முஸ்லிம் அரசியல்வாதிகளின் ‘மௌன ராகம்’

{"subsource":"done_button","uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["348930678033211","307909684028211"],"source_sid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1612703265667"}

 

 

இயக்குனர் மணிரத்தினத்தின் ‘மௌனராகம்’ திரைப்படத்தில் கணவன் – மனைவியாக வரும் மோகன், ரேவதி கதாபாத்திரங்களை நினைவுபடுத்துகின்றது, முஸ்லிம் அரசியல்வாதிகளின் அண்மைக்கால போக்குகள்.

காரணம், முஸ்லிம்களின் உரிமை பற்றியும் ஜனாஸா எரிப்பு பற்றியும் அவ்வப்போது பேசிக் கொண்டிருந்த முஸ்லிம் அரசியல்வாதிகளின் அசைவுகளை கடந்த சில நாட்களாக காணவில்லை. தேர்தல் காலத்தில் மேடைகளில் முஸ்லிம் சமூகத்தின் மீட்பர்கள் போல வீரவசனங்கள் பேசியவர்கள் எல்லோரும், மௌன ராகம் இசைக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

கொரோனா நெருக்கடியும் அவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. சிலர் சமூகப் பிரச்சினையை விட்டு ஒதுங்கி ஒருவிதமான ‘தனிமைப்படுத்தலில்’ இருக்கின்றனர். ஆனால், 14 நாட்கள், 21 நாட்கள் கடந்த போதும் அவர்கள் இன்னும் வெளியில் வரவில்லை என்பதுதான் கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

ஜனாஸா விவகாரத்திற்கோ அல்லது ஏனைய பிரச்சினைகளுக்கோ எவ்வித தீர்வும் கிட்டாத நிலையிலேயே, முஸ்லிம் சமூகமும் கிட்டத்தட்ட ஓய்ந்து போய்விட்டதாகவே தெரிகின்றது. முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கி விட்டனரா அல்லது ‘அடக்கப்பட்டு’ விட்டனரா என்று

யுத்த களத்திற்கு போராடி வெற்றி பெற்ற ஒரு போர் வீரன், மனதில் சந்தோசத்துடனும் உடலில் சில வலிகள், காயங்களுடனும் வீட்டுக்கு வருவான். நீண்டநாள் விடுமுறை வழங்கப்படும். அக்காலப்பகுதியில் போர்க்களத்துடன் எவ்வித தொடர்புமின்றி ஓய்வெடுப்பான். அதுபோல முஸ்லிம் அரசியல்வாதிகள் இருக்கின்றனரா?

அப்படியென்றால் எந்த உரிமையைப் பெற்றுக் கொடுத்த களைப்பில் அவர்கள் விடுமுறை எடுத்திருக்கின்றனர் என்ற கேள்விக்கு பதில் தேட வேண்டியிருக்கின்றது.

சமூகமும் அப்படித்தான்

முஸ்லிம் சமூகமும் இது விடயத்தில் சளைத்ததல்ல. நாமும் கிட்டத்தட்ட ஓய்ந்து விட்டோம். ஏதோ ஜனாஸா விவகாரத்திற்கு தீர்வு கிடைத்துவிட்டது போலவும் முஸ்லிம்களின் ஏனைய உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டு விட்டது போலவும் முஸ்லிம் சமூகத்தின் போக்குகள் அமைந்துள்ளன.

முஸ்லிம் சமூகத்தின் தலையெழுத்தே இதுதான். அநேகமான விடயங்கள் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் 2 அல்லது மூன்று வாரங்களுக்கு மேல் பேசுபொருளாக இருப்பதில்லை. முஸ்லிம்களின் உரிமைகள் பற்றிய கதையாடல்கள் அவ்வப்போது மேற்கிளம்பி அப்பயே அடங்கி விடும். மற்றப்படி, புதுப்புது விடயதானங்களுக்கு முஸ்லிம் சமூகம் மாறிக் கொண்டே இருக்கும்.

கடந்த பல வருடங்களாக தொடர்ந்து அவதானித்தவர்களுக்கு இது தெரியும். ஒரு விடயதானம் (டொபிக்) ஒரு சிலநாட்களுக்கு மட்டுமே சமூக வலைத்தளங்களை மையமாகக் கொண்ட கருத்தியல் களத்தில் நிலைத்து நிற்கும். புதிதாக ஒன்று வந்தால், அதற்குப் பின்னால் போய்விடுகின்றோம். ஆனால், ஜனாஸா எரிப்பு பற்றிய பேச்சு சற்று அதிக காலம் நீடித்தது என்றபோதும், ஏதோ அதற்கு தீர்வு கிடைத்து விட்டது போல எல்லாம் அடங்கி விட்டது போல ஆகியிருக்கின்றது.

