• Home »
  • Slider »
  • சஜித் பிரேமதாஸவுக்கு எட்டாக் கனியாகும் ஜனாதிபதி பதவி

சஜித் பிரேமதாஸவுக்கு எட்டாக் கனியாகும் ஜனாதிபதி பதவி

சஜித் பிரேமதாஸவுக்கு எட்டாக் கனியாகும் ஜனாதிபதி பதவி.

கோடாபய ராஜபக்ஸ மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோர்களுக்கிடையில் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நாள் தொடக்கம் பலத்த போட்டி நிலவியபோதிலும், அண்மைய நாட்களாக சஜித்தின் வெற்றி வாய்ப்புகள் அந்தக் கட்சி சார்பானவர்களின் செயற்பாடுகள் காரணமாக குறைந்துகொண்டு செல்வதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

இதில் முக்கிய திருப்பு முனையாக அமைந்திருப்பது, சஜித் வெற்றி பெற்றாலும் தானோ பிரதமர் என ரணில் விக்கிரமசிங்க அறிவிப்புச் செய்துள்ள விடயமாகும். சஜித் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுமிடத்து அவரது வழிகாட்டலின்கீழ் ஐக்கிய தேசியக் கட்சி புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்த அக்கட்சியின் ஆதரவாளர்களுக்கு ரணிலின் அறிவிப்பு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாகவும், தபால்மூல வாக்களிப்புக்கு முந்திய தினம் மேற்படி அறிவிப்பு செய்தமை சஜித் பிரேமாதாஸவுக்கு விழும் வாக்குகளை இல்லாமல் செய்யும் நோக்கத்தில் திட்டமிட்டுச் செய்யப்பட்டுள்னதாகவும் பேசப்படுகின்றது.

 

மத்திய வங்கி பிணைமுறி முறைகேடு மற்றும் நாட்டில் இடம்பெற்ற பல சம்பவங்களுடன் ரணிலை சம்பந்தப்படுத்தி தொடர்ச்சியான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வந்ததும் ஐ.தே.க ஆதரவாளர்கள் மீண்டும் ரணிலின் தலைமையில் ஆட்சி நடைபெறுவதை விரும்பாது தங்களது வாக்குகளை மாற்றுக் கட்சி வேட்பாளருக்கு அளித்துள்ளதாகவும் ஆங்காங்கே கருத்து தெரிவிக்கப்படுகின்றது. மொட்டு தரப்பினர் தங்களுக்கு 80வீதமான தபால் வாக்குகள் கிடைத்துள்ளதாக பிரச்சாரம் செய்வதும் இந்த விடயத்தை வைத்தே எனக் கொள்ளவும் முடியும்.

அது மாத்திரமன்றி மிலேனியம் கோப்ரேஸன் சலேன்ஞ் உடன்படிக்கையானது (எம்.சி.சி) நாட்டைத் துண்டாடி அந்நிய நாட்டுக்கு அடகு வைக்கும் உடன்படிக்கை என்று வர்ணிக்கப்படுவதால் அதனைக் கைச்சாத்திடுவதற்கு எதிராக பல எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்ற நிலையில், தேர்தலுக்கு முன்பதாக அதனை கைச்சாத்திட ரணில் மற்றும் மங்கள அதிக முனைப்புக் காட்டுவதும் சஜித்தை தோற்கடிக்கும் சதியின் ஒரு அங்கமாகவே இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிடுகின்றனர்.

பௌத்த மக்களின் முக்கிய தலங்கள், குறித்த உடன்படிக்கையின் கீழ் அந்நிய நாட்டுக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்படவுள்ளதாக காட்டப்பட்டுள்ளதால், சிங்கள மக்களிடம் மிகுந்த விசனத்தை ஏற்படுத்தியுள்ள இந்த உடன்படிக்கை விவகாரம் நாடெங்கும் எதிரொலிக்கின்றது. சிங்கள் மக்கள் தாங்கள் சார்ந்துள்ள கட்சி அரசியலுக்கு அப்பால் நாட்டிற்கு முன்னுரிமை கொடுப்பதில் என்றும் தயக்கம் காட்டுவதில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் விடயத்தில் காட்டும் அவசரம் காரணமாக, அதனால் நாட்டின் இறைமைக்கே பாதிப்பு வரலாம் என்ற அச்சம் தற்போது மேலாங்கி வருவதன் காரணமாக அக்கட்சி ஆதரவாளர்களே மாற்றுக் கட்சி வேட்பாளரை ஆதரிக்கும் நிலைக்கு வந்துள்ளதால் நாளுக்கு நாள் சஜித்தின் ஆதரவு கணிசமாக குறைந்து செல்வதாக அரசியல் அவதானிகளால் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.

