20வது திருத்தம் ஓர் பார்வை (பாகம்-1) – வை எல் எஸ் ஹமீட்

YLS ஹமீட் -சட்ட முதுமாணி

தலைப்பிற்குள் செல்லமுன் தலைப்புடன் சம்பந்தப்பட்ட கோட்பாட்டு ரீதியான சிலவிடயங்களை அறிந்துகொள்வது புரிதலுக்கு இலகுவாக இருக்கும்.

அரசு என்பது பிரதானமாக மூன்று துறையாகப் பிரிக்கப்படும். அவை, சட்டவாக்கத்துறை,நிறைவேற்றுத்துறை, நீதித்துறையாகும்.

இவற்றின் செயற்பாடுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்ததாக இருக்கவேண்டிய அதேவேளை இவற்றின் இயக்கத்திற்கான அதிகாரம் ஒரே மையத்தில் குவிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக இவற்றின் அதிகார வேறாக்கம் ( separation of power) ஒரு ஜனநாயக நாட்டில் அவசியமானதாக கருதப்படுகிறது.

இவற்றின் அதிகார வேறாக்கத்தின் இடைவெளி அதிகரிப்பின் எல்லை ஜனநாயகத்தின் வலுத்தன்மையினதும் சட்டத்தின் ஆட்சியின் உறுதித்தன்மையினதும் அளவுகோலாக இருக்கின்றது. இவற்றிற்கிடையிலான இடைவெளிக் குறைவானது சர்வாதிகாரத்தின் எல்லையைக் காட்டுகின்றது.

உதாரணமாக, வடகொரியா, சீனா போன்ற நாடுகள் மற்றும் மன்னராட்சி நாடுகளில் இவற்றிற்கிடையிலான இடைவெளி மிகவும் குறைவாகும்.

ஒரு காலத்தில் மன்னனின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் மாற்றமுடிய சட்டமாக ( immutable law) இருந்தது. அந்தவகையில் சட்டவாக்க அதிகாரம் மன்னனிடமே இருந்தது. அதேநேரம் அவற்றை செயற்படுத்துகின்ற நிறைவேற்றதிகாரமும் மன்னனிடமே இருந்தது. அவை மீறப்படும்போது தண்டிக்கும் நீதித்துறை அதிகாரமும் மன்னனிடமே இருந்தது.

காலப்போக்கில் சில நீதித்துறைக் கட்டமைப்புகள் தோன்றியபோதிலும் அவற்றின் இறுதித் தீர்ப்பு அதிகாரமும் இறுதி மேன்முறையீட்டு அதிகாரமும் மன்னனிடமே இருந்தது.

இவற்றை வேறாக்குவதற்கு காலவோட்டத்தில் பலநாடுகளில் பல போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. இங்கிலாந்திலும் பலபோராட்டங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஒரு காலத்தில் இங்கிலாந்தில் பாராளுமன்ற மேல்சபையான பிரபுக்களின் சபைக்கே அதிக அதிகாரம் இருந்தது. பிரபுக்கள் மன்னனால் நியமிக்கப்பட்டவர்கள்.

போராட்டங்கள் பிரபுக்கள் சபையைவிட மக்களால் தெரிவுசெய்யப்பட்ட Commons ஐக்கொண்ட கீழ்சபைக்கு அதிகாரம் அதிகரிப்பதற்கு காரணமாகியது. அதாவது மன்னனின் பிரதிநிதிகளிடம் இருந்த அதிகாரம் மக்கள் பிரதிநிகளிடம் கைமாறியதன்மூலம் சட்டவாக்கத் துறைக்கும் நிறைவேற்றுத்துறைக்கும் இடையில் ஓரளவு அதிகார வேறாக்கம் ஏற்படுத்தப்பட்டது.

அமெரிக்காவில் அதிகார வேறாக்கம்
————————————————
அதிகார வேறாக்கத்தைப் பொறுத்தவரை அமெரிக்காவில் மூன்று துறைகளுக்கும் இடையில் கணிசமான இடைவெளி இருக்கின்றது. இந்த இடைவெளியின் அவசியத்திற்கான காரணம் ஒரு துறைமீது ஒரு துறை செல்வாக்கு செலுத்தக்கூடாது; என்பதுடன் ஒன்றின் தவறை ஒன்று கட்டுப்படுத்துவதன்மூலம் ( checks and balances) சட்டத்தின் ஆட்சியைப் பேணுவதாகும்.

