பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்தில் சார்க் மாநாடு விரைவில் நடைபெறும்..?

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்தில் சார்க் மாநாடு விரைவில் நடைபெறும் என்று அந்நாட்டுப் பிரதமரின் வெளியுறவுக் கொள்கைகளுக்கான ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் நம்பிக்கை தெரிவித்தார். 

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பூடான், நேபாளம், மாலைதீவுகள் ஆகிய 8 நாடுகளை உள்ளடக்கியது சார்க் அமைப்பு. ஒவ்வோர் ஆண்டும், இந்த அமைப்பின் சார்பில் மாநாடு நடைபெறுவது வழக்கம். 

அந்த வகையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சார்க் மாநாடு நடைபெறுவதாக இருந்தது. 

இந்தநிலையில், காஷ்மீரின் உரியில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல், எல்லையில் நிலவிய பதற்றம் உள்ளிட்டவை காரணமாக அந்த மாநாட்டைப் புறக்கணிப்பதாக இந்தியா அறிவித்தது. மேலும் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் மாநாட்டைப் புறக்கணிப்பதாக அறிவித்தன. 

இதையடுத்து, அந்த மாநாடு இரத்து செய்யப்பட்டது. இதுஇவ்வாறு இருக்க சார்க் அமைப்பின் தற்போதைய பொதுச் செயலாளரான நேபாளத்தைச் சேர்ந்த அர்ஜுன் பகதூர் தாபா அரசுமுறைப் பயணமாக இஸ்லாமபாத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றார். 

அவர் சர்தாஜ் அஜீûஸ சந்தித்துப் பேசினார். அப்போது, இஸ்லாமபாத்தில் 19-ஆவது சார்க் மாநாட்டை விரைவில் நடத்துவதில் பாகிஸ்தான் உறுதியாக இருக்கிறது என்று அஜீஸ் தெரிவித்தார். 

இதையடுத்து, இஸ்லாமபாத்தில் சார்க் மாநாடு நடைபெறும் என்று அர்ஜுன் பகதூர் தாபா நம்பிக்கை தெரிவித்தார்.