சசிகலாவுக்கு விடுதலையில் சிறப்பு சலுகை இல்லை – கர்நாடக உள்துறை அமைச்சர் திட்டவட்டம்


சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலுள்ள சசிகலாவுக்கு விடுதலையில் சிறப்பு சலுகை இல்லை என கர்நாடக உள்துறை அமைச்சர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 கோடியே 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை சசிகலா சமீபத்தில் செலுத்தினார்.

சசிகலாவின் தண்டனை காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடைகிறது

இது தொடர்பில் பேசிய சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்துார்பாண்டியன், சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை செலுத்தப்பட்டதற்கான ரசீதை சிறைத் துறையில் வழங்கி உள்ளோம். மேலும் சசிகலா சிறையில் இருந்த நாட்களில் சலுகை விடுமுறை 129 நாட்கள் உள்ளன.

அவற்றை கழித்து உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என சிறை கண்காணிப்பாளரை சந்தித்து மனு அளித்துள்ளோம். அவர்களும் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளன என கூறியுள்ளார்.

இதனிடையில் இது தொடர்பில் கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலுள்ள சசிகலாவுக்கு விடுதலையில் சிறப்பு சலுகை இல்லை .

நீதிமன்ற தீர்ப்பின்படியும் சிறைச்சாலை விதியின் படியும் மட்டுமே சசிகலா விடுதலை செய்யப்படுவார் என கூறியுள்ளார்.

இதனால் சசிகலா விடுதலையில் தொடர்ந்து குழப்பம் நீடிப்பது தெரியவந்துள்ளது.