ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு தீர்ப்பு எப்போது?

Jayalalithaa_pointing_finger_295

* பவானி சிங்கை நியமித்தது செல்லாது-நீதிபதி லோகூர்

* அரசு வக்கீலாக நீடித்தது செல்லும்-நீதிபதி பானுமதி

* தீர்ப்பில் முரண்பாடு காரணமாக மீண்டும் விசாரணை

* ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு எப்போது?

  ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜராவதை எதிர்த்து போடப்பட்ட  வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. பவானி சிங் நியமனம் செல்லாது என்று நீதிபதி மதன் லோகூர் தீர்ப்பளித்தார். ‘கர்நாடக அரசு ரத்து செய்யாததால் அவர் நியமனம் செல்லும் என்று நீதிபதி பானுமதி தீர்ப்பளித்தார். இப்படி தீர்ப்பில் கருத்து வேறுபாட்டால் மூன்று  நீதிபதிகள் பெஞ்சுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு எப்போது என்பதில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அவருக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.100 கோடியே 1 லட்சம் அபராதமும் விதித்து கடந்த ஆண்டு செப்டம்பர் 27ல் தீர்ப்பளித்தது.  

ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன்,  உறவினர் இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையும் தலா ரூ. 10 கோடியே 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த  தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல் முறையீடு மனு உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள தனி நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்த மேல் முறையீட்டு வழக்கில் பவானிசிங் அரசுத் தரப்பில் ஆஜராக எதிர்ப்பு தெரிவித்தும் அவர் ஆஜராவதை ரத்து செய்யக் கோரியும், தனது வாதத்தையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரியும்  திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன்லோகூர், பானுமதி ஆகியோர் நேற்று தீர்ப்பளித்தனர். அதில் மதன்லோகூர் அளித்த தீர்ப்பில், ‘ஒரு வழக்கை 15 ஆண்டுகளுக்கு மேல் இழுத்தடித்து நீதிபரிபாலனையில் பெரும் இழப்பையும், களங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளதற்கு இந்த வழக்கே ஒரு உதாரணமாகும். மேல் முறையீட்டு வழக்கில் அரசுத் தரப்பில் பவானிசிங் ஆஜராவதற்கு அனுமதி வழங்கி கர்நாடக அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. அவர் விசாரணை நீதிமன்றத்தில் மட்டுமே ஆஜராக அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை கர்நாடக உயர் நீதிமன்றம் கவனிக்கத் தவறிவிட்டது. எனவே, பவானிசிங் மேல் முறையீட்டு வழக்கில் ஆஜரானது செல்லாது’ என்று கூறியுள்ளார்.

நீதிபதி பானுமதி தனது தீர்ப்பில் கூறும்போது, ‘ஒரு வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜராக அதிகாரமும், பொறுப்பும் வழங்கப்பட்ட ஒருவர் சம்மந்தப்பட்ட அந்த வழக்கில் எல்லா நிலையிலும் ஆஜராகலாம் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, அப்பீல் வழக்கில் பவானிசிங் ஆஜராவதற்கு எந்த தடையும் இல்லை. அன்பழகனின் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார். இந்த வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட கருத்துக்களுடன் தீர்ப்பளித்துள்ளதால் இந்த வழக்கில் முடிவு தெரிவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, இந்த வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றுமாறு வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்ப உத்தரவிடப்படுகிறது என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.