்.வை.அமீர்-

இலங்கையில் உள்ள கட்சிகளில் ஐக்கிய தேசியக்கட்சியே மக்களின் உணர்வுகளை மதித்து வேற்றுமை பாராது சகலரையும் சமமாக மதித்து செயற்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைப் போன்று வெளியே தன்னிடம் இனவாதமில்லை என்று கூறிக்கொண்டு உள்ளே பொதுபலசேன போன்ற அமைப்புக்களுக்கு ஊக்கம் கொடுப்பார் போன்ற நிலையில் தான் இல்லை என்றும் முழு இலங்கையிலும் விசேடமாக அம்பாறை மாவட்டத்திலும் பாரிய அளவில் அபிவிருத்தித் திட்டங்களை செய்துள்ளதாகவும் அம்பாறை மாவட்டத்தின் சிரேஷ்ட அரசியல்வாதியான தான் எப்போதும் பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களின் வாக்குகளை கேட்பதில்லை என்றும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும் அமைச்சரும் சிரேஷ்ட அரசியல்வாதியுமான பீ.தயாரத்ன அவர்கள் பங்குகொண்ட மக்கள் சந்திப்பு ஒன்று சாய்ந்தமருது ஒஸ்மான் வீதியில் உள்ள, ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான அஸீஸ் அவர்களது இல்லத்தில் இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், இன்று சிலர் அம்பாறைக்கு துறைமுகத்தைக் கொண்டுவருகின்றோம் புகையிரத்தத்தைக் கொண்டுவருகின்றோம் என்றெல்லாம் மக்களை ஏமாற்ற முனைவதாகவும் அவ்வாறான முடியாதவைகளை தான் கூறுவதில்லை என்றும் தெரிவித்தார்.

இப்பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் தலைமைகளுடன் இணைந்து பிரதேச அபிவிருத்திக்கு செயட்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்திலும் அவ்வாறே செயட்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ் சிங்கள முஸ்லிம் என்ற பேதமின்றி செயற்பட முன்வருமாறு அழைப்பு விடுத்த அமைச்சர் தயாரத்ன, அவ்வாறு பிரிந்து நின்றதாதல் மனங்களில் விரிசல் ஏற்பட்டதைத் தவிர வேறு ஒன்றும் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் பிரதேசத்தை கட்டியெழுப்ப ஒன்றுபடுமாறு தெரிவித்த முன்னாள் அமைச்சர், தன்னைப்போன்ற சிரேஷ்டமானவர்களை தெரிவு செய்வதனால் உண்மையான பலனை இம்மக்கள் அடைவர் என்றும் தெரிவித்தார்.

மர்சூக் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் அம்பாறை மாவட்ட தேர்தல் இணைப்பாளரும் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளருமான ஹசன் அலி, கல்முனைத் தொகுதி பிரச்சார செயலாளரும் முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சின் இணைப்பாளருமான அஸ்வான் சக்கப் மௌலானா மற்றும் ஹசன்  உள்ளிட்ட பிரமுகர்களும் ஐக்கிய தேசியக்கட்சியின் அதிதீவிர ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

2_Fotor a_Fotor m