ஏழு தசாப்தமாக நீடித்து வரும் தேசியப் பிரச்சினைக்கான நியாயமான தீர்வொன்று வழங்கப்படவேண்டும்

புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் இத்தருணத்தில் அதனை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும். அதற்காக அனைத்து உறுப்பினர்களும் இணைந்துஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்காக சந்தர்ப்பமொன்று ஏற்பட்டுள்ளது. அந்த சந்தர்ப்பத்தை குழப்பாது அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமென தலைமை உரையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டார். 

புதிய அரசியல் சாசன உருவாக்கம் குறித்து ஆராய்வதற்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. 

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பு மார்க்கஸ் பெர்ணாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் இக்கூட்டம் நடைபெற்றது. 

சந்திப்பில் ரெலோ அமைப்பின் தலைவரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதிதலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்காலநாதன் தவிர்ந்த ஏனைய வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.

எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தனது தலைமை உரையில்,

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்புக்கான பணிகள் குறித்தும் அதில் உள்ள விடயங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்படும். 

வழிநடத்தல் குழுவினால் கையாளப்படும் விடயங்கள், உபகுழுக்களின் அறிக்கைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு காணப்படும் சந்தேககங்கள், அவை தொடர்பாக முன்வைப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களிடத்தில் காணப்படும் விடயங்கள் குறித்த கருத்துக்களை முன்வைக்கவேண்டும். அது தொடர்பாக விரிவாக கலந்துரையாடல்களில் ஈடுபடமுடியும் என கூறினார். 

அத்தோடு தற்போது சந்தர்ப்பமொன்று ஏற்பட்டிருக்கின்றது. இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து ஆட்சியமைத்துள்ளார்கள். அந்த சந்தர்ப்பத்தை நாம் குழப்பாது அதனைச் சரியாக பயன்படுத்த வேண்டுமெனவும் சம்பந்தன் சுட்டிக்காட்டியிருந்தார். 

அதனையடுத்து புதிய அரசியல் சாசன உருவாக்கம் தொடர்பிலான வழிநடத்தல் குழுவில் மேற்கொள்ளப்படும் விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பமானது. மதிய போசனம் வரையில் கலந்துரையாடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் நியமிக்கப்பட்ட தேசிய மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் பொலிஸ் சட்ட வலுவூட்டல் பற்றிய உபகுழுவின் அறிக்கை, பாராளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் நியமிக்கப்பட்ட மத்திய அரசாங்கம் – மாகாண சபைகளுக்கிடையிலான தொடர்பு பற்றிய உபகுழுவின் அறிக்கை, பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தலைமையில் நியமிக்கப்பட்ட பொதுநிதி தொடர்பான உபகுழுவின் அறிக்கை, அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் நியமிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் தொடர்பான உபகுழுவின் அறிக்கை, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நியமிக்கப்பட்ட நீதித்துறை தொடர்பான உபகுழுவின் அறிக்கை அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந் தலைமையில் நியமிக்கப்பட்ட பொதுச்சேவை தொடர்பான உபகுழுவின் அறிக்கை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

குறித்த முழுநாள் கலந்துரையாடல் நிறைவடைந்த பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களிடத்தில் கருத்து வெளியிடுகையில், 

நாம் இன்றைய தினம்(நேற்று) புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் செயற்பாடுகள் தொடர்பாகவும் வெளியிடப்பட்டுள்ள உபகுழுக்களின் அறிக்கைகள் தொடர்பாகவும் வெளியிடப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டு காலதமாதப்படுத்துள்ள வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாகவும் வரிவாக ஆராய்ந்திருந்தோம்.

குறிப்பாக இடைக்கால அறிக்கை விரைவாக வெளியிடப்பட்டு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகள் தாமதமின்றி முன்னெடுக்கப்படவேண்டுமென நாம் கூட்டாக தீர்மானமெடுத்ததோடு அதற்காக அனைவரும் உரிய பணிகளை முன்னெடுப்பதெனவும் இணங்கியுள்ளோம். 

மேலும் ஏழு தசாப்தமாக நீடித்து வரும் தேசியப் பிரச்சினைக்கான தீர்வை மேலும் காலதமாக்கிக் கொண்டு செல்லாது உரிய நியாயமான தீர்வொன்று வழங்கப்படவேண்டும். அதற்காகவே நாம் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாட்டிற்கு முழுமையான பங்களிப்பை அளித்து வருகின்றோம். 

அதேபோன்று அனைத்து அரசியல் கட்சிகளும் அச்செயற்பாட்டில் முழுமையாக ஈடுபடவேண்டுமென வேண்டுகோள் விடுப்பதோடு ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் வலியுறுத்துகின்றோம் என்றார்.