இராணுவத்தினருக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது-ஐக்கிய மக்கள் சக்தி

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் பங்குபற்றிய  இரு தரப்பினரில் , இராணுவத்தினர் மீது மாத்திரம் குற்றஞ்சுமத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

 

 

நேற்று வியாழக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையானது இலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் நிலைமையோடு , மக்களின் வாழ்க்கையை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளது. மனித உரிமைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில் ஐ.நா. ஆணையாளரும் இலங்கை ஜனாதிபதியின் தலைமையிலான அரசாங்கமும் நடைமுறைக்கு  சாத்தியப்படாத வகையிலேயே செயற்படுகின்றனர்.

நாட்டு மக்களின் உயிரை பாதுகாப்பதற்காக தமது உயிரை தியாகம் செய்த இராணுவத்தை தண்டிப்பதை , மதிப்பிற்குரிய மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இதற்காக சர்வதேசத்திற்கு பல உதாரணங்களை காண்பிக்க முடியும். ஆணையாளரின் தரப்பு இந்த யதார்த்தத்தைக் கூட உணராதவர்களாக உள்ளனர்.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இராணுவத்தினர் சேவையிலிருந்து நீக்குமாறு ஆணையாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் விடுதலை புலிகள் அமைப்பு ஒழிக்கப்பட்டுள்ளது.

எனவே யுத்தத்தில் பங்குபற்றி இரு தரப்புக்களில் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் தண்டனை பெற்றுக் கொடுப்பது நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இவற்றினடிப்படையில் அவதானிக்கும் போது ஆணையாளரின் அறிக்கை நடைமுறைக்கு சாத்தியமற்றது என்பது தெளிவாகிறது.

2009 இற்கு பிறகு இலங்கையில் இனங்களுக்கிடையில் எவ்வித முரண்பாடுகளும் ஏற்படவில்லை. கைது செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த 12 000 பேர் விடுதலை செய்யப்பட்டு தற்போது அவர்களும் சாதாரண வாழ்க்கையை  வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அவர்களால் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நாடு என்ற ரீதியில் மன்னிப்பு வழங்கியுள்ளோம். உண்மையான நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த நாம் இதே வழியிலேயே பயணிக்க வேண்டும்.

கடந்த காலத்தை மறந்து எதிர் காலத்தை பற்றி சிந்தித்து செயற்படுவதன் மூலம் நல்லிணக்கத்தை ஸ்திரப்படுத்த முடியும். தற்போதும் சிறையிலடைக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் , விடுதலைப்புலிகள் தொடர்பிலும் இதே முறைமையையே பின்பற்ற வேண்டும்.

இலங்கை அரசாங்கமும் மனித உரிமைகள் ஆணையாளரும் எவ்வித முயற்சிகளையும் எடுப்பதாக தெரியவில்லை. ஆணையாளின் நடைமுறைக்கு  சாத்தியமற்ற இந்த அறிக்கையை நிராகரிப்பதோடு , போலி சூழ்ச்சிகள் சமூகமயப்படுத்தி மனித உரிமைகளை மீறும் வகையில் இந்த அரசாங்கம் செயற்படுவதையும் தெரிவிக்க விரும்புகின்றோம்.