எதிர்வரும் பாராளுமன்ற பொது தேர்தலில் தாம் அமோக வெற்றியீட்டவுள்ளதையடுத்து மக்கள் வழங்கப்போகும் 117 ஆசனங்களை கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அரசாங்க கனவை உடைத்தெறிவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
பதுளையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஐக்கிய தேசிய கட்சி தமது ஆறு மாத கால ஆட்சியில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்களை பழிவாங்குவதை மட்டுமே தொழிலாக கொண்டிருந்தது.100 நாள் அரசாங்கத்தில் 180 நாட்கள் இவ்வாறு பழிவாங்கலுக்காகவே பயன்படுத்தப்பட்டது.
கடந்த ஆறு மாதம் இடம் பெற்ற ஐக்கிய தேசிய கட்சி நாட்டை ஆட்சிசெய்த போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினதும் ஐக்கிய தேசிய கட்சியினதும் ஆட்சிக்கு இடையில் வேறுபாடுகளை விளங்கிக்கொண்டுள்ள மக்கள் மீண்டும் மஹிந்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அவ்வாறு கோரிக்கை விடுத்தமைக்கு அமையவே தேர்தலில் மீண்டும் ஒருமுறை போட்டியிட தீர்மானித்துள்ளேன். அதனால் கடந்த ஜனவரி மாதம் நாட்டு மக்கள் விட்ட சிறு தவறை மீண்டும் செய்யக்கூடாது. அவ்வாறு முன்பு செய்த தவரை திருத்திக்கொள்ள நாட்டு மக்களுக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதனால் எதிர்வரும் தேர்தலின் பின்னர் நாம் ஐக்கிய தேசிய கட்சி தற்போது விதைத்துள்ள தேசிய அரசாங்கம் என்ற கனவை தகர்த்து தனியாட்சியொன்று அமைப்போம் என தெரிவித்துள்ளார்.