ஹக்கீமுக்கு தேசிய பட்டியலைக் காணவில்லை என பதறுவது ஒன்றும் புதிதல்ல

ஹக்கீம் தலைவராக பதவியேற்றது முதல் மக்கள் மத்தியில் முஸ்லீம் காங்கிரசின் ஆதரவும், தேர்தல் களமும் சரியாகவே காணப்பட்டது. இந்த தேர்தல் களத்தினை சரியாக அமைத்துக் கொள்ள ஹக்கீம் கையில் எடுத்த கேடயமும்,  ஆயுதமும்  மர்ஹூம் அஷ்ரபின் கட்சியை பாதுகாப்போம் என்ற கோசத்துடனான    மித மிஞ்சிய வாக்குறுதிகளாகும். கட்சியை பாதுகாக்க முன்வந்த மக்கள் ஹக்கீமால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டுமென எதிர்பார்த்தார்கள், இதில் நிறைவேற்றியவை என்பதைவிட ஏமாற்றங்களே அதிகமாக காணப்பட்டது.

 17 வருடங்கள் தண்ணீரில் எழுதிய எழுத்தாக  ஹக்கீமின் வாக்குறுதிகள் கலைந்து போனதாகவே இன்று மக்கள் நோக்குகின்றார்கள். மக்களை தொடர்ந்து ஏமாற்றுவது சரியல்ல என்ற மன உறுத்தல் கூட இல்லாமல்  சீசனுக்கு வீசுகின்ற காற்றைப்போல்  வந்து போகும் ஹக்கீம் வேலைவாய்ப்பு, அபிவிருத்திகள் என்பது முதல் தேசியப்பட்டியல் வரை காய் நகர்த்தல்கள் நத்தையையும் மிஞ்சிய  கால நகர்த்தலாகவே காணப்படுகிறது. வாக்குகளை அள்ளி வழங்கி தேர்தல் களத்தினை சரியாக மக்கள் அமைத்துக் கொடுத்தும் ஹக்கீமால் அரசியல் களம்  பல கோணங்களில்  கோட்டை விடப்பட்டுள்ளது. மக்களின் வாக்குப்பலம் ஹக்கீமின் சொந்த பிரச்சனைகளுக்கு ஈடாக கொடுக்கப்பட்டுள்ளது, கடந்த அரசில் முன்னாள் ஜனாதிபதியால் வைத்திருக்கப்பட்ட முக்கிய ஆவணக் கோவைகளில்   ஹக்கீமின் கப்பல் கொள்வனவு, குமாரியால் கொடுக்கப்பட்ட கொள்ளுப்பிட்டி போலீஸ் முறைப்பாடு, சட்டக்கல்லூரி முறைகேடு போன்றவைகள் ஹக்கீமின் வாய்க்கும், கைக்கும் பூட்டைப் போட்டிருந்தது, வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகள் பெட்டியில் அடைத்த சவமாகி காணப்பட்டது .

 முஸ்லீம் காங்கிரசின் உயர் பீடத்தினைக் கேட்டால் ஹக்கீம் அவரது பிழைகளை எங்களிடம் ஏற்றுக்கொண்டுள்ளார், குமாரியுடன் இருந்ததை  ஜம்மியத்துல்  உலமா  சபை    உட்பட எங்களிடமும் ஒத்துக்க கொண்டுள்ளார், பெண்கள் விடயத்தில் அதிகரித்த மன்மதலீலை விளையாட்டினால்  அவரது மனைவி, பிள்ளைகள் பல வருடங்கள் ஹக்கீமுடன் உறவில்லாது பேசாது இருந்தார்கள்     என சொல்வதால் அன்றாடம் மக்கள் எதிர் நோக்கும் அவலங்கள், ஏமாற்றங்கள், மாணிக்கமடு, முசலி  போன்ற உரிமைப் பிரச்சனைகள்   நீங்கி விடுமா? ஹக்கீமுக்கு தலைமையையும் கொடுத்து, எங்களது வாக்குகளையும் கொடுத்து, அதிகாரத்தினையும் கொடுத்து, மாயக்கல் மலை போன்ற இடங்களில் எங்களது உரிமையையுமிழந்து, இன்னும் நாங்கள் எங்களையும் அடிமையாக்க முடியாது. குறிப்பாக எங்களது பெண்களின் கற்புகளையும் ஹக்கீமுக்கு தாரை வார்க்க முடியாது  என கிழக்கில் கோஷங்கள் அதிகரித்து வருகின்றன. 

