பிரதமரின் தலைவிதியையும், கூட்டரசின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கவுள்ள முக்கிய சந்திப்புக்கள்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக மகிந்த அணியும், எதிராக ஐக்கிய தேசியக் கட்சியும் தீவிரப் பரப்புரைகளிலும், சந்திப்புகளிலும் ஈடுபட்டுவருவதால் தெற்கு அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 இந்நிலையில், 2ஆம் திகதியும், 3ஆம் திகதியும் கொழும்பில் நடைபெறவுள்ள 6 இற்கும் மேற்பட்ட அரசியல் சந்திப்புகளே பிரதமரின் தலைவிதியையும், கூட்டரசின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
 அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,பிரதமருக்கு எதிராக 54 எம்.பிக்களின் கையொப்பத்துடன் கூட்டு எதிரணியால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது எதிர்வரும் 4ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதமும், வாக்கெடுப்பும் இடம்பெறவுள்ளன.
 
 
 இப்பிரேரணையை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை (மூன்றிலிரண்டு) தேவையில்லை. சாதாரண பெரும்பான்மையே போதுமானது.அதுவும் வாக்கெடுப்பில் கலந்துகொண்ட மொத்த உறுப்பினர்களிலேயே பெரும்பான்மை கணிக்கப்படும்.ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியிடம் 106 ஆசனங்கள் இருக்கின்றபோதிலும், ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள உறுப்பினர்கள் சிலர், அக்கட்சியின் தலைவரான பிரதமருக்கு எதிராக செயற்படத் தயாராகி வருவதாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்கெடுப்பில் பங்கேற்காது என்று கூறப்படுவதாலும், ஜே.வி.பி. எடுத்துள்ள முடிவாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மௌனத்தாலும் பெரும் அரசியல் குழப்பம் உருவாகியுள்ளது.
 
பிரேரணையைத் தோற்கடிப்பதற்குரிய வல்லமை கூட்டரசிடம் இருக்கின்றபோதிலும், அரசியல் காரணங்களால் இறுதி நேரத்தில்கூட எதுவும் நடக்கலாம் என்பதற்குரிய அறிகுறிகள் தென்படுவதே இந்தக் குழப்பத்துக்குக் காரணமாகும்.எனவே, 2ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் நடைபெறும் சந்திப்புகளே முக்கியத்துவமிக்கவையாகவும், இறுதியானதொரு முடிவை எடுப்பதற்குரிய பேச்சுகளாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
 இதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை 2ஆம் திகதி அவரது இல்லத்தில் கூடவுள்ளது.பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளை மறுதினம் 3ஆம் திகதி நடைபெறும். இவ்விரு கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளே பிரதமர் விவகாரத்தில் கூடுதல் தாக்கத்தைச் செலுத்தும்.
 
கூட்டரசிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் பிரதமருக்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானித்தாலோ அல்லது வாக்கெடுப்பில் பங்கேற்காதிருக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்தாலோ அது மகிந்த அணியின் கையை ஓங்கச்செய்யும்.
 
 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 2ஆம் திகதியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3ஆம் திகதியும் கூடி முடிவெடுத்த பின்னர், மஹிந்த அணி 3ஆம் திகதி மாலை முக்கியத்துவம் மிக்க கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
 
 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எடுத்துள்ள முடிவுகளை அடிப்படையாக வைத்து, பிரேரணையை நகர்த்துவதற்குரிய இறுதிக்கட்ட வியூகங்களை மஹிந்த அணி வகுக்கவுள்ளது.அன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டமும், ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான கூட்டமும் தனித்தனியாக நடைபெறவுள்ளன.
 
அத்துடன், ஜே.வி.பி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. ஆகிய கட்சிகளின் கூட்டங்களும் இவ்விரு நாட்களில் நடைபெறவுள்ளன.பிரதமர் ரணிலுக்கு எதிரான பிரேரணை வெற்றிபெற்றாலோ அல்லது தோல்வியடைந்தாலோ தெற்கு அரசியலில் பாரிய அரசியல் மாற்றங்கள் நிகழக்கூடும்.
 
 இதேவேளை,நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரம் தொடர்பில் கடந்த ஒருவார காலத்துக்கு மேலாகவே முக்கிய சந்திப்புகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.