கேப்பாப்புலவு: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது – கஜேந்திரகுமார்

காணிகளை விடுவிப்போம் என கூறும் இராணுவத்தினர் நம்பிக்கையூட்டும் வகையிலான செயற்பாடுகளையே முன்னெடுத்துள்ளனர். ஆனால் காணிகளை கையளிக்கும் காலத்தை மாத்திரம் இதுவரையில் அறிவிக்கவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கேப்பாப்புலவு போராட்ட இடத்திற்கு சென்ற அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கேப்பாப்புலவு மக்களின் ஒன்றுமையான போராட்டத்தினை பிரிக்கும் நோக்கில் சில சக்திகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இதன் அடிப்படையில் இராணுவத்தரப்பினர் ஒருபகுதி காணிகள் விடுவிக்கப்படும் என்று கூறியதுடன் நமபிக்கையூட்டும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் கேப்பாப்புலவு மக்களின் காணிகள் முற்று முழுதாக விடுவிக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று இன்று அந்த மக்கள் ஒற்றுமையாக கூறியுள்ளனர்.

இதன்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என்பது உறுதி என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இதேவேளை நேற்று பிற்பகல் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், பாரளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன், சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறீஸ்கந்தராசா, கே.கே.மஸ்தான் ஆகியோர் இணைந்த குழு நேற்று பிற்பகல் கேப்பாப்புலவு இராணுவ முகாமிற்குள் சென்று இராணுவத்தினர் கையளிக்கவுள்ள ஒரு பகுதி காணிகளை நேரடியாக பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.