திமுத் கருணாரட்ன வேறு ஒரு ஆடுகளத்தில் ஆடுபவர் போல விளையாடினார் : டுபிளசிஸ்

காலியில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இடம்பெற்ற முதலாவது டெஸ்டில் இலங்கை அணி 278 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

போட்டியின் மூன்றாவது நாளான இன்று வெற்றிபெறுவதற்கு 352ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் 73 ஓட்டங்களிற்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

ஆரம்பதுடுப்பாட்ட வீரர்கள் இருவரும் வெளியில் வந்து பந்தை அடித்து ஆட முற்பட்டவேளை ஸ்டம்ப் ஆகினர்.அதேவேளை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹசீம் அம்லாவும் ஏமாற்றினார்.

இலங்கை அணியின் சார்பில் தில்ருவான் பெரோ  32 ஓட்டங்களிற்கு ஆறுவிக்கெட்களை வீழ்த்தினார்.தென்னாபிரிக்க அணியின் சார்பில் பிலான்டர் ஆட்டமிழக்காமல் 22 ஓட்டங்களை பெற்றார்

இந்த டெஸ்ட்போட்டியில் அபாரமாக பந்து வீசிதில்வருவான் பெரேரா  மொத்தமாக 10 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

இதேவேளை  இலங்கையின் இரு இனிங்ஸ்களிலும் துடுப்பெடுத்தாடிய ஆரம்பதுடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரட்ன ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை இந்த டெஸ்ட்போட்டியின் தோல்வி குறித்துகருத்து தெரிவித்துள்ள  தென்னாபிரிக்க அணித்தலைவர் டுபிளசிஸ் இந்த தோல்விக்கு நாங்களே காரணம் எங்களையே குறை சொல்லவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி அதன் முதல் இனிங்சில் 7 விக்கெட்களை 170 ஓட்டங்களிற்கு இழந்திருந்தவேளை அவர்கள் 220 ஓட்டங்களிற்குள் ஆட்டமிழக்க செய்திருக்கவேண்டும் ஆனால் அவர்கள் 287 ஓட்டங்களை பெற்றார்கள் அது பெரிய எண்ணிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.

திமுத் கருணாரட்ன வேறு ஒரு ஆடுகளத்தில் ஆடுபவர் போல விளையாடினார் அவரின் முயற்சி மிகசிறப்பானது எனவும் தென்னாபிரிக்க அணித்தலைவர் தெரிவித்துள்ளார்.