கர்ப்பவதிகளும் றமழான் நோன்பும்

டாக்டர் எம்.எல். நஜிமுதீன் FRCOG(England), FCOG (SL), MS(SL), MBBS(Colombo)              

மகப்பேறு மாதர் நோய் விசேட வைத்திய நிபுணர்  

றமழான் மாதத்தில் நோன்பு நோற்போருக்கு எண்ணிறந்த நன்மைகள் கிடைக்கின்றன. அந்த நற்பேறுகளை உணர்ந்த கர்ப்பிணி மற்றும் பாலூட்டும்  தாய்மார்  றமழானில் நோன்பு நோற்பதில்  அதிகம் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கின்றனர். கர்ப்பத்தில் இருக்கும் சிசுவும் நோன்பின் நன்மைகளை அடைய வேண்டும் என்று அநேக தாய்மார் விரும்புகின்றனர். நோன்பு நோற்காவிட்டால் ஒரு பாவமாக ஆகிவிடுமோ என்ற குற்ற உணர்வில் பலர் தவிக்கின்றனர். அந்த நாட்களில் நோன்பை  விட்டு விட்டால் பின்னர் ஏனைய நாட்களில் தனியே நோற்பது சிரமமாகும்..ஆகவே எத்தனை கஷ்டங்களும் சங்கடங்களும்  இருந்தாலும் கர்ப்பவதிகளும் பாலூட்டும் தாய்மாரும் றமழான் மாதத்திலேயே நோன்பு நோற்க விரும்புகின்றனர்.

சாதாரண சுக தேகியான மக்களுக்கு றமழான் மாத நோன்பினால் அநேக நன்மைகள் கிடைக்கின்றன. ஆனால் கர்ப்பவதிகளும் பாலூட்டும் தாய்மாரும் றமழான் மாத நோன்பை நோற்க முடியுமா?

இலங்கையில் நோன்பு நோற்கும்போது பதின்மூன்று மணி நேரம் எதுவும் உண்ணாமலும் பருகாமலும் இருக்க வேண்டும். இவ்வாறு நீண்ட நேரம் பட்டினியாக இருந்தால் கர்ப்பிணியான தாய்க்கோ அல்லது அவரது வயிற்றில் இருக்கும் சிசுவுக்கோ ஏதாவது பாதகங்கள் ஏற்படுமா?

1964-84 காலப்பகுதியில் இங்கிலாந்தின் பேர்மிங்ஹம் பகுதியில் றமழான் மாதத்தில் நோன்பு நோற்றோருக்குப் பிறந்த 13,351 குழந்தைகளின் பிறப்பு நிறையை முஸ்லிம் அல்லாத குழந்தைகளின் பிறப்பு நிறையுடன் ஒப்பிட்டபோது எந்தவிதமான வித்தியாசங்களும் காணப்படவில்லை. இவ்வாறு பல ஆய்வுகள் றமழான் மாத நோன்பினால்  சிசுவின் பிறப்பு நிறையில் எந்த விதமான குறைவும் ஏற்படுவதில்லை என்று நிறுவி உள்ளன.

கர்ப்ப காலத்தில் நோன்பு நோற்றோரின் பிள்ளைகளின் கல்வி நிலையை அவதானித்தபோது அந்த சிறுவர்களின் விவேக ஈவில் (IQ) எந்த வித குறைபாடும் காணப்படவில்லை.

இஸ்லாத்தின் நிலைப்பாடு

அல்குர்ஆன் இரண்டாம் அத்தியாயம்  183, 184 மற்றும்  185  ஆம் வசனங்களில்  நோன்பைப்பற்றி இவ்வாறு குறிப்பிடபட்டுள்ளது.

 (இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்); ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக –  (வறுமையானவருக்கு) உணவளிக்க வேண்டும்; எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது – ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). (அல்குர்ஆன்2:184.)

றமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).   (அல்குர்ஆன் 2:185)

இந்த வசனங்களைக் கர்ப்பவதியான பெண்களும், பாலூட்டும் தாய்மாரும்  எப்படி எடுத்துக்கொள்வது?

 (a)அவர்களுக்கு  எந்த வித சங்கடமும் இல்லையென்றால் அவர்கள் றமழானில் நோன்பு நோற்க வேண்டும்.

(b)கர்ப்பிணியான பெண்ணை ஒரு சிறிது கால நோயாளியாகக் கருதினால் அவர்  றமழானில் நோன்பை விட்டு விட்டுப் பின்னர் கணக்கிட்டு அவற்றை நோற்க வேண்டும்.

(c) கர்ப்பிணிப் பெண்களை (முதியவர்கள் போன்று) கடுமையான நோயாளிகளாகக் கருதினால் றமழானில் நோன்பு நோற்கத் தேவை இல்லை.  குழந்தை பிறந்த பின்னரும் நோன்பு நோற்கத் தேவையில்லை.

(d) றமழானில் நோன்பு நோற்கா விட்டால் பிராயச்சித்த தானம் (பித்யா) கொடுக்க வேண்டுமா?

இந்த விடயங்களைச் சற்று ஆராய்வோம்.

(a) அவர்களுக்கு எந்த வித சங்கடமும் இல்லையென்றால் அவர்கள் றமழானில் நோன்பை விடலாமா? அல்லது நோன்பு நோற்க வேண்டுமா?

கர்ப்பமான பெண்களுக்கு அநேக பிரச்சினைகள் ஏற்படுகின்றன. றமழான் மாதத்தில் உணவு வகைகளும் நேரங்களும் மாறுகின்றன. தூக்க நேரமும் அளவும் வேறுபடுகின்றன. நல்ல தேக ஆரோக்கியமான பெண் ஒருவர் கர்ப்பம் அடையும்போது இரத்த அழுத்தம் (Pregnancy induced hypertension and pre-eclampsia), கர்ப்ப கால நீரிழிவு (Gestational diabetes mellitus) மற்றும் இரத்தக் குறைவு (Anaemia) போன்ற நோய்கள் ஏற்படலாம். முறையாகச் சாப்பிட முடியாமை (nausea),  வாந்தி (vomiting) போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

நோன்பு நோற்கும் கர்ப்பவதியான பெண்களில் சாப்பிட முடியாமை (Nausea) வயிற்றுக் குமட்டலும் வாந்தியும் (vomiting) அதிக அளவில் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு. நீரைக் குறைவாகக் குடிப்பதாலும் அதிக நேரம் பருகாமல் இருப்பதாலும் சிறுநீரகத் தொகுதியில் கிருமிகள் தோற்ற வாய்ப்புண்டு. சிசுவின் சுவாச அசைவுகள் குறையலாம் என்று சிலர் கருதுகின்றார்கள். கர்ப்ப காலத்தின்போது அதிக நேரம் பட்டினியாக இருந்தால் அந்தக் குழந்தைகள் பிற்காலத்தில் இருதய நோய், இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்படலாம் என்று கருதப்படுகின்றது. ஆனால் பதினைந்து மணி நேரத்திற்கும் குறைவாக நோன்பு நோற்கும்போது இந்தத் தாக்கங்கள் ஏற்படாது.

நீண்ட நேரம் ஒருவர் பட்டினியாக இருந்தால் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைவதோடு (Hypoglycaemia) கீற்றோன்களின் அளவும் கூடுகின்றது (Hyperketonuria). இவற்றால் சிசுவின் நிறை குறைகின்றது. நோய்கள் அதிகரிக்கின்றன. இலங்கை போன்ற நாடுகளில் 12-13 மணி நேரம் நோன்பு நோற்கும்போது இந்தப் பிரச்சினைகள் ஏற்படாது. ஆனால் டென்மார்க்கில் 21 மணி நேரம்  நோன்பு நோற்க வேண்டும். அங்கு கர்ப்பவதிகளும் பாலூட்டும் தாய்மாரும் நோன்பு நோற்பது நல்லதல்ல. .

