துருக்கியில் ராணுவ புரட்சி முறியடிப்பு?: 754 பேர் கைது

34fb1918-7727-4372-9663-93b609061179-large16x9_TurkeyMilitaryCoup_DiMa5_Fotor

 ஆசியா, ஐரோப்பிய கண்டங்களுக்கு இடையில் உள்ள துருக்கி நாட்டில் ஜனாதிபதி எர்டோகன் தலைமையில் ஆட்சி நடந்து வந்தது.

நேற்று அவர் விடுமுறையை கழிப்பதற்காக துருக்கியில் உள்ள கடற்கரை சுற்றுலாதலமான மர்மாரிஸ் எனும் பகுதிக்கு சென்றிருந்தார்.

தலைநகர் அங்காராவில் ஜனாதிபதி எர்டோகன் இல்லாத சூழ்நிலையில் துருக்கியில் நேற்று மாலை திடீர் ராணுவ புரட்சி ஏற்பட்டது. தலைநகரில் உள்ள முக்கிய அலுவலகங்கள், விமான நிலையங்களை ராணுவம் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து துருக்கி முழுவதும் ராணுவ சட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாக ராணுவம் அறிவித்தது.

இந்த திடீர் ராணுவ புரட்சியால் துருக்கி நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்காரா, இஸ்தான்புல் உள்பட பல பகுதிகளில் ஜனாதிபதி எர்டோகனின் நீதி மற்றும் மேம்பாட்டுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பொது இடங்களில் திரண்டு ராணுவத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களை பீரங்கி உள்ளிட்ட கனரக வாகனங்களில் வந்த ராணுவ வீரர்கள் விரட்டியடித்தனர்.

turkey-coup_650x400_41468617007_Fotor
சில இடங்களில் ராணுவத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. இதனால் ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். ராணுவ ஹெலிகாப்டர்களில் பறந்து வந்தும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

ராணுவத்தின் இந்த தாக்குதலில் 90 பேர் பலியானார்கள். அவர்களில் 17 பேர் போலீஸ்காரர்கள் ஆவார்கள். சுமார் 1160 பேர் காயம் அடைந்தனர். மக்களிடம் இருந்து மேலும் எதிர்ப்பு வருவதைத் தடுக்க போக்குவரத்து முடக்கப்பட்டது.

அரசு அலுவலகங்கள், விமான நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். எர்டோகன் ஆதரவாளர்களை அச்சுறுத்துவதற்காக அங்காரா, இஸ்தான்புல் நகரங்களில் ராணுவத்தினர் குண்டுகளை வெடிக்க செய்தனர். முக்கிய சாலைகளில் ராணுவ டாங்கிகள் அணி வகுத்து சென்றன.

இதற்கிடையே துருக்கி பாராளுமன்றம் மீது ராணுவத்தினர் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. விமான நிலையங்கள் மூடப்பட்டதால் துருக்கியில் இருந்து எந்த விமானமும் புறப்பட்டு செல்லவில்லை. வெளிநாடுகளில் இருந்தும் எந்த விமானமும் துருக்கிக்கு செல்லவில்லை.

இதற்கிடையே ராணுவ நடவடிக்கைகள் வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக சமூக வலைத்தளங்கள் அனைத்தையும் ராணுவத்தினர் முடக்கினார்கள். டுவிட்டர், பேஸ்புக், யூடியூப் போன்ற இணைய தளங்கள் மூலம் எந்த தகவலும் பெற இயலவில்லை.

இந்த நிலையில் ஜனாதிபதி எர்டோகன் இன்று அதிகாலை விமானம் மூலம் இஸ்தான்புல் திரும்பினார். அவர் ஸ்கைப், பேஸ்டைம் வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். துருக்கி பிரதமர் பினாலியும் ஸ்கைப் மூலம் மக்களை தொடர்பு கொண்டு பேசினார்.

turkey -3692693-image-a-23_1468646242804

ஜனாதிபதியும் பிரதமரும் மக்களிடம் பேசுகையில், ‘‘நாங்கள் ஆட்சிப் பொறுப்பில்தான் இருக்கிறோம். மக்கள் பயப்பட வேண்டாம். ராணுவத்தில் ஒரு பிரிவினர் மட்டும் இந்த துரோக செயலில் ஈடுபட்டுள்ளனர். ஆட்சியை பிடிக்க நினைக்கும் அவர்களது முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது. ராணுவ புரட்சிக்கு எதிராக மக்கள் தெருக்களில் இறங்கி போராட வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆனால் பொது மக்கள் தெருக்களில் நடமாட கூடாது என்றும் அங்காரா உள்பட சில நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் ராணுவம் அறிவித்துள்ளது. இதனால் துருக்கியில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி எர்டோகன் தற்போது துருக்கியில் ரகசிய இடத்தில் இருந்தபடி செல்போனில் உரையாடி வருகிறார். ராணுவ புரட்சி தோற்கடிக்கப்படும் என்று அவர் தொடர்ந்து கூறி வருகிறார். அவருக்கு துருக்கி போலீசார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் ஆதரவாக உள்ளனர்.

