முகநூல் மொக்கைகள்…

Mohamed Nizous

நெத்தலிக் கறியுடன்
நேற்றைய மிச்ச சோற்றை
மொத்தமாய் உண்டு விட்டு
முகனூலின் சுவர்களிலே
மெக்டொனால்ட் சென்று
மிகுதமாக உண்டதனால்
விக்குகிறது ப்ரண்ட்ஸ் என்று
வீறாய்ப்பாய் போடுவார்

விக்கி பீடியாவில்
விபரத்தை கொப்பி பண்ணி
கொக்கு கொத்துவது போல்
கூகிளிலும் கொத்தி எடுத்து
நெக்கும் இங்லீஸில்
நிறையப் போடத் தெரியுமென்னு
மொக்கையாய் போடுவார்
முக நூல் ‘அரி’ஞர்கள்

ரோட்டிலே நிற்கின்ற
றோல்ஸ்ரொய்ஸ் காரின் முன்
போட்டொவைப் பிடித்து
பொருத்தமாய் எடிட் பண்ணி
கட்டாரில் ஓடித் திரிய
கம்பனியால் தந்த வண்டி என்று
விட்டு அடிக்கின்ற
வேடிக்கை பேஷ் புக்கில்.

கிழடாகிப் போன
ஹிந்தி நடிகை ஒன்று
இளமைக் காலத்தில்
எடுத்த போட்டோ போட்டு
அழகி இவள் என்
‘அந்த நாள்’ என்று சொல்லி
சில மூத்த போராளிகள்
சிரிப்பூட்டும் இடம் பேஷ் புக்

மையவாடிக் காட்டுக்குள்
மரத்தின் கொப்புகளில்
கைபிடித்துத் தொங்கும்
காட்டுக் குரங்குகளை
இஸ்டத்துக்குப் படம் பிடித்து
எல்லோர்க்கும் செயார் பண்ணி
டிஸ்டகவரி ரேஞ்சுக்கு
பில்டப் கொடுப்பார்கள்

வார்த்தையை முறித்து
வாக்கியத்தைத் தறித்து
யாருக்கும் விளங்காது
எதேதோ எழுதி
பார் என் கவிதை என்று
பாடவதி தருகின்ற
எழுத்தாளப் பெருமக்கள்
இருக்கிறார் பேஷ் புக்கில்.

போட்டுள்ள தொப்பி
பொருத்தம் சிலருக்கே
கேட்டுப் போட்டுக் கொள்வோர்
கிளர்ந்து வர வேண்டாம்
பயன் தரும் விடயங்களைப் 
பதிவிடுவோர் பலருண்டு
உயர்ந்த உள்ளங்கள்
உயர்ந்த உள்ளங்களே!