அதிகமான  தளர்வு, களைப்பு மற்றும் சோர்வு நிலை என்பவற்றால் பலர்  அவதியுறுகின்றார்கள். நோன்பு நோற்கும்போது  இவைகளின் பாதிப்புக்கள்   அதிகமாகின்றன.

கர்ப்பவதியான பெண்கள் நோன்பு நோற்பதால் குழந்தைகளுக்குக் குறுகிய காலங்களில் ஏற்படும் விளைவுகளைப்பற்றித்தான் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதே தவிர நீண்ட கால விளைவுகள் பற்றி முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.

கர்ப்பவதிகளும் றமழான் மாத நோன்பும் என்ற என்னுடைய கட்டுரை ஒன்று பிரித்தானிய மருத்துவ சஞ்சிகை ஒன்றில் பிரசுரமாகி உள்ளது.  றமழான் மாத நோன்பினால் சிசுக்களுக்கு ஏற்படக்கூடிய விளைவுகள்  பற்றி விளக்கியுள்ளேன்.  இது கர்ப்பவதிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்காக எழுதப்பட்டதாகும். இதில் மேலதிக மருத்துவத் தகவல்கள் உள்ளன.

Najimudeen M, Pregnancy and Ramadhan Fasting . British Journal of Medicine & Medical Research 16(12): 1-14, 2016, Article no.BJMMR.26451  என்ற இணையத்தில் இந்தக் கட்டுரை உள்ளது.

ஆகவே கர்ப்பமான பெண்களைச் சாதாரண சுகதேகிகளாகக் கருத முடியாது. எனவேதான் கர்ப்பவதியான பெண்களும் பாலூட்டும் தாய்மாரும்  நோன்பு நோற்கத் தேவை இல்லை என்று அநேக ஹதீஸ்களில்  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதிவிலக்கு அளித்துள்ளார்கள் .

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள். “பிரயாணிகளுக்கு அரைவாசித் தொழுகையையும், நோன்பு நோற்பதனையும் நீக்கி விட்டான். கர்ப்பவதிகளுக்கும் பாலூட்டும் தாய்மாருக்கும் நோன்பை நீக்கி விட்டான்.” (அபூ தாவூத் 2408, திர்மிதி 715,  நஸாயி 2315,  இப்னு மாஜா  1667)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழங்கிய சலுகையைப்  பலவிதமாக அர்த்தம் கொள்கின்றார்கள்.

(i)தாய்க்கோ அல்லது கருவில் உள்ள சிசுவுக்கோ ஆபத்துக்கள் விளையக்கூடிய சூழல் இருந்தால் மட்டுமே  நோன்பு நோற்கத் தேவை இல்லை. இப்படியான அபாயங்கள் இல்லாவிடில் கட்டாயம் நோன்பு நோற்க வேண்டும் என்று ஒரு சாரார் கருதுகின்றார்கள்

(ii) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதிவிலக்கு அளித்துள்ளதால் கர்ப்பவதிகள் நோன்பு நோற்க வேண்டிய அவசியமே இல்லை என்று இன்னுமொரு  சாரார் கருதுகின்றார்கள்.

எல்லாக் கர்ப்பமான பெண்களும் ஒரே மாதிரியாக இல்லை. சிலர் கர்ப்பமான உடனேயே அயர்ந்து களைத்து உணவேதும் உண்ண முடியாமல் சோர்ந்து விடுகின்றார்கள். சிலரோ எந்தவித தாக்கங்களும் இன்றித் தங்கள் அன்றாட வேலைகளை வழக்கம்போல் செய்கின்றார்கள்.

