கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது – பிரதமர்

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால்  மாணவர்களின்  கற்றலுக்கு பாதிப்பை ஏற்படுத்த இடமளிக்க முடியாது. அடிப்படை வசதிகளற்ற பாடசாலைகள் குறித்து விடேச கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலவச கல்வி சேவையினை மேம்படுத்த அரசாங்கம்  உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஹோமாகம-மஹிந்த ராஜபக்ஷ  கல்லூரியின் 10ஆவது வருட நிறைவு விழா நிகழ்வில் காணொளி ஊடாக கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், நெருக்கடியான சவால் மிக்க சூழ்நிலையில் ஹோமாகம – மஹிந்த ராஜபக்ஷ கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டது. நாட்டில் உள்ள பாடசாலைகள் அனைத்தையும் தரமுயர்த்துவது எமது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக காணப்பட்டது. ஆட்சியில் இருந்த காலத்தில் கல்வித்துறையை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

ஹோமாகம – மஹிந்த ராஜபக்ஷ கல்லூரி நிறுவப்பட்டு குறுகிய காலத்தில் கல்வி மற்றும் வெளிக்கள துறையில் முன்னேறி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இலவச கல்வி மேம்மேலும் குறுகிய காலத்தில் மேம்பட்டுள்ளமை மகிழ்ச்சிக்குரியது. பாடசாலையின் 10 ஆவது வருட நிறைவினையொட்டி வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

மேலும், பாடசாலைகளில் சுகாதார பாதுகாப்பு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிள்ளைகளை பாதுகாப்பான முறையில் பாடசாலைக்கு அனுப்பி வைக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உண்டு. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது என்றார்.