அடுத்த வாரம் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் – இராணுவத்தளபதி

போக்குவரத்து கட்டுப்பாடுகள் அல்லது தனிமைப்படுத்தல் என்பன வார இறுதி நாட்களையோ அல்லது நீண்ட விடுமுறை நாட்களையோ அடிப்படையாகக் கொண்டு அமுல்படுத்தப்படுவதில்லை.

கொவிட் பரவல் நிலைமை தொடர்பில் மதிப்பீடு செய்து , விஞ்ஞானபூர்வமாகவே இது குறித்த தீர்மானம் எடுக்கப்படும். எவ்வாறிருப்பினும் அடுத்த 3 வாரங்கள் தீர்க்கமானவையாகும் என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

எனவே அடுத்த மூன்று நாட்களில் நாட்டில் கொவிட் பரவல் நிலைமை எவ்வாறு காணப்படுகிறது என்பது மதிப்பீடு செய்யப்பட்டு , மருத்துவதுறை நிபுணர்கள் உள்ளிட்டவர்களின் ஆலோசனைகளுக்கு அமைய, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பணிப்புரைக்கு அமைய போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடர்பில் பொறுத்தமான தீர்மானம் எடுக்கப்படும் என்றும் இராணுவத்தளபதி சுட்டிக்காட்டினார்.

அடுத்த வாரம் வெசாக் பண்டிகையுடன் நீண்ட விடுமுறை காலம் என்பதால் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விளக்கமளிக்கும் போதே இராணுவத்தளபதி இதனைத் தெரிவித்தார்.