தொற்றுக்கு உள்ளானோரை விரோத உணர்வோடு சமூகம் நோக்குமானால் ஒருபோதும் எம்மால் வெற்றி கொள்ள முடியாது – அமைச்சர் டக்ளஸ்

{"subsource":"done_button","uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"],"source_sid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1603446202677"}


நாட்டையே மீண்டும் உலுக்கிக் கொண்டிருக்கின்ற கொவிட் – 19 தொற்றினை இந்த அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கைப் பொறுத்தவரையில் கடல் வழியாகவும் கொரோனா பரவும் அபாயம் காணப்படுன்றமையினால், கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், கொரோனா சிகிச்சை அளிப்பதற்கான விசேட மருத்துவமனை ஒன்றின் தேவை வடக்கிலே ஏற்பட்டுள்ளமையினால் அதுதொடர்பாக சுகாதார அமைச்சர் அவதானத்தில் கொள்வார் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கொவிட் – 19 தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், ´இந்தியாவில் இருந்து எல்லைத் தாண்டி கடற்றொழிலில் ஈடுபடுகின்ற கடற்றொழிலாளர்களுடன் எவ்விதமான தொடர்புகளையும் வைத்திருக்கக்கூடாது என எமது கடற்றொழிலாளர்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றோம். அதுமட்டுமல்லாது அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகின்ற ஒரு சில கடற்றொழில் முறைமைகளையும் தற்காலிகமாகத் தடை செய்துள்ளோம்.

அதேபோன்று, அண்மையில் எமது பேலியகொட மத்திய மீன் விற்பனை சந்தையிலும் வர்த்தகர்கள் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் காரணமாக சந்தையை தற்காலிகமாக மூடியிருக்கின்றோம்.

எனினும், தற்போது நாட்டில் மீன் அறுவடைகள் அதிகமான காலம் என்பதால், கடற்றொழிலாளர்களை பாதிப்படைய விடாமல், அவர்களது அறுவடைகளை எமது மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் மூலமாக நியாயமான விலையில் கொள்வனவு செய்வதற்கும் நுகர்வோருக்கு இலகுவாகவும் நியாய விலையிலும் கிடைக்கச் செய்வதற்குமான ஏற்பாடுகளையும் களஞ்சியப்படுத்தும் வசதிகளையும் முன்னெடுத்து வருகின்றோம்” என்று தெரிவித்தார்.

மேலும், நாட்டில் ஒரு பக்கம் கொரோனா தொற்று பரவலாக அதிகரித்து வருகின்ற நிலையில், மறுபக்கத்தில் டெங்கு நோயும் தனது கைவரிசையைக் காட்டி வருவதையும் சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் டெங்கின் தாக்கமும் அதிகரித்துக் காணப்படுவதால், இதனைக் கட்டுப்படுத்துவது குறித்தும் அதிக அவதானங்களை செலுத்த வேண்டியுள்ளதையும் இங்கு வலியுறுத்தினார்.

அத்துடன், கொரோனா தொற்றின் அறிகுறிகள் கொண்டோர் மற்றும் தொற்றுக்கு உள்ளானோரை விரோத உணர்வோடு சமூகம் நோக்குமானால், இந்த தொற்றினை ஒருபோதும் எம்மால் வெற்றி கொள்ள முடியாது. எனவே, தொற்றாளர்களை மனிதாபிமானக் கண் கொண்டு அணுகுவதற்கும் உரிய சிகிச்சைகளிற்கு உட்படுத்துவதற்கும் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் கொவிட் – 19 தொடர்பான விவாதம் இன்று (23) நடைபெற்ற நிலையில் கடற்றொழில் அமைச்சர் மேற்குறிப்பிட்ட வியங்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.