தமிழர்களின் முன்மாதிரி

இது ஜெனிவா மனித உரிமைக் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள ஒரு முக்கியமான காலகட்டமாகும். வலுக்கட்டாய ஜனாஸா எரிப்பு மற்றும் முஸ்லிம்களின் இன, மத உரிமைகள் பற்றிய சற்று அழுத்தமாக உரைக்க வேண்டிய ஒரு தருணமாக இதனைக் கருதலாம். ஆனால் முஸ்லிம் சமூகம், யாருக்கும் நொந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் அதீத பொறுமையை கடைப்பிடிக்கின்றது.

தமிழ் சமூகம் அரை நூற்றாண்டாக போராடிக் கொண்டிருக்கின்றது. ஆயிரக்கணக்கான உடல்களையும் பெறுமதியான உரிமைகளையும் இழந்த போதும் இன்னும் தமது பயணத்தில் ஒய்வெடுக்கவில்லை.

தமிழர்கள் கேட்கின்ற சில கோரிக்கைகளை எந்தவொரு சிங்கள ஆட்சியாளர்களும் வழங்குவது நடைமுறைச் சாத்தியமில்லை என்பதெல்லாம் உண்மைதான். ஆயினும், அதில் கிடைக்கக் கூடிய ஒரு சிறு பாகத்தையேனும் பெற்றுக் கொள்ள தொடர்ச்சியாக நகர்வுகளைச் செய்து வருகின்றமை பாராட்டத்தக்கது.

தமிழ்க் கட்சிகளுக்குள் மட்டுமன்றி, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் முரண்பாடுகள் உள்ளன. தமிழர்கள் முன்னரை விட இப்போது அரசியல் ரீதியாக அதிக பிரிவுகளைக் கொண்டுள்ளனர். ஆயினும், உரிமையை வென்றெடுத்தல் என்ற புள்ளியில் சம்பந்தன்களும் டக்ளஸ்களும் மனோக்களும் ஒன்றுகூடுகின்றனர். பெருந்தேசியத்தின் முகவர்களான சில தமிழ் அரசியல்வாதிகளே விதிவிலக்கு.

அதுமட்டுமன்றி, தந்தை செல்வா, அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் காலம் தொட்டு இன்று வரை தமிழ் அரசியல்வாதிகள் (ஆங்காங்கே சில தவறுகள் இடம்பெற்றிருந்தாலும் கூட) பொதுவாக தமது சமூகத்தின் சுயம் என்ற விடயத்தில் விழிப்பாக இருந்து வருகின்றனர். சமகாலத்தில் சம்பந்தனிடமும், மாவை சேனாதிராஜாவிடமும் அரசியலுக்கு புதியவரான சாணக்கியனிடமும் அதே நெஞ்சுரத்தைக் காண முடிகின்றது.

இந்தப் பின்னணியில், ஜெனிவா அமர்வின்போது சர்வதேசத்தின் அனுசரணையை பெற்றுக் கொண்டு, தமக்கு இழைக்கப்பட்டதாகச் கருதும் அநீதிகளுக்கு நியாயம் தேடுவதில் தமிழத்தரப்பு முனைப்பாக உள்ளது. உள்நாட்டிலும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணி உள்ளடங்கலாக பல முயற்சிகளைச் செய்கின்றது. இது சரியா பிழையா என்பதல்ல, அவர்கள் குறைந்தபட்சம் முயற்சி செய்கின்றார்கள் என்பதே முக்கியமானது,

வேடிக்கை பார்க்கும் முஸ்லிம்கள்

ஆனால் முஸ்லிம் சமூகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே இருக்கின்றது எனலாம். மேலே பட்டியலிட்ட, தொடர்ச்சியான போராட்டமோ, கட்சிகளுக்கு இடையிலான கூட்டுறவு, சர்வதேச ஒத்துழைப்பை பெறுவதோ அல்லது இணக்க அரசியலை சரியாகப் பயன்படுத்தி முஸ்லிம்களின் உரிமையை வென்றெடுப்பதோ அபூர்வமாகவேனும் முஸ்லிம் அரசியலில் நிகழவில்லை.

ஏதற்கெடுத்தாலும் தமிழர்களை முன்னுதாரணமாகக் குறிப்பிடுவதை சிலர் விரும்பாமல் இருக்கலாம். உண்மைதான். ஆனால் என்ன செய்ய, புத்திசாலி மாணவனைக் காட்டி ‘நீயும் அவரைப் போல முயற்சி செய்து முன்னுக்கு வர வேண்டும்’ என்று கடைசிவரியிலுள்ள மாணவனுக்கு சொல்வது உலக வழக்கம்தானே.