அமெரிக்காவில் சட்டவாக்க உறுப்பினர்கள் அமைச்சராக முடியாது. அவர்கள் சுயமாக இயங்குவார்கள். ( ஆனாலும் கட்சி அரசியல் இலங்கை, இந்தியாவைப் போலல்லாதபோதும் ஓரளவு இருக்கத்தான் செய்கிறது, ஆனாலும் அவர்களுக்கு சுதந்திரம் இருக்கிறது)

மறுபுறம் ஜனாதிபதி வெளியில் இருந்து அமைச்சர்களை நியமிப்பார். உண்மையில் அங்கு அவர்களை அமைச்சர்கள் என அழைப்பதில்லை. செயலாளர் என்றே அழைக்கப்படுவர். அதேபோல் நீதித்துறை முழுமையாக சுதந்திரமாக செயற்படும். ஜனாதிபதிகளின் எத்தனையோ தீர்மானங்களை நீதிமன்றம் நிறுத்தியிருக்கின்றது சட்டத்தை மீறுவதாக காரணம் காட்டி. அந்தவகையில் தற்போதைய ஜனாதிபதி டரம்பிற்கு நல்ல அனுபவம் இருக்கிறது.

இதன் காரணமாக அமெரிக்காவில் பலமான சட்டத்தின் ஆட்சியிருக்கின்றது.

பிரித்தானியாவைப் பொறுத்தவரை அதிகார வேறாக்கத்தின் இடைவெளி, குறிப்பாக சட்டவாக்கத்திற்கும் நிறைவேற்றுத் துறைக்குமான இடைவெளி மிகவும் குறைந்தது; என்ற கருத்து பிரித்தானிய சட்ட அறிஞர்களிடையே இருக்கின்றது. ஒருகாலத்தில் மன்னனிடம் இருந்த நிறைவேற்றதிகாரம் பின்னர் பிரதமருக்கும் அமைச்சரவைக்கும் மாற்றப்பட்டதன்பின் இந்த அதிகார வேறாக்கத்தின் இடைவெளி சுருங்கிவிட்டது.

இதற்குக் காரணம் அமெரிக்காவைப் போலல்லாது பிரித்தானியாவில் பாராளுமன்ற உறுப்பினர்களே பிரதமராகவும் அமைச்சர்களாகவும் நியமிக்கப்படுகிறார்கள். எனவே, சட்டவாக்கத்துறையினதும் நிறைவேற்றுத் துறையினதும் கட்டுப்பாடு ஒரே தரப்பிடமே இருக்கிறது.

குறிப்பாக, பிரதமரே அமைச்சர்களைத் தெரிவுசெய்கிறார். மட்டுமல்ல, பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு ராணிக்கு சிபாரிசு செய்கின்ற அதிகாரம் பிரதமருக்கே இருக்கின்றது. எனவே, அமைச்சர் பதவிகளுக்காகவும் பாராளுமன்ற கலைப்பின் பயத்தினாலும் பாராளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக ஆளும்கட்சி உறுப்பினர்கள் பிரதமரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள்.

எனவே, சட்டவாக்கத்துறையும் நிர்வாகத் துறையும் பிரதமர் எனும் தனிநபரின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதால் முழுமையான சட்டவேறாக்கம் பிரித்தானியாவில் இல்லை; என்ற ஒரு கருத்து அங்கு இருக்கின்றது. அதேநேரம் பிரதமர் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையில் தங்கியிருப்பதால் பிரதமர் சற்று நிதானமாக நடக்கவேண்டிய தேவையும் இருக்கின்றது.

இலங்கை
————-
இலங்கையின் ஆட்சிமுறை பிரான்சின் ஆட்சிமுறையைத் தழுவியது; என அன்று கூறப்பட்டபோதும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. பிரான்சில் நிறைவேற்றதிகாரம் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் பகிரப்பட்டிருக்கின்றது. இலங்கையில் நிறைவேற்றதிகாரம் அமெரிக்காவில் இருப்பதைப்போன்று முழுமையாக ஜனாதிபதியிடம் இருக்கின்றது.

19வது திருத்தம்வரை பிரதமர் என்பவருக்கு எதுவித அதிகாரமும் இருக்கவில்லை. 1989ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட திரு பிரேமதாச அவர்களை வேட்பாளராகத் தீர்மானித்தபோது, வெற்றிபெற்றால் காமினியை அல்லது லலித்தை பிரதமராக நியமிக்கவேண்டும்; என அழுத்தம் கொடுத்தபோது, பிரதமர் என்பவர் ஜனாதிபதியின் ஓர் அதிகாரியே ( officer); எனது அதிகாரியை நானே தீர்மானிப்பேன்; என்றார்.

