ராஜித்த தலைமையில் 14 பேர் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் UNP யுடன் இணைந்து போட்டி ?

10423823_750098841692836_2972427088793770309_n_Fotor_Collage_Fotor

 கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக பதவியேற்கச் செய்வதற்கு தலைமையேற்று செயற்பட்ட பிரதான அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் கொண்ட குழுவொன்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன, மின்சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, கிராமிய அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி.திசா நாயக்க, துறைமுகங்கள் அமைச்சர் அர்ஜூனா ரணதுங்க, காணி அமைச்சர் எம்.கே.டி. எஸ்.குணவர்தன, அமைச்சர் பியசேன கமகே, உயர்கல்வி அமைச்சர் சரத் அமுனுகம, விமான சேவைகள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே, பிரதியமைச்சர்களான விஜய தஹநாயக்க, சுதர்ஷினி பெர்னான்டோ புள்ளே, ஹிருனிகா பிரேமச்சந்திர, நியோமல் பெரேரா, ஏர்ள் குணசேகர மற்றும் அத்து ரலிய ரத்னதேரர் ஆகி யோர் இது தொடர்பாக நடை பெற்ற பேச்சுவார்த்தையின் போது கலந்து கொண்டுள்ளதுடன் இவர்கள் எதிர்வரும் பாராளு மன்றத் தேர்தலில் ஐ.தே.கவுக்கு ஆதரவாக நல்லாட்சி முன்னணியில் போட்டிடுவதற்குத் தீர்மானித்துள்ளனர். 

‘நல்லாட்சியின் முன்னணி’ யின் கீழ் ஒன்றிணையும் இவர்கள் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஐ.தே.கவில் போட்டியிடுகின்றனர். இந்தக் குழுவுக்கு மேலதிகமாக பிரதேச அரசியல் பிரதிநிதிகள், தொகுதி அமைப்பாளர்கள் உட்பட பெருந்திரளானவர்கள் மக்களுக்கு அன்று பெற்றுக்கொடுத்த நல்லாட்சி வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு மேற்படி அமைச்சர்கள், பிரதியமைச்சர் களுடன் இணைந்து செயற்படவுள்ளனர்.

மேற்படி குழுவினர் கடந்த 9ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பாக நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஜனாதிபதித் தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்று வதற்கு தாங்கள் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட விருப்பம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர். 

ஊழல் மோசடிகள் நிறைந்த ஆட்சிக் காலத்தைக் கடந்து ஜனவரி 8ஆம் திகதி 3 இலட்சத்தி 62 ஆயிரம் மக்களின் ஆதரவுடன் உருவாக்கிய அரசும், அந்த அரசின் நோக்கம் என் பவற்றை பாதுகாத்துக் கொள்வதற்கும் அதனூடாக மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கவும்

இந்தப் புதிய கூட்டணி விரும்பு வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்படி எண்ணங்களை நிறை வேற்றுவதற்கு ஜனாதிபதியை தொடர்ந்தும் பாதுகாப்பதுடன் நல்லாட்சியை நாடு முழுவதும் நிலைநாட்டுவதற்கு இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர். 

திருடர்கள், கொள்ளையர்கள் என ஊழல் நிறைந்தவர்களுக்கு இந்தப் பொதுத் தேர்தலில் வேட்புமனு கொடுக்கப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது. சிவில் அமைப்புக்கள் பல தமது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது என்றும், இதனால் தாம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகி நல்லாட்சி முன்னணியின் கீழ் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.