தமிழ் அரசியல்வாதிகள் செய்கின்ற அனைத்துக் காரியங்களும் சரி என்றோ புத்திசாலித்தனமானது என்றோ முழுமையாக சமூக நோக்கம் கொண்டது என்றோ சொல்வதற்கில்லை. அதற்குள்ளும் இரண்டாந்தர ஏமாற்று அரசியல் துருத்திக் கொண்டு நிற்கின்றது.

அத்துடன், சிங்கள பௌத்த ஆட்சியாளரைக் கொண்ட ஒரு தேசத்தில், யுத்தம் தோற்கடிக்கப்பட்டு விட்ட பல்லின நாடொன்றில் யதார்த்தமான நடைமுறையில் சாத்திமற்ற கோரிக்கைகளும் உள்நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு உள்ளக நெருக்குவாரங்களை ஏற்படுத்தக் கூடிய சர்வதேச நகர்வுகளும் எல்லாக் காலத்திலும் புத்திசாலித்தனமானவையாக இருக்கும் எனக் கூற முடியாது.

ஆயினும், தமிழ் அரசியல்வாதிகளின் தொடர்ச்சியான முனைப்பும், சிவில் சமூகம், புத்திஜீவிகள், படித்த சமூகம், புலம்பெயர் தமிழர்கள் அதற்கு வழங்கி வருகின்ற ஆதரவும், ஒற்றுமையின் பல பாடங்களை உணர்த்துகின்றன. அதிலிருந்து சிலவற்றை கற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றது. முஸ்லிம்கள் இணக்க அரசியலை ஆக்கபூர்வமான பயன்படுத்த வேண்டியிருக்கின்றது.

கொரோனா நெருக்கடி

கடந்த ஒரு வருடமாக இரண்டு விடயங்களைத்தான் நாம் பேசிக் கொண்டிருக்கின்றோம். ஒன்று, கொவிட்-19 வைரஸ் பரவுகை. முற்றது, வலிந்த ஜனாஸா எரிப்பு விவகாரம் ஆகும். அத்துடன், கொரோனா வைரஸ் இல்லாவிட்டால்; நாட்டில் பாரிய அபிவிருத்தி ஏற்பட்டிருக்கும், சொன்னதை எல்லாம் செய்திருப்போம் என்றும் அளும்தரப்பில் உள்ளவர்கள் கூறி வருகின்றனர்.

அது உண்மைதான், கொரோனா நெருக்கடி என்பது பாரிய சிக்கல்களையும் அரசியல், சமூக விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், கொரோனா மற்றும் ஜனாஸா எரிப்பு விவகாரங்கள் வெளியில் வராமல் இருந்திருந்தால், வேறுபல பூதங்கள் இந்நேரம் வெளியில் வந்திருக்கவும் வாய்ப்பிருந்ததாக அவதானிகள் கூறுவதையும் கவனிக்க வேண்டும்.

ஆளும் தரப்பிற்குள் முரண்பாடுகள் வலுவடைந்துள்ளன. அண்மையில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஆற்றிய உரை இதற்கு ஆகப் பிந்திய சான்றாகக் கொள்ளப்படலாம். அத்துடன், ஆளும் குடும்பத்திற்குள்ளே முன்பிருந்த ஒற்றுமைக்கு கண்பட்டு விட்டதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன் நாட்டில் பொருளாதார தேக்கநிலையும் உள்ளது.

ஆகவே, ஒருவேளை கொவிட் பரவலோ அல்லது முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்யும் பிரச்சினையோ தலைதூக்காமல் விட்டிருந்தால் மேற்குறிப்பிட்ட உறைநிலை குழப்பங்கள் வெளியில் வந்திருக்க வாய்ப்புள்ளது என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அப்படிப் பார்த்தால் கொரோனாதான் ஒருவிதத்தில் இவற்றையெல்லாம் மறைத்துக் கொண்டிருக்கின்றது. கொவிட்டும் ஜனாஸா விவகாரமுமே மக்களின் கவனத்தை திசை திருப்பியுள்ளது எனலாம்.