எனவே, பிரான்ஸ் ஜனாதிபதியைப் போலல்லாது அமெரிக்க ஜனாதிபதியைப்போன்று முழுமையான நிறைவேற்று அதிகாரம் தனது கையிலிருக்கும் அதேவேளை அமெரிக்க ஜனாதிபதிக்கு அமெரிக்க பாராளுமன்றத்தை ( Congress) கட்டுப்படுத்த முடியாதபோதும் இலங்கை ஜனாதிபதிக்கு கட்டுப்படுத்தக்கூடிய நிலை இருந்தது.

ஏனெனில் இங்கு அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள்ளே இருந்து தெரிவுசெய்யப்படுகின்றனர். ஆனால் பிரித்தானியாவைப்போன்று பிரதமர் தெரிவு செய்யப்படுவதில்லை. ஜனாதிபதியே தெரிவு செய்கிறார். அதேநேரம் அமெரிக்காவைப்போன்று அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இல்லாமல் இருந்தால், பாராளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக இயங்கமுடியும்.

மூன்று வகையில் பாராளுமன்றம் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின்கீழ் வருகிறது
—————————————————————

முதலாவது, இங்கு அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதாலும் அவர்கள் ஜனாதிபதிக்கு கட்டுப்பட வேண்டியிருப்பதாலும் பாராளுமன்றம் யதார்த்தத்தில் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின்கீழ் வருகிறது.

இரண்டாவது, பெரும்பாலும் ஜனாதிபதி ஒரு கட்சியின் தலைவராக இருப்பதால் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும் அவரிடம் இருப்பதால் அந்தவகையிலும் பாராளுமன்றம் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின்கீழ் வருகிறது.

மூன்றாவது, பிரித்தானியாவில் பாராளுமன்றக் கலைப்பிற்கு சிபாரிசு செய்கின்ற அதிகாரம்தான் பிரதமருக்கு இருக்கின்றது. இலங்கையில் ஒருவருடம் நிறைவுபெற்றதும் ( ஒரு தேர்தலுக்கு முந்திய பாராளுமன்றத்தை ஜனாதிபதி முன்கூட்டியே கலைக்காவிட்டால், அடுத்த தேர்தல் நடந்து பாராளுமன்றம் கூடிய மறுதாளே கலைக்கலாம்) தானே நேரடியாக கலைக்கும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு இருந்தது. இந்நிலையில் தனது பாராளுமன்றப் பதவியைப் பாதுகாக்க முழுக்க முழுக்க ஜனாதிபதிக்கு கட்டுப்படவேண்டிய நிலை உறுப்பினர்களுக்கு இருந்ததால் அந்தவகையிலும் பாராளுமன்றம் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தது.

எனவே, அமெரிக்க ஜனாதிபதிக்கு நிறைவேற்றதிகாரம் மாத்திரம் இருக்க இலங்கை ஜனாதிபதிக்கு நிறைவேற்றதிகாரமும் சட்டவாக்கத்துறையை கட்டுப்படுத்தும் அதிகாரமும் இருந்தது. அந்தவகையில் அமெரிக்க ஜனாதிபதியைவிட இலங்கை ஜனாதிபதி மிகவும் பலம் பொருந்தியவராக இருந்தார்.

இந்த வகையில் சட்டவேறாக்கத்தின் இடைவெளி மிகவும் சுருங்கியதாக இருந்து. சட்டவேறாக்கத்தின் இடைவெளி சுருங்க, சுருங்க சட்டத்தின் ஆட்சி ( Rule of Law) கேள்விக்குறியாக மாறும். மட்டுமல்ல, ஜனாதிபதிக்கெதிராக வழக்குத் தொடுக்கமுடியாது; என்ற சரத்து சட்டத்தின் ஆட்சியை மேலும் கேள்விக்குட்படுத்தியது.

சட்டத்தின் ஆட்சி தகர்க்கப்படுமானால் ஜனநாயகம், மக்களின் இறைமை என்பன கேள்விக்குறியாகும்.

இந்தப்பின்னணியில்தான் ஜனாதிபதியின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி, பாராளுமன்றத்தை வலுப்படுத்தி சட்டவேறாக்கத்தின் இடைவெளியை அதிகரிப்பதன்மூலம் சட்டத்தின் ஆட்சியை நிறுவி ஜனநாயகத்தைப் பலப்படுத்தும் வகையில் 17, 19 வது திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

இந்தப் பின்னணியில்தான் இந்த 20வது திருத்தத்தை நாம் ஆராயவேண்டும்.

( தொடரும்)