முதுமையும்… ரத்த அழுத்தமும்…

முதுமையில் இயல்பாகவே ரத்த அழுத்தம் சிறிதளவு அதிகரிக்கும். ஆற்றில் தண்ணீர் ஓடுவதுபோல ரத்தமானது ரத்தக் குழாய்களில் ஓடுகிறது. இது, இதயத்துக்கு வரும்போது ஒரு குறிப்பிட்ட வேகத்திலும், இதயத்தில் இருந்து வெளியேறும்போது மற்றொரு வேகத்திலும் செல்கிறது.

இந்த வேகத்துடன் ரத்தமானது ரத்தக் குழாய் சுவர்களை மோதும்போது ஏற்படுகிற அழுத்தத்தை ‘ரத்த அழுத்தம்’ என்கிறோம். பொதுவாக, ஒருவருக்கு ரத்த அழுத்தம் 120/80 மி.மீ. மெர்குரி என்று இருந்தால், அது சரியானது. ஆனால், இது எல்லோருக்குமே சொல்லிவைத்ததுபோல் 120/80 என்று இருக்காது. ஒரே வயதுதான் என்றாலும் உடல், எடை, உயரம் போன்றவை ஆளுக்கு ஆள் வித்தியாசப்படுவதைப்போல, ரத்த அழுத்தம் சற்று வித்தியாசப்படலாம்.

பொதுவாக, வயது கூடும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும். 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு சிஸ்டாலிக் அழுத்தம் 160-க்கு அதிகமாகவும் டயஸ்டாலிக் அழுத்தம் 80-லிருந்து 90-க்குள்ளும் இருக்கும். இதற்கு ‘தனித்த சிஸ்டாலிக் உயர் ரத்தஅழுத்தம்’ என்று பெயர். காரணம், வயதாக ஆக ரத்தக் குழாய்கள் கடினமாகி, தடிமனாகின்றன.

ரத்த ஓட்டத்தின் வேகத்துக்கு ஏற்ப அவை விரிந்து சுருங்க சிரமப்படுகின்றன. இதனால், ரத்தக் குழாயின் உள் அளவு குறைந்துவிடுகிறது. இப்படி குறைந்த இடைவெளி வழியாக ரத்தத்தை உடலுக்குள் செலுத்துவதற்கு, இதயம் இன்னும் அதிக அழுத்தத்துடன் துடிக்கிறது. இதனால், சிஸ்டாலிக் அழுத்தம் அதிகரிக்கிறது.

இப்படியே அழுத்தத்துடன் அது துடித்துக்கொண்டிருந்தால், ஒரு கட்டத்தில் இதயச் சுவர் பலவீனம் அடைந்து, வீங்கிவிடும். அப்போது உடலுக்கு தேவையான ரத்தத்தை இதயத்தால் உட்செலுத்த முடியாது. இதனால் மூளைக்கு ரத்த ஓட்டம் தடைபட்டு, கிறுகிறுப்பு, மயக்கம், நினைவு இழத்தல், பக்கவாதம் போன்றவை ஏற்படலாம். இந்த நிலைமை தொடர்ந்தால், இதயம் செயலிழக்க தொடங்கிவிடும். மாரடைப்பும் வரலாம். சிறுநீரகம் பாதிக்கப்படலாம். இந்த ஆபத்துகளை தவிர்க்கத்தான் சிகிச்சை எடுக்க வேண்டும். ரத்த அழுத்தத்துக்கு மாத்திரை, மருந்து மட்டுமே சிகிச்சை இல்லை. உப்பு மற்றும் எண்ணெய் குறைந்த ஆரோக்கியமான உணவு முறை, உடற்பயிற்சி. நடைப்பயிற்சி, மன மகிழ்ச்சி போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களும் தேவைப்படும்.