 மக்களுக்காகத்தான் கட்சி, கட்சிக்காக மக்களல்ல. ஹக்கீமுக்காக கட்சியுமல்ல, மக்களுமல்ல இது இன்றய கிழக்கு மக்களின் முணுமுணுப்பு,   இந்தக்கட்சியினை உருவாக்கிய ஹஸனலி,பஷீர் போன்றோரை இக்காட்சியை விட்டு தூரமாக்க 100 வீதம் சுயநலமான  காரணம்  ஹக்கீமிடமுள்ளது. கேட்டால் இது கட்சியை பாதுகாக்க எடுத்த முடிவு  என்பார்.  மறுமுனையில் தேர்தல்களும் முஸ்லீம்களின்  வெற்றிகளும், ஹக்கீமால் வியாபாரமாக்கப்பட்டுள்ளது. ஹக்கீமுக்கு எதிராக ஜெயலலிதாவைப் போல்  சொத்துக் குவிப்பு  வழக்கு மாத்திரமே இன்னும்   வெளிவரவில்லை. 

வாக்குறுதிகளுக்கும், பொய்யிற்கும் நிறைய வித்தியாசமுண்டு இதை ஹக்கீமின் விடயத்தில் ஒன்றாகவே மக்கள் பார்க்கிறார்கள்.  ஹக்கீமாலும் ஹக்கீம் அணியாலும்   நாட்டிய அடிக்கல்கள் மழைக்கு முளைத்தால் தான் உண்டு என மக்கள் பரிகாசம் செய்யும் காலமிது. உயர்பீட அனுமதியின்றி இரண்டு வாரங்களுக்கு மாத்திரம் என ஹக்கீமால்  கொடுக்கப்பட்ட பாராளுமன்ற தேசியப்பட்டியல்கள் நாறிப்போய் கிடக்கின்றன. புஷ்ப குமாரவுக்கு கொடுக்கப்பட்ட தேசியப்பட்டியல் ஜெர்மனியில் புஸ்ப குமாரவின் குடும்பத்துக்கு புகலிடம் கிடைத்த பின்பே பெறப்பட்டது. மாமனார் குத்தூஸூக்கு கொடுக்கப்பட்ட தேசியப்பட்டியல்  குவைத் நாட்டுக்கு தூதுவராக பதவி கொடுத்த பின்பே பெறப்பட்டது. ஹுசைன் பைலாவுக்கு கொடுக்கப்பட்ட தேசியப்பட்டியல் திரும்பி வரவேயில்லை. புத்தளம் பாயிஸ், நிஜாமுதீனுக்கு கொடுத்த தேசியப்பட்டியல்கள் கொடுக்கும் போதே போய் விட்டது.  இதே  போல்  ஹக்கீமின் தேசியப்பட்டியல் கதைகள் நிறைய உண்டு. ஆனால்   ஹஸனலி, பஷீர் போன்றோருக்கு தேசியப்பட்டியலில் கொடுத்தும் இவர்கள் கட்சியை விட்டு போகவில்லை அதனால் தான் ஹக்கீம் இவர்களை கட்சியை விட்டு வெளியேற்றினார். 

 இறுதியாக நடை பெற்ற கட்டாய உயர்பீடக் கூட்டத்திலிருந்து நடுவிலேயே  ஹஸனலி வெளியேறும் போது தாக்கும் நோக்கில் பல அடி தடி குண்டர்களையும், கூலிப்படையினரையும் தாருஸ்ஸலாம் வாசலிலே கண்டதாக கூறினார். இதில் யோசிக்க வேண்டிய விடயம் யாதெனில் அவ்வுயர்பீடக் கூட்டத்தில் ஹஸனலியால், பஷீரால் ஏதும் சலசப்புக்கள் வரலாம் என ஹக்கீம் அணியினர் எதிர்பார்த்தது உண்மைதான் அதற்காக  ஹஸனலியையும், பசீரையும் தாக்கும் நோக்கில் குண்டர்களும், கூலிப்படையினரும்   கொண்டு வரப்பட்டார்கள்  என்பது   மிகவும்  பாரதூரமான விடயமாகும்  அத்துடன் இந்த கட்டாய உயர்பீடக் கூட்டம் எந்தளவிற்கு சகல விடயங்களிலும்  உள்ளேயும், வெளியேயும்  திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பதை மக்களாகிய நாங்கள் தான் உணர்ந்துகொள்ள வேண்டும்.

