சிலை வைப்பவர்களுக்கு பாடம் படிப்பிப்பதற்காகவே மு. கா. யானைச் சின்னத்தில் போட்டியிடுகிறது:அமைச்சர் ரவூப் ஹக்கீம்

தேசிய தலைவர்கள் பொத்துவிலுக்கு வந்து வாக்குறுதிகளை கொடுத்துவிட்டுச் செல்கின்றனர். தேர்தல் காலங்களில் அவை பேசப்பட்டு கிடப்பில் போடப்படுகின்‌றன. ஆனால், இந்தப் பிரதேசத்தில் அரசியல் அங்கீகாரம் பெற்றிருக்கின்‌ற முஸ்லிம் காங்கிரžஸ்தான் இவற்றை சாதிக்கவேண்டும். இந்த திட்டங்களுக்கு அடித்தளம் போட்டவர்கள் யார், செய்பவர்கள் யார், செய்து முடிப்பவர்கள் யார் என்பதை சிந்தித்துத்தான் மக்கள் தங்களது வாக்குகளை பிரயோகிக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பொத்துவில் பிரதேச சபையில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று (07) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்‌சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;
சிலை வைப்பவர்களுக்கு பாடம் படிப்பிப்பதற்காகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யானைச் சின்னத்தில் போட்டியிடுகிறது. அப்பாவி முஸ்லிம்களின் 15 ஆயிரம் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்றவர்கள், மாயக்கல்லி மலையில் சிலை வைக்கின்றனர். இப்போது பொத்துவிலிலும் சிலை வைக்கப் பார்க்கின்றார்கள். இப்படியானவர்களை நாங்கள் ஒதுக்கி வைத்திருக்கிறோம். மற்றவர்களின் மேடைகளில் ஏறுவதுபோல, இவர்கள் எங்களுடைய தேர்தல் மேடைகளில் ஏறமுடியாதவாறு நாங்கள் செய்திருக்கிறோம்.
வன பரிபாலன திணைக்களம் தடைசெய்து வைத்திருந்த பள்ளியடிவட்டை காணியில் விவசாயம் செய்வதற்கு இங்குள்ள நீதவான் இடைக்கால உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார். இதனால் நீதவானுக்கு எதிராக நீதிச்சேவை ஆணைக்குழு ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விடயத்தை கையாள்வது ஜனாதிபதி சட்டத்தரணிகள் ஊடாக எவ்வாறு அணுகுவது என்பது குறித்து நாங்கள் ஆலோசனை வழங்கியிருக்கிறோம். 
பிரதமரின் அறிவுரைக்கமைய நீதிச் சேவை ஆணைக்குழு இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளதாக சிலர் முழங்காலுக்கும்‌ மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடுகின்றனர். நீதி அமைச்சராக இருந்த, சட்டத்தரணியாக இருக்கின்ற கட்சித் தலைமை இந்த விவகாரத்தை பொது மேடைகளில் பகிரங்கமாக போட்டுடைக்க முடியாது. இந்த விடயங்களை நாங்கள் பிரதமரிடம் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறோம். நீதி சம்பந்தமான விடயங்களை நாங்கள் மிகவும் நுணுக்கமாக கையாள்கிறோம். 
பிரதமர் பொத்துவிலுக்கு வந்திருந்தநேரம், வன பரிபாலனத் திணைக்கள அதிகாரிகள் பள்ளியடிவட்டைக் காணி தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளனர். பார்த்து ஏதாவது செய்யுங்கள் என்ற பிரதமரின் கூற்றைவைத்து, அவர் உத்தரவிட்டதாக கூறி ஒரு கடிதம் எழுதியுள்ளனர். இந்தப் பிரச்சினையின் பின்னணி எதுவும் தெரியாத பிரதமரை வைத்து இவ்வாறு செய்துள்ளனர். இதனை நான் தெளிவாக பிரதமரிடம் தெளிவுபடுத்தியிருக்கிறேன்.