றமழான் நோன்புடன் பிரசவ வேதனையில் அனுமதிக்கப்பட்டுப் பிரசவ அறையில் நோன்பு துறந்து அதன் பின்னர் சில மணி நேரங்களில் பிரசவித்த பல சகோதரிகளை நான் கண்டு இருக்கின்றேன். அவர்கள் உறுதியான ஈமான் கொண்டவர்கள். மனோதிடம் மிக்கவர்கள். சக்தி மிக்க  உடலைக் கொண்டவர்கள். ஆகவே கர்ப்பமான பெண்கள் நோன்பு நோற்க வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பது அவரவரின் உடல் நலத்தைப் பொறுத்ததே தவிர பொதுவான  முடிவு அல்ல.

முதல் மூன்று மாத காலங்களில் (12 வாரங்களில்) தான் சிசுவின் அவயவங்கள் உருவாகின்றன. நீண்ட நேரம் பட்டினியாக இருந்தால் ஒருவேளை அது சிசுவைப் பாதிக்கலாம். இதற்குச் சரியான ஆதாரங்கள் இல்லை. இருந்தாலும் அல்லாஹ் ஒருவருக்கும் சிரமத்தை விரும்புவதில்லை. அதுபோன்று கடைசி மூன்று மாதங்களிலும் நீண்ட நேரப் பட்டினி குழந்தையைப் பாதிக்கலாம். ஆகவே நல்ல தேக ஆரோக்கியமுள்ள பெண்கள் நோன்பு நோற்க விரும்பினாலும் இந்த இரண்டு காலப் பகுதிகளிலும் காலத்தில் நோன்பு நோற்பது விரும்பத்தக்கதல்ல.

(b), (c)அடுத்து  கர்ப்பிணியான பெண்ணை ஒரு சிறிது கால நோயாளியாகக் கருதினால் அவர்  றமழானில் நோன்பை விட்டு விட்டுப் பின்னர் அவற்றை நோற்க வேண்டுமா அல்லது கர்ப்பிணிப் பெண்களை (முதியவர்கள் போன்று) கடுமையான நோயாளியாகளாகக் கருதினால் குழந்தை பிறந்த பின்னர் நோன்பு நோற்கத் தேவையில்லையா? என்று நோக்குவோம்.

அல்குர்ஆன் இரண்டாம் அத்தியாயம்  183, 184 , 185 ஆம் வசனங்களை விளக்கும்போது கர்ப்பிணிப் பெண்களை  ஒரு தற்காலிக நோயாளர்களாகக் கருதினால் அவர்  றமழானில் நோன்பை நோற்காமல் விட்டால்  பின்னர் அவற்றைக் கணக்கிட்டு நோற்க வேண்டும். அவர்களை முதியவர்கள் போன்று கடுமையான நோயாளிகளாகக் கணித்தால் அவர்கள் றமழானில் நோன்பு நோற்கத் தேவையும் இல்லை. விடுபட்ட நோன்பைப் பின்னர் நோற்க வேண்டியதும் இல்லை. இது சம்பந்தமாக அறிஞர்களின் அபிப்பிராயம் என்ன?

(a)றமழான் மாதத்தில் நோன்பு நோற்க முடியா விட்டால் விடுபட்ட அனைத்து நோன்புகளையும் பின்னர் கணக்கிட்டு நோற்க வேண்டும். பிராயச்சித்த தானம் (பித்யா) கொடுக்கத் தேவை இல்லை. இது அலி இப்னு அபூதாலிப் (ரழி) மற்றும் இமாம் அபூஹனிபா (ஹனபி மத்ஹப்) ஆகியோரின் கருத்தாகும்.

