இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது வெஸ்ட் இண்டீஸ்

west-indies-win-india-3103_Fotor

 

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 192 ரன்கள் குவித்தது.

இந்தப் போட்டியிலும் விராட் கோலி அபாரமாக விளையாடி அரைசதம் விளாசினார். அவர் 47 பந்துகளில் 88 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரோகித் சர்மா 43 ரன்களும், ரகானே 40 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் தோனி 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சாமுவேல் பத்ரீ மட்டும் 4 ஓவர்களில் 26 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார். மற்றவர்கள் அதிக ரன்கள் கொடுத்தனர்.

இதனையடுத்து 193 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் 5 ரன்களில் பும்ரா பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய மார்லன் சாமுவேல் 8 ரன்கள் எடுத்திருந்த போது நெக்ரா பந்தில் கேட்சாகி அவுட் ஆனார். இதனால் 19 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து வெஸ்ட் இண்டீஸ் தடுமாறியது. இதனால் ஆட்டம் இந்தியாவிற்கு சாதகமாக இருப்பதாக கருதப்பட்டது.

 

ms-dhoni-and-indian-team_Fotor

பின்னர் சார்லஸும், சிம்மன்சும் ஜோடி சேர்ந்தனர். அஸ்வின் பந்துவீச்சில் சிம்மன்ஸ் அடித்த பந்தை பும்ரா அற்புதமாக தாவி பிடித்தார். ஆனால் அந்த பந்து நோ பால் ஆக முதல் அதிர்ஷ்டம் சிம்மன்ஸுக்கு வாய்த்தது. அதனை அவர் நன்றாக பயன்படுத்திக் கொண்டார். இருவரும் ஓவருக்கு 8 ரன்களுக்கு மேல் சராசரியாக அடித்தனர்.

ஆட்டம் மெல்ல மெல்ல வெஸ்ட் இண்டீஸ் பக்கம் மாறியது. 13 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 116 ரன்கள் குவித்தது. 14-வது ஓவரை விராட் கோலி வீசினார். முதல் பந்திலேயே சார்லஸ் கேட்ச் ஆகி அவுட் ஆனார். அவர் 36 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். இதனால் இந்தியாவிற்கு லேசாக நெருக்கடி குறைந்தது. அந்த ஓவரில் கோலி 4 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

ஆனால் பின்னர் சிம்மன்ஸ்சும், ரஸ்ஸலும் ஆட்டத்தின் போக்கையே மாற்றினர். அடிக்கும் பந்துகள் எல்லாம் எல்லைக் கோட்டை தொட்டுக் கொண்டே இருந்தது. இடையில் மீண்டும் சிம்மன்சுக்கு ஒரு வாய்ப்பு. பாண்டியா பந்துவீச்சில் கேட்ச் ஆனார் சிம்மன்ஸ். ஆனால் அது நோ பால்.

சிம்மன்ஸும், ரஸ்ஸலும் எளிதில் வெற்றி வாய்ப்பை தன் பக்கம் எடுத்துக் கொண்டனர். தோனி கடைசியில் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார். ஆட்டம் கடைசி ஓவர் வரை செய்தது. கடைசி மூன்று ஓவர்களில் நிறைய டாட் பால்கள் கிடைத்தன. ஆனால் சிக்ஸர்களும் பறந்தது.

இதனால் 19.4 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி இலக்கை எட்டியது. 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இந்தியாவின் வெற்றியை பறித்த 51 பந்துகளில் 82 ரன்கள் விளாசிய சிம்மன்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். கடைசி கட்டத்தில் இறங்கிய ரஸ்ஸலும் 20 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்தார்.

இதனால் இந்திய அணியின் கோப்பை கனவு தகர்ந்தது. மிகுந்த ஆவலுடன் வான்கடே மைதானத்தில் குவிந்திருந்த இந்திய ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வெளியேறினர். இதனையடுத்து ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து அணியை எதிர் கொள்கிறது.