ஐ.நா.வின் பிடி

இந்த சந்தர்ப்பத்திலேயே ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு இடம்பெறவுள்ளது. இம்முறை இலங்கை அரசின் மீதான பிடி இறுகும் என்று கூறப்படுகின்றது. அதற்கான அறிகுறிகள் ஏற்கனவே தென்படத் தொடங்கிவிட்டன. அரசாங்கத்திற்கு ஜெனிவா பற்றிய உதறல் உள்ளுக்குள் இருந்தாலும் அதனை வெளியில் காட்டிக் கொள்ளாமலேயே நகர்வுகளைச் செய்வதாக கூறலாம்.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அண்மைய அறிக்கையை உண்மைக்குப் புறம்பானது என்று கூறி அதிலுள்ள குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் மறுத்துரைத்துள்ளது.

இலங்கை ஒரு இறைமையுள்ள நாடு என்ற வகையில், சர்வதேசத்தின் எல்லா அழுத்தங்களும் அடிபணிந்து செயற்பட முடியாது. நவீன பாணியிலான காலணித்துவம் உருவாகியுள்ள இன்றைய காலகட்டத்தில் அளவுகடந்த வெளிநாட்டுத் தலையீடுகள் ஆபத்தானவையாக அமையும். ஆத்துடன் வெளிச் சக்திகள் புண்ணியத்திற்காக எல்லாவற்றையும் செய்வதும் இல்லை. அந்த வகையில் இலங்கை அனுப்பியுள்ள பதில் அறிக்கை ஆச்சரியமானதல்ல.

விடாப்பிடியான அரசாங்கம்

ஜெனிவா நெருக்கடிகள் வலுவடைவதற்கு தமிழர்கள் தொடர்பான விவகாரங்களே பிரதான காரணமாகும். எவ்வாறாயினும், கொவிட் வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கும் செய்யும் சர்வதேச ஒழுங்குக்கு இலங்கை இணங்கிப் போகாமையும் இந்த முறை ஜெனிவா அமர்வில் செல்வாக்குச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொவிட் செயலணியானது நிபுணர் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் செயற்படுகின்றமையே நிகழ்காலத்தில் இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் மேலும் அதிகரித்திருப்பதற்குக் காரணமாகும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் சுட்டிக்காட்டியுள்ளமை கவனிப்பிற்குரியது.

எனவே, இந்த களச் சூழலைக் கருத்திற் கொண்டு அரசாங்கமானது சர்வதேச அழுத்தங்கள் மற்றும் நெருக்கடிகளை குறைக்கும் பாங்கிலான மூலோபாய நகர்வுகளை மேற்கொண்டிருக்கலாம். ஆனால் எதற்கும் மசியாத, விடாப்பிடியான போக்கையே ஆட்சியாளர்கள் விம்பப்படுத்த முனைவதை காணக் கூடியதாகவுள்ளது.

போர்க் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை விடயங்கள் இன்று சர்வதேச விவகாரங்கள் ஆகிவிட்டன. இவற்றையெல்லாம் அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதோ அதற்கு அனுசரணை வழங்கும் என்றோ எதிர்பார்க்கவும் முடியாது. ஆனால், தற்கால நெருக்கடிகளை குறைக்கும் பாங்கில் சிறுபான்மைச் சமூகங்களுடன் ஒரு மென்போக்கை கடைப்பிடித்திருக்கலாம்.

குறிப்பாக, தமிழர்களை நெகிழ்வுப் போக்குடன் கையாண்டிருக்கலாம். அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தக் கூடிய அரசியல் நகர்வுகளைப் பற்றிச் சிந்தித்திருக்கலாம். அதேபோன்று முஸ்லிம்கள் விடயத்திலும் மனிதாபிமான அடிப்படையில் செயற்பட்டிருக்கலாம். ஆனால் எதற்கும் மசியாமல் விடாப்பிடியாகவே செயற்படுவதை காணலாம்.

கொரோனாவினால் மரணிக்கின்ற உடல்களை அடக்கவும் முடியும் என்ற உலக நியதியை இலங்கை அரசாங்கம் புறக்கணித்து வருகின்ற நிலையில், பேராசிரியர் ஜெனிபர் பெரேரா தலைமையிலான இரண்டாவது நிபுணர் குழுவின் அறிக்கையும் உடல்களை இறுக்கமான சுகாதார நடைமுறைகளின் கீழ் அடக்க முடியும் என்று பரிந்துரைத்தது.

எனவே முஸ்லிம்களின் மனங்களை வெல்ல வேண்டும் என்பதற்காகவோ சர்வதேச அழுத்தங்களை குறைக்கும் பாங்கிலோ ஜனாஸா அடக்கத்திற்கு இடமளித்திருக்கலாம். ஆனால் முஸ்லிம்களும் பல ஜனாஸாக்களும் இன்னும் காத்துக் கொண்டிருக்க, தொடர்ந்து உடல்களை எரிக்கும் நடைமுறையையே அரசாங்கம் கடைப்பிடிப்பதன் மூலம் முஸ்லிம்களின் உரிமையை புறக்கணித்து வருகின்றது.

