கொல்கத்தாவுக்கு முதல் போட்டியில் வெற்றி

 

210197.3

 

 ஐ.பி.எல்., தொடரை அமர்க்களமாக துவக்கியது ‘நடப்பு சாம்பியன்’ கோல்கட்டா அணி. நேற்றைய முதல் லீக் போட்டியில் மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
எட்டாவது ஐ.பி.எல்., தொடர் நேற்று துவங்கியது. ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதல் லீக் போட்டியில் கோல்கட்டா, மும்பை அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற கோல்கட்டா கேப்டன் காம்பிர், ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.
மார்கல் மிரட்டல்:
மும்பை அணி துவக்கத்தில் மார்னே மார்கல் ‘வேகத்தில்’ அதிர்ந்தது. இவரிடம் முதலில் ஆரோன் பின்ச்(5) சரணடைந்தார். உமேஷ் யாதவ் ஓவரில் மூன்று பவுண்டரி அடித்த கேப்டன் ரோகித் சர்மா, சாகிப் பந்தை சிக்சருக்கு அனுப்பி அசத்தினார். ஆதித்ய தாரே(7) நிலைக்கவில்லை. மார்கல் பந்தில் அம்பதி ராயுடுவும்(0) கிளம்ப, மும்பை அணி 5.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 37 ரன்கள் எடுத்து திணறியது.
தனது 4 ஓவரில் 18 ரன் மட்டும் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றிய மார்கல், கோல்கட்டாவுக்கு கைகொடுத்தார். இவரது ஓவர் முடிந்த நிலையில், ரோகித், கோரி ஆண்டர்சன் சேர்ந்து விவேகமாக ஆடினர். 4வது விக்கெட்டுக்கு 131 ரன்கள் சேர்த்தனர். உமேஷ் யாதவ் வீசிய போட்டியின் 15வது ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய ரோகித், அரைசதம் கடந்தார்.
மறுமுனையில் அதிரடி காட்டிய ஆண்டர்சன், சாகிப் பந்தை சிக்சருக்கு பறக்க விட்டு அரைசதம் கடந்தார். மும்பை அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது. சதம் எட்ட தவறிய ரோகித்(98 ரன், 65 பந்தில், 12 பவுண்டரி, 4 சிக்சர்), ஆண்டர்சன்(55) அவுட்டாகாமல் இருந்தனர்.
காம்பிர் அரைசதம்:
சவாலான இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு உத்தப்பா(9) ஏமாற்றினார். பின் காம்பிர், மனிஷ் பாண்டே சேர்ந்து அபாரமாக ஆடினர். ஹர்பஜன், பிரக்யான் ஓஜா, மலிங்கா என யார் பந்துவீசினாலும் பவுண்டரி, சிக்சர்களாக அடித்து நொறுக்கினர். பாண்டே 24 பந்தில் 40 ரன்கள் எடுத்து, வெளியேறினார். அரைசதம் கடந்த காம்பிர்(57), பும்ரா ‘வேகத்தில்’ வீழ்ந்தார்.
அடுத்து வந்த சூர்ய குமார் யாதவ் துடிப்பாக ஆடி, பாதிப்பு வராமல் பார்த்துக் கொண்டார். பும்ரா வீசிய போட்டியின் 17வது ஓவரில் யாதவ் 2 சிக்சர், யூசுப் பதான் ஒரு சிக்சர் அடிக்க, 20 ரன்கள் எடுக்கப்பட்டன. வினய் குமார் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய யாதவ், விரைவான வெற்றியை தேடித்தந்தார். கோல்கட்டா அணி 18.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து சுலப வெற்றி பெற்றது. யாதவ்(46), யூசுப்(14) அவுட்டாகாமல் இருந்தனர்.

5
ஐ.பி.எல்., தொடரில் ஒரு போட்டியில் 2 அல்லது அதற்கும் மேல் விக்கெட் வீழ்த்திய போதெல்லாம், மார்னே மார்கல் 20 ரன்னுக்கும் குறைவாகத் தான் விட்டுக் கொடுத்தார். மார்கல் 5வது முறையாக இப்படி அசத்தினார்.

ஈடனும் ரோகித்தும்…
கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானம் ரோகித் சர்மாவுக்கு ராசியானது. இங்கு கடைசியாக விளையாடிய இரண்டு இன்னிங்சில் 238 பந்துகளில் 362 ரன்கள் குவித்தார். அதாவது, கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 173 பந்தில் 264 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். நேற்று 65 பந்தில் 98 ரன்கள் எடுத்தார்.
ஈடனில் மட்டும் அனைத்துவிதமான போட்டிகளில் சேர்த்து 4 சதம், ஒரு அரைசதம் உட்பட ஒட்டுமொத்தமாக 919 ரன்கள் எடுத்துள்ளார். இதன் சராசரி 102.1.

3000 ரன்கள்
ஐ.பி.எல்., வரலாற்றில் 3000 ரன்களை எட்டிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை நேற்று ரோகித் சர்மா (113 போட்டி, 3001 ரன்) பெற்றார். முதலிடத்தில் சென்னை அணியின் ரெய்னா(115 போட்டி, 3325 ரன்) உள்ளார்.