நாம் களவெடுத்து, போதைப் பொருள் கடத்தி சிறைக்கு செல்லவில்லை – ரஞ்சன் ராமநாயக்க

களவெடுத்ததாலோ அல்லது போதைப் பொருட்களை விற்பனை செய்ததாலோ தான் சிறைக்கு செல்லவில்லை எனவும், கசப்பான உண்மைகளை பேசியதால் தான் சிறையிலடைக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

நீதிமன்றை ரஞ்சன் ராமநாயக்க அவமதித்துள்ளதாக கூறி 4 வருட கடூழிய சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் விதித்து தீர்ப்பளித்த பின்னர், நீதிமன்றிலிருந்து சிறைச்சாலை பஸ் வண்டிக்கு அழைத்து செல்லும் போது,  ஊடகவியலாளர்களுக்கும், அங்கிருந்த ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், ஆதரவாளர்களை நோக்கியும் அவர் இந்த விடயங்களை தெரிவித்தார்.

கையில் விலங்குடன், சிறைச்சாலைகள் காவலர்கள், பொலிஸாரின் பாதுகாப்புடன் உயர் நீதிமன்ற கட்டிட தொகுதியிலிருந்து பிரதான நுழைவாயில் வரை ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலை பஸ் வண்டியை நோக்கி  அழைத்து செல்லப்பட்டார்.

“நான் கூறிய எதனையும் மீளப் பெறப் போவதில்லை. அவர்கள் உண்மையிலேயே கள்வர்கள்.  கள்வர்கள் தொடர்பில் வெளிப்படுத்தியமைக்காக என்னை சிறையிலடைக்கின்றனர். நான் எதனையும்  மீளப் பெறப் போவதும் இல்லை. மன்னிப்பு கேட்கப் போவதுமில்லை.   ஐந்து சதமேனும் நான் களவாடவில்லை. எனக்கு கிடைத்த பணம், எனது சம்பளம்,  கொடுப்பனவுகளை நான் மக்களுக்கே பகிர்ந்தேன். அரிசி வழங்கினேன்.   மக்களுக்கு அரிசி வழங்கச் சென்றதால் 4 மில்லியன் ரூபா கிடைத்தது. அதில் இரண்டு மில்லியன் ரூபாவையே பகிர முடிந்தது. 2 மில்லியன் மீதமுள்ளது.

 பணத்தை பகிரும் போது என்னை சிறையிலடைத்துள்ளனர். பயப்பட வேண்டாம் இது 4 வருடங்கள் மட்டுமே. மீண்டும்  வருவேன்

நாம் களவெடுத்து, போதைப் பொருள் கடத்தி சிறைக்கு செல்லவில்லை. நான் அரசாங்கத்திடம் கூறுகின்றேன்…. பிள்ளையானை விடுவித்தது போன்று துமிந்த சில்வாவையும் வெளியே விடுங்கள்.  போதைப் பொருள் காரர்கள் தொடர்பில் கூறியதாலேயே என்னை சிறையிலடைக்கின்றனர்.  எனக்கு பயமில்லை . நான் தனித்தவன்.

கொன்றாலும் பயப்பட மாட்டேன். எப்போதும் கசப்பான உண்மைகளை பேசுவேன். மன்னிப்பு கேட்கப் போவதுமில்லை.

போதைப் பொருள் விற்கவில்லை. களவெடுக்கவில்லை. எதனோல் கடத்தவில்லை. அவற்றை செய்தவர்கள் தொடர்பில் கூறியதால் என்னை சிறையிலடைக்கின்றனர்” என தெரிவித்தார்.

இதனையடுத்து அவர் சிறைச்சாலை பஸ் வண்டியில் அழைத்து செல்லப்பட்டார்.

எவ்வாறாயினும் தற்போதைய கொவிட் 19 நிலைமை காரணமாக,  தண்டனை கைதியான ரஞ்சன் ராமநாயக்க நீர்கொழும்பு – பல்லன்சேன சிறைக் கைதிகள் புனர்வாழ்வு மையத்தில் உள்ள தனிமைபப்டுத்தல் நிலையத்துக்கு முதலில் அழைத்து செல்லப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் ( நிர்வாகம்) சந்தன ஏக்கநாயக்க கூறினார். தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்ததும் அவர் சிறைக்கு மாற்றப்படுவார் என அவர் சுட்டிக்காட்டினார்.