இறைவன் நமக்கு அளித்துள்ள அருட்கொடைகளை இல்லாதவர்களுக்கு அளித்து இறைவனின் திருப்தியை அடைவோம்!

{"source_sid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1607621095703","subsource":"done_button","uid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1607621095692","source":"other","origin":"gallery"}

ஒருவருக்கு வரும் நன்மைகள், சோதனைகள் அனைத்தும் இறைவனின் தரப்பில் இருந்து தான் வருகிறது. இறைவன் தரப்பில் இருந்து நமக்கு ஒரு நன்மை வரும்போது மகிழ்ச்சி அடையும் நாம், சோதனைகள் வரும்போது துவண்டு விடுகிறோம். அதுபோன்ற நிலையிலும் இறைவனின் சோதனைகளை ஏற்றுக்கொண்டு செயல்பட்டால், அந்த சோதனையில் இருந்து நம்மை மீட்பதோடு, நமது பொறுமைக்கு நற்கூலியும் இறைவன் தருவான். இதை உறுதிப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியை இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இது புகாரி நூலிலே இடம்பெற்றுள்ளது. அந்த நிகழ்வை நாமும் அறிந்துகொள்வோம், வாருங்கள்.
பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: ஒருவர் தொழு நோய் பிடித்தவராகவும், மற்றொருவர் வழுக்கைத் தலையராகவும், இன்னொருவர் குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடி, வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான்.
அவர் தொழு நோயாளியிடம் வந்து, ‘உனக்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று கேட்க அவர், ‘நல்ல நிறம், நல்ல தோல் தான் எனக்கு மிகவும் விருப்பமானவை’ என்று கூறினார்.
பிறகு, அவ்வானவர் குருடரிடம் சென்று, ‘உனக்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று கேட்டார். அவர், ‘அல்லாஹ் என் பார்வையை எனக்குத் திரும்பச் செய்வது விருப்பமானது’ என்று பதிலளித்தார். இறை அருளால் அவருக்கு பார்வை அளிக்கப்பட்டதோடு, அவர் விரும்பியபடி கருவுற்ற ஆடு ஒன்றும் கொடுக்கப்பட்டது.
இறைவன் அருளால் அவரவர்களுக்கு வழங்கப்பட்ட ஒட்டகம், மாடு, ஆடு போன்றவை பல்கிப்பெருகி மந்தையாக வளர்ந்தது. இதன் மூலம் அவர்கள் செல்வச்செழிப்பு மிக்கவர்களாக மாறினார்கள். இப்போது இறைவனின் சோதனை தொடங்கியது. வானவர் அவர்களிடம் அனுப்பப்பட்டார்.
அவ்வானவர் தொழு நோயாளியாய் இருந் தவரிடம் தம் பழைய தோற்றத்திலும் அமைப்பிலும் சென்று, ‘நான் ஓர் ஏழை மனிதன். உனக்கு அழகிய நிறத்தையும், செல்வத்தையும் கொடுத்த இறைவனின் பெயரால் உன்னிடம் ஓர் ஒட்டகத் தைக் கேட்கிறேன்’ என்று கூறினார்.
அதற்கு அந்த மனிதர், ‘என்னால் நீ கேட்டதைத் தர முடியாது’ என்றார்.
உடனே அவ்வானவர், ‘தொழு நோயாளியாக நீ இருக்கவில்லையா? நீ ஏழையாக இருக்கவில்லையா? பிறகு அல்லாஹ் உனக்கு செல்வத்தைக் கொடுத்தான் அல்லவா?’ என்று கேட்டதற்கு அவன், ‘இல்லையே; நான் இந்த அழகான நிறத்தையும். செல்வத்தையும் முன்னோர்களிடமிருந்து வாரிசாகப் பெற்றேன்’ என்று பதிலளித்தான்.
உடனே அவ்வானவர், ‘நீ கூறியது பொய்யாக இருந்தால், நீ முன்பு எப்படி இருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்’ என்று கூறினார்.
பிறகு வழுக்கைத் தலையரிடம் சென்று தொழு நோயாளியிடம் சொன்னதைப் போன்றே கூறினார். அவனும் முதலாமவன் அவருக்கு பதிலளித்தைப் போன்றே பதிலளித் தான். வானவரும், ‘நீ (உன் கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படியிருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்’ என்று கூறினார்.
இறுதியாக, குருடரிடம் சென்று தனது ஏழ்மையை போக்கிக்கொள்ள ஆடு ஒன்றைத் தரும்படி கேட்டார்.
குருடராயிருந்து பார்வை பெற்ற அந்த மனிதர் வானவரிடம், ‘நான் குருடனாகத் தான் இருந்தேன். அல்லாஹ் என் பார்வையைத் திருப்பித் தந்தான். நான் ஏழையாக இருந்தேன்; என்னைச் செல்வந்தனாக்கினான். எனவே, நீ விரும்புவதை எடுத்துக்கொள். இன்று நீ எடுக்கிற எந்தப் பொருளையும் திருப்பித் தரும்படி உன்னை சிரமப்படுத்த மாட்டேன்’ என்று கூறினார்.
உடனே அவ்வானவர், ‘உன் செல்வத்தை நீயே வைத்துக் கொள். இது உங்களைச் சோதிப்பதற்காகத் தான். அல்லாஹ் உன்னைக் குறித்து திருப்தியடைந்தான். உன் இரண்டு தோழர்கள் (தொழு நோயாளி மற்றும் வழுக்கைத் தலையன்) மீது கோபமுற்றான்’ என்று கூறினார்.
இந்த நிகழ்வின் மூலம் நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இறைவன் நமக்கு அளித்துள்ள அருட்கொடைகளை இல்லாதவர்களுக்கு அளித்து இறைவனின் திருப்தியை அடைந்து கொள்ளவேண்டும்.