உண்மையில் நாட்டின் ஜனாதிபதியைத் தீர்மானிக்கப்போவது சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளே. வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம், அவர்கள் சார்ந்துள்ள கட்சியின் வெளியுறவு மற்றும் பொருளாதாரக் கொள்கை என்பவற்றை வைத்து தங்களது ஆதரவைத் தீர்மானிக்கும் மிதக்கும் வாக்காளர்களில் கணிசமாக தொகையினர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதிலிருந்து விலகி வருவதாக பேசப்படும் விடயமும் சஜித்தின் வெற்றியை தட்டிவிடும் ஆபத்தை தோற்றுவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கையை எந்த வேட்பாளரும் ஏற்றுக் கொள்ளாத நிலையில், அந்த தரப்பு சஜித்தை ஆதரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தக் கோரிக்கைகளில் நாட்டுக்கு பாதமான விடயங்கள் உள்ளடங்கியிருப்பதாக தெரிவித்து இதனை ஏற்றுக்கொள்வதில் இருந்து பொதுஜன பெரமுன தரப்பு ஏற்கனவே விலகிவிட்டது.

சஜித் தரப்பு இதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்று வெளிப்படையாக கூறினாலும், மறைமுகமாக எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் பிரகாரமே கூட்டமைப்பு சஜித்துக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக சிங்கள மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்படும் அரசியல் பிரச்சாரம் சஜித்தின் வெற்றியை கேள்விக் குறியாக்கியுள்ளது என்ற கருத்துக்கள் முன்வைக்கப்படாமலில்லை.

மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்குவதிலும், நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதிலும் முன்வைக்காத கோரிக்கைகளை சஜித்திடம் முன்வைக்க கூட்டமைப்பு தூண்டிவிடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இன்றைய பேசுபொருளாக காணப்படுகின்றது. முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற முஸ்லிம் தலைவர்கள் தலைமை தாங்கும் கட்சிகள் எந்த அடிப்படையில் தங்களது ஆதரவைத் நிபந்தனைகளின்றி தெரிவித்தன என்று இதுவரை அவர்கள் வெளிப்படையான கருத்துகளை முன்வைத்ததாக அறியவில்லை.

சஜித்தின் தரப்பிலிருந்தே அவருக்கான ஆதரவு தளம் இல்லாமல் செய்யப்படுவதற்கான முஸ்தீபுகளே அண்மைய நாட்களாக நடந்தேறி வருவதாகவும், இவ்வாறான விடயங்கள் சஜித்தின் வெற்றியை கேள்விக்குறியாக்கி வருவதாக பலத்த விமர்சனங்கள் நாடெங்கும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

அது மாத்திரமன்றி சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பு விவகாரத்தில் முக்கிய பொறுப்பினை வழங்குவதாக பகிரங்க அறிவிப்புச் செய்த சஜித்துக்கு, யாரை பிரதமராக்குவேன் என்று அறிவிப்பது சுலபமான விடயமே. ஆனால், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஊடகவியலாளர் உட்பட பலரும் பிரதமர் தொடர்பில் கேள்விகளை முன்வைத்தபோதும் அவர் அதற்கு பதிலளிக்காது தவிர்ந்து வருவது சிறுபான்மை மக்களிடத்தில் வித்தியசமான பார்வையைத் தோற்றுவித்துள்ளது. காரணம் சஜித்தின் தரப்பு முக்கிய பிரமுகரான சம்பிக்க ரணவகவை பிரதமாராக்கும் எண்ணத்துடன்தான் சஜித் பிரதமர் குறித்து இதுவரை வெளிப்படையாக வாய்திறக்கவில்லை என்ற சந்தேகங்கள் மேலோங்கி காணப்படுகின்றன.

“முஸ்லிம் விரோத செயற்பாடுகளை இலங்கையில் முடுக்கிவிட்ட சம்பிக்க ரணவக, சஜித் அரசில் பிரதமராக நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியினை ஆதரிக்கும் முஸ்லிம்கள் கடும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். சம்பிக ரணவக பிரதமராக நியமிக்கப்பட்டால் நாம் அங்கு இருக்க மாட்டோம் என அக்கட்சி முஸ்லிம் உறுப்பினர்கள் கூறி வருகின்றனர். அவர் இருக்கும் அமைச்சரவையிலே அங்கம் வகிக்க முஸ்லிம்கள் இருக்க முடியாது. இந்த நிலையில் அவர் பிரதமராக நியமிக்கப்பட்டால் முஸ்லிம்களின் நிலமை என்னவாகும். எனவே தேர்தலுக்கு முன்னர் பிரமராக நியமிக்கப்படப்போவது ரணிலா? சம்பிக்கவா? என்று சஜித் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்” என முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு கோரிக்கை முன்வைத்துள்ளதாக ஒரு இணையத்தளம் செய்தி வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான விடயங்களை வைத்து நோக்கும்போது, சஜித் பிரேமதாஸவுக்கு ஜனாதிபதி பதவி எட்டாக் கனியாகிவிடலாம் என்ற அச்சம் அவருக்கும் அவரை ஜனாதிபதியாக்க துடிக்கும் தரப்பினருக்கும் தற்போது ஏற்பட்டுள்ளதாகவே பேசப்படுகின்றது.

எம்.ஐ.சர்ஜுன்
சாய்ந்தமருது

முக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.
-நிருவாகம்-