பொத்துவிலுக்கு வருகைதந்த ஜனாதிபதி, காணிப்பிரச்சினைகள் தொடர்பில் நழுவலாக பேசிவிட்டுச் சென்றுள்ளார். காணிப்பிரச்சனைகள் தொடர்பாக நாங்கள் களஆய்வு செய்து, அது அறிக்கையாக தயாரிக்கப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பப்ட்டுள்ள நிலையில், இதனை பொருட்டாக வைத்து இதற்கான தீர்வைத் பெற்றுத்தருமாறு நாங்கள் ஜனாதிபதியை வலியுறுத்துவோம். இதற்காக களத்தில் நின்று போராடிய முஸ்லிம் காங்கிரஸ்தான் காணிப்பிரச்சினைக்கான தீர்வை பெற்றுத்தரும் என்பதில் சந்தேகமில்லை.
பொத்துவிலுக்கு தனியான கல்வி வலயம் வழங்குவது தொடர்பில் பிரதமரும், ஜனாதிபதியும் ஆளுநர் மத்தியில் வாக்குறுதியளித்துள்ளனர். இதனை சுட்டிக்காட்டி ஆளுநர் மூலமாக தனியான கல்வி வலயத்தை தருமாறு கேட்போம். ஆனால், அதை இழுத்தடிப்பதற்காக குறைந்தபட்சம் 50 பாடசாலைகள் இருக்கவேண்டும் என்று பல சிக்கல்களை கொண்டுவருவார்கள். ஆனால், பொத்துவிலுக்கு மட்டும் விதிவிலக்காக இதைப் பெற்றுக்கொள்வதற்காக முஸ்லிம் காங்கிரஸ் போராடும்.
இங்குள்ள பொதுச் சந்தை முகப்பை புனரமைத்து தரும் வேலையை இந்த வருடம் ஆரம்பிக்கவுள்ளோம். விளையாட்டு மைதானம் அமைத்து தருவதாக ஜனாதிபதி சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். விளையாட்டுத்துறை அமைச்சு மூலம்தான் அதை செய்யவேண்டும். இந்த வாக்குறுதியை காரணம்காட்டி, எங்களுடைய விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் மூலமாக அதற்கான நிதியொதுக்கீடுகளை கேட்டுப் பெறுவோம்.
ஹெடஓயா திட்டம் தொடர்பில் ஜனாதிபதி பேசிவிட்டுச் சென்றுள்ளனர். சம்பந்தப்பட்ட அமைச்சர் என்ற வகையில், அதற்கான அமைச்சரவைப் பத்திரம் தயாரித்து பொருளாதார உபகுழுவில் சேர்த்து அதற்கான அனுமதியை நானே வாங்கினேன். ஹெட ஓயா திட்டத்தில் நீர்ப்பாசன அமைச்சு தடையாக இருந்‌தது. இதற்காக அந்த அமைச்சரின் பாராளுமன்ற அறையில் நீர்ப்பாசன திணைக்களத்தின் சகல அதிகாரிகளையும் அழைத்துப் பேசினேன். இருக்கின்ற எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இதனை செய்து தருவதாக நீர்ப்பாசன அமைச்சர் வாக்குறுதியளித்திருக்கிறார்.
ஹெடஓயா திட்டத்தை அமுல்படுத்துவதில் நிதியொதுக்கீடு மாத்திரமே இப்போது பிரச்சினையாக இருக்கிறது. எனது பதவிக்காலத்தில் இந்த திட்டத்தை அமுல்படுத்திவிட்டுத்தான் நாங்கள் இங்கு வருவோம். நீர் வழங்கல் மாத்திரமின்‌றி, நீர்ப்பாசனத்தையும் ஒன்றாகச் சேர்த்துத்தான் ஹெடஓயா திட்டத்தை நாங்கள் செய்தற்கு திட்டமிட்டுள்ளோம். இந்த அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தையும் தங்குதடையின்றி செயற்படுத்த பொத்துவில் பிரதேச சபையின் ஆட்சியை எங்களிடம் ஒப்படையுங்கள் என்றார்.
 
ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்