ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாக தி மோனிங்க பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

 

 

அளுத்கமை, பேருவளை பிரதேசங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளில் ஞானசார தேரர் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளமை ஆணைக்குழுவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இனங்களுக்கு இடையில் மோதல்களை உருவாக்குவது மற்றும் நாட்டிற்குள் பதற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்த நபர்களையும், அமைப்புகளையும் அடையாளம் காண ஆணைக்குழுவின் அதிகாரம் வழங்கப்பட்டிருந்ததுடன், அந்த அதிகாரத்தின் கீழ் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமான விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு இப்படியான பரிந்துரையை வழங்கியுள்ளமை குறித்து தனக்கு தெரியாது என ஞானசார தேரர் கூறியுள்ளார்.

எனினும் அப்படியான பரிந்துரை வழங்கப்பட்டிருந்தால், சிரிப்பதை தவிர வேறு எதனையும் செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.