சல்மானிடம் கொடுத்த தேசியப்பட்டியல் இரண்டு வருடமாகியும்  மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கை  ஹக்கீம் உட்பட எவருக்குமே கிடையாது. இவ்வாறு கிடைக்கும் தேசியப்பட்டியல்களை எல்லாம் தொலைத்து விட்டு ” தேசிய பட்டியலைக் காணவில்லை, தேசிய பட்டியலைக் காணவில்லை   ” என பதறுவது  ஹக்கீமுக்கு ஒன்றும்  புதிதுமல்ல கிழக்கு மாகாணத்தானின் தலையில் மிளகாய் அரைப்பது பழசுமல்ல. இவைகள் கிழக்கு  மண்ணுக்கு சொந்தமான தேசியப்பட்டியல்கள். ஊரார் வீட்டு நாட்டுக்கு கோழியை அறுத்து ஹக்கீம் திண்ட கதையாகி விட்டது.     

இதற்குள் கிழக்கில்  தேசியப்பட்டியலில்  பாராளுமன்ற உறுப்பினர்   தருவதாக ஊருக்கு ஊர் வாக்குறுதி, அதிலும் அட்டாளைச்சேனை  மக்கள்  ஹக்கீமின் கதையை நம்பி ஹஸனலிக்கு இனி ஏசுவதற்கு வார்த்தைகள் இல்லாது வெளி நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்து,    ஹஸனலியும் ஹக்கீமை நம்பி ஏமாந்தவர் என்பதையும் பாராது ஏசினார்கள். அட்டாளைச்சேனைக்கு  இன்று தேசியப்பட்டியலில்  பாராளுமன்ற உறுப்பினர் கிடைத்து விட்டதா?  மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கணக்கில் தான் இதை சேர்க்க வேண்டும். இது தான் ஹக்கீம், இனி  அட்டாளைச்சேனைக்கும் ஆப்பு தான்,   கிழக்கு மாகாணத்தை பாருங்கள் என்று   மக்கள் அவரை நம்பியிருப்பதாக ஹக்கீமின் நினைப்பு,  இதைவிட எங்களது கிழக்கு  மாகாணத்தான் எவ்வளவோ சிறப்பு. கிழக்கு மாகாணத்துக்காக போராட எத்தனையோ திறமைசாலிகள் உள்ளனர், கிழக்கு மாகாணம் நனைகின்றது என ஓநாயாக அழுது இவ்வளவு நாளும் நடித்து மாட்டிக் கொண்டது, ஹக்கீம் அணிக்கு இன்னும் புத்தியை கொடுக்கவில்லையா ?  இன்னும் ஒரு மாதத்துக்குள் சல்மான் தேசியப்பட்டியலை தராது விட்டால் ஹக்கீம் அட்டாளைச்சேனை மக்களுக்காக அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து கொடுப்பாரா? முடிந்தால் செய்து காட்டட்டும்.

 ஆனால் ஒரு நாளும் இதை ஹக்கீம் செய்ய மாட்டார். காரணம் ஹக்கீமுக்கு கிழக்கைப்பற்றி எந்த அக்கறையுமில்லை, இப்போது ஹக்கீம் வாழ்வது பகல் கனவான நோர்வே உலகில்   என்பதால் ஹக்கீமின் சூனியங்கள் கிழக்கில் இனி பலிக்காது, எந்தப் பிரயோசனமும் இல்லாத ஏட்டுச் சுரக்கையான ஹக்கீம்  இனி  கிழக்கு மக்களுக்கு தேவையுமில்லை,  ஆனால்   கிழக்கு மக்கள் சிந்தித்தால் நாங்கள் பெரும் பான்மை கட்சிகளின் பின்னால் போக வேண்டிய அவசயமில்லை, கிழக்கில்  முஸ்லீம் காட்சிகள்  ஒன்று சேர்ந்தால்    பெரும் பான்மை காட்சிகள் எங்கள் பின்னால் வரும். எமக்கேற்ற பாதையில்  மர்ஹூம் அஷ்ரபின் வழியில் சென்று  நாங்கள் தலை நிமிர்ந்து வாழலாம்.

அமீர் மௌலானா