எரிகல்லுக்கு மலாலாவின் பெயரை சூட்டிய நாசா !


Malala-asteroid2

  பாகிஸ்தானில் தலீபான்களின் கொள்கைகளுக்கு எதிராக, பெண் கல்விக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தவர் மலாலா.

 இதற்காக அவர் கடந்த 2012 ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி, பாடசாலைக்குச் சென்று வரும்போது தலீபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டார். படுகாயம் அடைந்த அவர் லண்டன் நகரில் சிகிச்சை பெற்று குணம் அடைந்தார்.

 தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் அவருக்கு கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, இந்தியரான கைலாஷ் சத்யார்த்தியுடன் இணைந்து வழங்கப்பட்டது.

 இப்போது விண்ணில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘316201’ எரிகல்லுக்கு மலாலாவின் பெயரை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவின் ஜெட் உந்துவிசை ஆய்வுக்கூட வானியல் ஆராய்ச்சி விஞ்ஞானி ஆமி மைன்ஸர் சூட்டி உள்ளார்.

 இது பற்றி அவர் குறிப்பிடுகையில், “எரிகல்லுக்கு மலாலாவின் பெயரைச்சூட்டி இருப்பது மிகுந்த மரியாதைக்குரியதாகும்.

ஏற்கனவே எத்தனையோ எரிகல்களுக்கு பெயர் சூட்டி இருந்தாலும், பெண்களின் பெயர்களை சூட்டியதில்லை என்பதை என் சக விஞ்ஞானி டாக்டர் கேரி நியூஜென்ட் நினைவுபடுத்தினார்.

அதைத் தொடர்ந்தே செவ்வாய், வியாழன் கிரகங்களுக்கு இடையே நான் கண்டுபிடித்துள்ள எரி கல்லுக்கு மலாலாவின் பெயரை சூட்டி உள்ளேன். இந்த எரிகல், சூரியனை 5.5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றி வரும்” என கூறினார்.

Malala-asteroidMalala-asteroid