வட மாகாண அபிவிருத்தி – பிரதமர் , முதலமைச்சர் பேச்சுவார்த்தை !

ranil-wignes
 வடக்கின் முழுமையான அபிவிருத்தி தொடர்பாக ஆய்வொன்றை நடத்துவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் வட மாகாண முதலமைச்சருக்குமிடையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போது இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

வடமாகாண முதமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா உள்ளிட்டோர் நேற்றைய தினம் அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்திருந்தனர். 

இச்சந்திப்பில், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, வடமாகாண பிரதம செயலாளர், ஐந்து மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திகள் குறித்த விபரங்களை பிரதமரிடம் சமர்ப்பித்து விரிவாகக் கலந்துரையாடியிருந்ததாக விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவித்தார். 

வெளிநாட்டு உதவிகள் பெறும் போது வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் கவனத்தில் எடுக்க வேண்டிய விடயங்கள் குறித்து எடுத்துக் கூறியிருந்ததாகவும் வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக முழுமையான ஆய்வொன்றை மேற்கொள்ள தீர்மானித்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.