முஸ்லிம்களின் உரிமைகளை நசுக்குவதற்கு பேரினவாத கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் கட்சி பேதமின்றி செயல்படுகின்றனர்

(எம்.ஜே.எம்.சஜீத்)
அன்று வட மாகாணத்தில் விடுதலைப்புலிகளினால் மனிதாபிமானமற்ற முறையில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களுக்கான மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் வட மாகாண தமிழ் அரசியல்  தலமைகள் இன்று தடையாக இருந்து செயல்படுவது குறித்து நாம் கவலையடைய வேண்டி உள்ளது. எனவே, வட மாகாண முஸ்லிம்களும் ஏனைய மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களுக்குமாக சுதந்திரமாக குரல் கொடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு உள்ளது என வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் எனும் சிரேஷ்ட ஊடகவியலாளர் அல்-ஹாஜ் சுகையிப் எம். காசீம் எழுதிய நூலின் அறிமுக விழா அக்கரைப்பற்று டி.எப்.சீ மண்டபத்தில் அஷ்செய்க் எஸ்.எல்.எம். ஹனிபா (மதனி) தலமையில் நடைபெற்ற நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் கிழக்கு மாகாண் அமைச்சரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
வட மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் நிலமை, அவர்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைளில் விதிக்கப்படும் தடைகள் தொடர்பாக வட மாகாண விஜயத்தின் போது முஸ்லிம்களை சந்தித்து விபரங்களை அறிந்து மிக்க கவலையடைந்தோம்.
தமிழ் ஆயுதக் குழுக்கள் அதிகாரங்களை பெறுவதற்கான ஆயுதப் போராட்டங்களை நடத்துவதாக கூறி திடீர் என அவர்களின் துப்பாக்கிகளை முஸ்லிம் மக்கள் மீது திருப்பியதால் முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய பாதிப்புகள் ஏற்பட்டன. இதனால் தமிழ் அரசியல் தலைவர்களுடன் இணைந்து சாத்வீக அரசியல் போராட்டத்திற்கு பாரிய பங்கினை வகுத்த முஸ்லிம் தலமைகள் தமிழ் அரசியல் தலமைகளின் நம்பிக்கை இழந்த நிலயையில் முஸ்லிம் சமூகத்திற்கான தனியான கட்சியை உருவாக்கும் நிலமை ஏற்பட்டது. முஸ்லிம் சமூகம் அதிகாரம் கேட்டு ஆயுதம் ஏந்தி போராடவில்லை ஆனால் 03 தசாப்த காலமாக நடைபெற்ற யுத்தத்தினால் வட கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம் சமூகம் பாரிய நஷ்டங்களை அடைந்துள்ளது.
பாலமுனையில் நடைபெற்ற சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நன்கு பயன்படுத்தி அதிகாரங்கள் கோரி முஸ்லிம்கள் போராடவில்லை எனத் தெரிவித்தார். ஆனால் முஸ்லிம் சமூகத்திற்கு யுத்தத்தினால் பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த கால யுத்தத்தினால் நமது சமூகத்திற்கு ஏற்பட்ட உயிர், உடமைகள் தொடர்பான ஆவணங்களை நமது சமூக ஆய்வாரள்கள் தயார் செய்ய வேண்டும்.
முஸ்லிம்களின் உரிமைகளை நசுக்குவதற்கு பேரினவாத கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் கட்சி பேதமின்றி செயல்படுகின்றனர். எனவே, எதிர்காலத்தில் எமது முஸ்லிம் சமூகம் பல சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலமை நமது நாட்டில் உருவாகி வருகின்றன.
 எனவே, எமது அரசியல் தலமைகள் ஒன்றிணைந்து செயற்பட்டு எமது முஸ்லிம் மக்களின் நலன்களில் அக்கறையுடன் செயல் பட வேண்டும் மூத்த ஊடகவியலாளர் சுகையிப் எம். காசீம் பெரும் தியாக மனதோடு வடபுல முஸ்லிம்களின் மண உணர்வுகளை அறிந்து நூல் ஒன்றை எழுதி  அந்த நூலின் வெளியீட்டு விழாவினை கிழக்கு மாகாணத்தில் நடாத்தியதால் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், புத்திஜீவிகள், மூத்த ஊடகவியலாளர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக மூத்த பத்திரிக்கையாளர் சுகையிப் எம் காசீம் அவர்களை பாராட்டுகிறேன் எனத் தெரிவித்தார்.