ஆக மொத்தத்தில், என்னதான் நல்லிணக்கம் பற்றி பேசினாலும், கொள்கை வகுத்தாலும் சர்வதேச அழுத்தங்களைக் குறைப்பதற்காகவேனும் தமிழர்களையும் முஸ்லிம்களையும் வாஞ்சையுடன் நடத்தும் ஒரு ஆட்சிச் சூழலை காண முடியாதுள்ளது. 73ஆவது சுதந்திரத்தையொட்டி இடம்பெற்ற இரு சம்பவங்கள் இதற்கு ஆகப் பிந்திய உதாரணங்களாகும்.

எவ்வாறாயினும், இதற்குப் பின்னால் தெளிவான அரசியல், இனவாத காரணங்கள் உள்ளதென்பது யாரும் அறியாத ரகசியமல்ல. அத்துடன் மேலே குறிப்பிட்ட உறைநிலைப் பிரச்சினைகளில் இருந்து சிங்கள மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கும் இவ்வாறான கடுமையான நிலைப்பாடுகள் அரசுக்கு உதவலாம்.

இயலாத எம்.பி.க்கள்

இந்த ஆட்சி மட்டுமல்ல கடந்த ஆட்சிகளிலும் முஸ்லிம்களுக்கு இதுதான் நடந்தது. றவூப் ஹக்கீம் நீதி அமைச்சராக இருக்கும் போதே அளுத்கம கலவரம் நடந்தது. இன்று அலிசப்ரி நீதி அமைச்சராக இருக்கும் போது ஜனாஸா அடக்கும் உரிமையைப் பெற முடியாதுள்ளது.

ஆக மொத்தத்தில், உலகில் நீதி அமைச்சராக தமது சமூகத்தைச் சார்ந்தவர்கள் இருந்தும் தமது பிரச்சினையில் நியாயம் கிடைக்காத மக்கள் கூட்டம் என்றால் அதை இலங்கை முஸ்லிம்களாகவே இருக்கின்றனர்.

இந்த விடயத்தில் ஆட்சியாளர்களை மட்டுமே குற்றம் சொல்ல முடியாது. அவர்கள் உரிமை அரசியலில் தமிழர் அரசியலை விட முஸ்லிம்களின் அரசியல் பலவீனப்பட்டுப் போயுள்ளமையே இதற்கு அடிப்படைக் காரணமாகும். தற்கால முஸ்லிம் எம்.பி.க்கள் மட்டுமன்றி கடந்தகாலத்தில் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த முஸ்லிம்களும் இதற்கு பொறுப்பாளிகள் ஆவர்.

தமிழர்கள் 50-60 வருடங்களாக சளைக்காது இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஒரு வருடத்திற்குள்ளேயே முஸ்லிம் சமூகம் சோர்ந்து போய்விட்டது. ஏதோ ஜனாஸா விவகாரத்துக்கு தீர்வு கண்டுவிட்டது போல தமது வழக்கமான அரசியலில் மூழ்கித்’ திளைத்துள்ளனர்.

சாணக்கியமாக பேசு மு.கா. தலைவர் றிசாட் பதியுதீன், ஆக்ரோசமாகப் பேசும் ம.கா. தலைவர் றிசாட் பதியுதீன், தனிநபர் பிரேரணையை கொண்டுவரப் போவதாக கூறிய தே.கா. தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும் நீதி அமைச்சர் உள்ளடங்கலாக கிட்டத்தட்ட அனைத்துப் பாரளுமன்ற உறுப்பினர்களும் அடங்கிப் போயிருக்கின்றனர். முஸ்லிம் மக்களும் இப்படித்தான் இப்போது வேறு விடயங்கள் பற்றிப் பேசத் தொடங்கியுள்ளனர்.

கணிசமான எம்.பி.க்களிடம் இதுபற்றி பேசுவதற்காக தொலைபேசி அழைப்பை எடுத்தாலும் அவர்கள் பதில் அளிப்பதில்லை. அவ்வாறு பதில் அளித்தாலும், நாங்கள் பேச வேண்டிய இடத்தில் பேசிக் கொண்டிருக்கின்றோம். உள்ளால் (ரகசியமாக) காய்நகர்த்துகின்றோம் என்று சொல்வார்கள்.

பதில் சொல்ல முடியாதவர்கள் கடைசி வரையும் கைத்தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்கவே மாட்டார்கள். கையாலாகாத அரசியல்வாதிகளால் வேறு என்னதான் செய்ய முடியும்?

– ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி – 07.02.2021)