(b)கர்ப்பவதி ஒருவர் தனக்கு மட்டும் பாதிப்பு ஏற்படும் என்று நினைத்தால் விடுபட்ட அனைத்து நோன்புகளையும் கணக்கிட்டுப் பின்னர் நோற்க வேண்டும். . குழந்தைக்குப் பாதிப்பு என்று கருதினால் விடுபட்ட அனைத்து நோன்புகளையும் கணக்கிட்டுப் பின்னர் நோற்க வேண்டும். அத்துடன் பிராயச்சித்த தானம்  கணக்கிட்டுக் கொடுக்க வேண்டும். இது உமர் (ரலி) மற்றும் ஷாபி இமாம் ஆகியோரின் கருத்தாகும்.

(c) விடுபட்ட நோன்புகளுக்குக் கணக்கிட்டுப் பிராயச்சித்த தானம்  கொடுக்க வேண்டும். .ஆனால் விடுபட்ட நோன்புகளை நோற்கத் தேவை இல்லை. இது அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) மற்றும் இப்னு குதாமா ஆகியோரின் கருத்தாகும். இவ்வாறு இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாக அல்-முக்னி என்ற நூலில் (3/37) குறிப்பிடப்பட்டுள்ளது (Ref: As-Sunnah: Volume 2 Issue No. 1)

.இப்னு அப்பாஸ் அவர்கள் கர்ப்பவதியான (அல்லது பாலூட்டும் ஒரு பெண்ணை) றமழான் மாதத்தில்  கண்டார்கள். அந்தப் பெண்ணிடம் நீர் றமழானிலோ அல்லது அதன் பின்னரோ நோன்பு நோற்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் தானம் கொடு என்று கூறினார்கள். இந்த விபரம் At-Tabari in His Tafsîr (Exegesis) (hadith 2318). Al-Albâni said in “Al- Irwâ’“ (4/19), Abu Dâwûd (hadith 2318), ,At-Tabari in His Tafsîr (Exegesis) (2/136), and Ad-Dâraqutni in his “Sunan” (2/206) ஆகியவற்றில் பதிவாகி உள்ளது.

இப்னு உமர் (றழி) அவர்களின் மனைவி கர்ப்பமாக இருந்தபோது அவர் றமழானில் நோன்பு நோற்கத் தேவை இல்லை என்றும் அதன் பின்னர் அவற்றை நோற்கத் தேவை இல்லை என்றும் ஆனால் அவர் தானம் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். இது சுனன் அல்-தாற குத்னி என்ற நூலில் (2/206,207) பதிவாகி உள்ளது.

பிராயச் சித்த தானம் என்பது  அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி, மற்றும் இப்னு உமர் (றழி) ஆகியோரின் தனிப்பட்ட அபிப்பிராயங்களாகவே தென்படுகின்றன.

இந்த ஆய்வுகளில் இருந்து கர்ப்பவதிகளும் பாலூட்டும் தாய்மாரும் றமழான் மாதத்தில் நோன்பு நோற்க வேண்டுமா? அப்படி நோன்பு நோற்க முடியாத பட்சத்தில் அவற்றைக் கணக்கிட்டுப் பின்னர் நோற்க வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

(d) றமழானில் நோன்பு நோற்கா விட்டால் பிராயச்சித்த தானம் (பித்யா) கொடுக்க வேண்டுமா?

நோன்பு நோற்காத நாட்களைக் கணக்கிட்டு நாள் ஒன்றுக்கு 750 கிராம் வீதம் அரிசியைப் பிராயச் சித்த  தானமாக வழங்க வேண்டும்.என்று அதிகமானோர் அபிப்பிராயம் தெரிவிக்கின்றார்கள்.