துருக்கியின் பல பகுதிகளில் அவர்கள் ராணுவ எச்சரிக்கையை மீறி தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். சில இடங்களில் ராணுவத்தை பொது மக்கள் விரட்டியடித்தனர். அமெரிக்க ஆதரவு பெற்ற மதகுரு பெதுல்லா குலன் தூண்டுதலின் பேரில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஆட்சியாளர்கள்-ராணுவத்தினர் இரு தரப்பினரும் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

turkey

ராணுவ புரட்சியை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஜனாதிபதி எர்டோகனும் பிரதமர் பினாலியும் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இன்று காலை புதிய ராணுவ தளபதியாக உமித் துண்டர் என்பவரை நியமனம் செய்து அறிவித்தனர். இதன் தொடர்ச்சியாக ராணுவ புரட்சிக்கு உதவி செய்ததாக 754 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல இடங்களில் ராணுவ வீரர்களை பொது மக்கள் சரமாரியாக தாக்கி சிறை பிடித்தனர். பிறகு அந்த ராணுவ வீரர்களை பொது மக்களே இழுத்து சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இஸ்தான்புல் நகரில் உள்ள சதுக்கங்களில் ராணுவ பீரங்கிகள் குவிக்கப்பட்டிருந்தன. இன்று காலை அந்த பீரங்கிகளை பொது மக்கள் சிறைபிடித்தனர்.

மக்களின் ஆதரவு கிடைத்ததைத் தொடர்ந்து பிரதமர் பினாலி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அவர் எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். பிறகு அவர் ராணுவத்தை எதிர்த்து மக்கள் இன்னும் தீவிரமாக போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

ஜனாதிபதி எர்டோசன், பிரதமர் பினாலி இருவரின் தொடர் வேண்டுக்கோள்கள் காரணமாக இன்று காலை நிறைய பேர் தெருக்களில் திரண்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு ராணுவத்துக்கு எதிராக கோஷமிட்டனர். மக்களின் இந்த எழுச்சியை கண்ட ராணுவத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

வெள்ளமென திரண்டு வந்த மக்கள் கூட்டத்தை கண்ட ராணுவத்தினர் பணிந்து பின் வாங்கினார்கள். சில இடங்களில் பீரங்கிகளை சாலைகளிலும், சதுக்கங்களிலும் விட்டுவிட்டு ராணுவத்தினர் ஓட்டம் பிடித்தனர்.

மக்களிடையே ஆதரவு கிடைக்காத காரணத்தால் ராணுவம் பல பகுதிகளில் பின்னடைவை சந்தித்தது. இதனால் துருக்கியில் ஏற்பட்ட ராணுவ புரட்சி தோல்வியை நோக்கி திரும்பியது.

2003-ம் ஆண்டு முதல் துருக்கியை ஆட்சி செய்து வரும் ஜனாதிபதி எர்டோசன் வெற்றிகரமாக ராணுவ புரட்சியை முறியடித்ததாக தகவல் வெளியானது. அவர் உத்தரவின் பேரில் அங்காரா, இஸ்தான்புல் நகர வீதிகளில் சுற்றி வந்த ராணுவ வீரர்கள் எந்த எதிர்ப்பையும் வெளிப்படுத்தாமல் சரண் அடைந்தனர்.

காலை 10.30 மணிக்கு பிறகு இஸ்தான்புல் விமான நிலையம் செயல்பட தொடங்கியது. என்றாலும் துருக்கியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக புரட்சியாளர்கள் கூறி வருகிறார்கள். இன்று காலை 11 மணி நிலவரப்படி புரட்சியாளர்கள் வசம் சில ராணுவ ஹெலிகாப்டர்கள் இருந்தன.

இந்த நிலையில் 10.30 மணிக்கு துருக்கி ராணுவ தலைமையகத்தை அரசு ஆதரவு படைகள் சுற்றி வளைத்து கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. இதனால் ராணுவ புரட்சியில் ஈடுபட்டவர்களின் ஒருங்கிணைப்பு தகர்ந்தது. வேறு வழியில்லாமல் ராணுவத்தினர் சரண் அடைந்தனர்.

இதற்கிடையே துருக்கியில் ஏற்பட்ட திடீர் ராணுவ புரட்சிக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. துருக்கியின் பக்கத்து நாடுகளான பல்கேரியா, ஈரான் தங்கள் எல்லைகளை இழுத்து மூடி விட்டன.
 
அமெரிக்க அதிபர் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் தெரசா ஆகியோர் துருக்கி ராணுவ புரட்சி தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள். அமெரிக்க வெளியுறவு மந்திரி துருக்கி ஜனாதிபதியுடன் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.