கல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்


பைஷல் இஸ்மாயில் 

எல்லைகள் நிர்ணயிக்கப்படாமல், அதற்கான குழுக்கள் நியமிக்கப்படாமல் கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தித் தரக்கோருவது ஒரு நியாயமற்ற கோரிக்கையாகும். இதன் மூலம் ஒரு அமைதிக்கு பங்கம் ஏற்படக்கூடிய, இன முருகலை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள் நடந்தேர வாய்ப்புக்கள் இருக்கின்றது என்று கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

 

தமிழ் பிரதேச செயலகத்தை தடை செய்யக்கோரி முஸ்லிம் பிரதிநிதிகள் கல்முனையில் சத்தியாகிரகம் போராட்டம் இன்று (20) காலை கல்முனை ஐக்கிய சதுக்க முன்றலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் கல்முனை மாநகர முதல்வர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

குவைத் அரசாங்கத்தினுடைய நிதியுதவியில் கட்டப்பட்ட அந்த பிரதேச செயலக கட்டிடத்தில் தற்போது தமிழ் உப பிரதேச செயலகம் இயங்கிக்கொண்டிருக்கின்றது. அதற்கு தனியான வசதி வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு அந்த உப பிரதேச செயலகத்துக்கென்று பிரதேச செயலாளர் ஒருவர் இக்கினறார், கணக்காளர் இருக்கின்றார், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் போன்றவர்கள் இருக்கின்றார்கள். அதுமாத்திரமல்லாமல் உத்தியோகப் பற்றற்ற ரீதியில் ஒரு காணிப் பிரயோசனக் குழுவொன்றும் இயங்கிக்கொண்டிருக்கினறது. 

இந்த நிலையில் இயங்கிக்கொண்டிருக்கும் இந்த உப பிரதேச செயலகத்தின் செயற்பாடுகளையும், அங்கு நடைபெறுகின்ற சேவைகளின் உண்மைத் தன்மைகளை மறைத்து இந்த தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தித் தரவேண்டும் என்று கேட்பது இப்போதுள்ள சூழ் நிலையில் இந்தக் கல்முனையை பிரித்து துண்டாடுகின்ற ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. 
ஏற்கனவே இருக்கின்ற கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்துக்கு ஒரு சொந்தமான கட்டிடம் இல்லமால் கல்முனை மாநகர சபையினுடைய வளாகத்தில் இயங்கிக் கொண்டு எந்தப் பிரச்சினைகளும் இல்லாமல் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒரு இன ஒற்றுமையை மிக நீண்ட ஆண்டு காலமாக பேணிப் பாதுகாத்து வாழ்ந்து வருகின்ற இந்த சூழலில் இவ்வாறான வியங்களை கொண்டு செல்வது, இரு மக்களின் இன ஒற்றுமையை பாதிக்கின்ற விடயமாக இந்த செயற்பாடுகள் காணப்படுகின்றது. 
அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மொத்தமாக 20 பிரதேச செயலகங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றது. இதில் 19 முழு பிரதேச செயலகங்களும், ஒரு உப பிரதேச செயலகமும் இருக்கின்றது. இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 17 சதவீதமாக இருக்கின்ற தமிழ் சகோதரர்களுக்கு 09 பிரதேச செயலகங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றது. இதில் எல்லைகள் என்பது மிக முக்கியமான விடயமாகும். 
இந்த விடயங்களில் தமிழ், முஸ்லிம் மக்கள் மிகத் தெளிவாக இருக்கவேண்டும் என்று கூறிக்கொள்கின்றேன். இந்த இன ஒற்றுமை பாதிக்கப்பட்டு விடக்கூடாது, தமிழ் முஸ்லிம் உறவு பாதிக்கப்பட்டு விடக்கூடாது. அதேபோல் கல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது. என்ற ஒரு காரணத்துக்காகவும், ஒரு நியாயமற்ற உப பிரதேச செயலக கோரிக்கைக்கு எதிராகவும் தான் இந்த சத்தியகிரகப் போராட்டத்தில் இறங்கியுள்ளோம் என்றார்.