அல்குர்ஆன் 2: 183 மற்றும்  184 ஆம் வசனங்கள் இறங்கிய வேளையில் நோன்பு நோற்க சக்தி பெற்றவர்கள் விரும்பினால் நோன்பு நோற்கலாம். விரும்பாதவர்கள்  நோன்பு நோற்காமல் பிராயச் சித்த  தானம் வழங்கலாம் என்ற விதி இருந்தது. ஆனால் அல்குர்ஆன் 2:185 ஆம் வசனம் இறங்கியதும் சக்தி பெற்றவர்கள் அனைவரும் நோன்பு நோற்க வேண்டும் என்று கடமையாக்கப்பட்டது. இந்த வசனத்தில் பிராயச் சித்த  தானம் பற்றிக் குறிப்பிடப்பட வில்லை. ஆகவே சக்தி பெற்றவர் கட்டாயம் நோன்பு நோற்றாக  வேண்டும். சக்தி இல்லாத முதியோர், கடும் வியாதி உடையோர் போன்றவர்களுக்கு  நோன்பு அவசியம் இல்லை. பிராயச் சித்த  தானமும் தேவை இல்லை என்று விளக்கம் கொடுக்கப்படுகின்றது.

அல்குர்ஆன் 183, 184 ஆம் வசனங்கள் இறங்கிய வேளை முஸ்லிம்கள் மாதத்தில் 3 நாட்கள் மாத்திரமே நோன்பு நோற்றார்கள். 185 ஆவது வசனம் இறங்கிய பின்னரே  றமழான் மாத நோன்பு கடமை ஆகியது. இந்த வசனம் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ஷஅபான் மாதம் பிறை இரண்டாம் நாள் இறங்கியது. இந்த வசனத்தில் தானம் கொடுப்பதைப் பற்றிக் குறிப்பிடவில்லை. ஆகவே விடுபட்ட நோன்பிற்காகத்  தானம் கொடுப்பது முன்னர் கடமை ஆக இருந்தது. 185 ஆவது வசனத்தின் பின்னர் அது அவசியம் இல்லை என்று பலர் அபிப்பிராயப் படுகின்றார்கள்

அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள்  கூறுகின்றார்கள் .றமழானில் விடுபட்ட நோன்புகளுக்குப்  பரிகாரமாக  ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்ற வசனத்தை   இப்னு உமர் (ரழி) அவர்கள் ஓதிவிட்டு  இந்த வசனம் கூறும் சட்டம் மாற்றப்பட்டுவிட்டது என்றார்கள் (சஹீஹுல் புஹாரி  பாகம் 2,அத்தியாயம் 30 எண் 1949)

பிராயச் சித்த தானம் என்பது  அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி, மற்றும் இப்னு உமர் (றழி) ஆகியோரின் தனிப்பட்ட அபிப்பிராயங்களாகவே தென்படுகின்றன.

நோன்பு நோற்க முடியாத வயது முதிர்ந்தவர்களும் கடுமையான நோயாளர்களும் பிராயச் சித்த தானம் கொடுக்க வேண்டும் என்றால் முப்பது நாட்களுக்கும் நாள் ஒன்றுக்கு 750 கிராம் அரிசி வீதம் 22.5 கிலோ அரிசி தானமாகக் கொடுக்கப் படல் வேண்டும். தான் சாப்பிடுவதற்கே கஷ்டப்படுகின்ற ஒரு பரம ஏழை முதியவரால் இந்தத் தொகையைத் தானமாகக் கொடுக்க முடியுமா? ஆகவே நோன்பு நோற்க முடியாத வயது முதிர்ந்தவர்களும் கடுமையான நோயாளர்களும் பிராயச் சித்த தானம் கொடுக்கத் தேவை இல்லை என்று கருதப்படுகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எந்த ஹதீஸிலும் விடுபட்ட நோன்புகளுக்காக முதியவர்களோ அல்லது கடுமையான நோய் உள்ளவர்களோ  பிராயச் சித்த தானம் கொடுக்க வேண்டும் என்று  குறிப்பிடப்படவில்லை

நான் வாசித்தவற்றை எழுதி உள்ளேன். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிஞர்களுடன் கலந்தாலோசித்து முடிவு பண்ணுங்கள். அல்லாஹ் நம்மை நேரான வழியில் நடாத்துவானாக. அவனது நல்லருள் பெற்ற அடியார்களாக நம்மை ஆக்குவானாக.